‘ஒன்றும் செய்யாத’ டிபிகேஎல்-லுக்கு ரிம2.44பில்லியன் பட்ஜெட் ஏன்?

dbklபெரும்பாலான  முக்கிய  வேலைகளை  வெளியாருக்குக்  கொடுத்து  விடும்  கோலாலும்பூர்  மாநகராட்சி  மன்ற (டிபிகேஎல்)த்துக்கு  சிலாங்கூரைவிட  பெரிய  பட்ஜெட்  எதற்கு  எனக்  கேட்கிறார்  செகாம்புட்  எம்பி  லிம்  லிப்  எங்.

“டிபிகேஎல்  2015-க்கு ரிம2.44பில்லியன்  பட்ஜெட்டைக்  கொண்டிருப்பது  ஏன்  என்பது  புரியவில்லை. கோலாலும்பூரை  விட  3.2 மடங்கு  மக்கள்தொகையைக்  கொண்ட  சிலாங்கூரின்  பட்ஜெட் ரிம2.42 பில்லியன்தான்”, என்றாரவர்.

பரப்பளவில்  சிலாங்கூர்  கூட்டரசுப் பிரதேசத்தைவிட  33 மடங்கு  பெரியது.

பெரும்பாலான  வேலைகளைச்  செய்யும்  பொறுப்பு  வெளியாரிடம்  ஒப்படைக்கப்பட்டிருப்பதைச்  சுட்டிக்காட்டிய  லிம்  மாநராட்சி  என்னதான்  செய்கிறது என வினவினார்.

கழிவகற்றும்  பணி  ஆலாம்  புளோராவிடம்  கொடுக்கப்பட்டுள்ளது. சாக்கடைகளின்  குத்தகை  இண்டா  வாட்டரிடம்,  பொதுக் கழிப்பிடங்களை  வீடமைப்பு,  ஊராட்சி  அமைச்சு கவனித்துக் கொள்கிறது.

“சாலைகளின்  பெயர்களை  மாற்றுவதும்  வீடற்றோருக்கு எதிராக நடவடிக்கை  எடுப்பதும்தான்  டிபிகேஎல்-இன்  வேலையா?”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  வினவினார்.