தமிழீழ விடுதலைக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தடைக் கற்களாக இருக்காதீர்கள் – காசி ஆனந்தன்

kasianathanஅண்மையில் சென்னைக்கு வருகை தந்த இலங்கையின் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேசுவரன் தெரிவித்திருக்கும் மூன்று கருத்துகள் பாராட்டுக்குரிய வகையில் அமைந்துள்ளன.

இலங்கையில் ஒற்றையாட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும். தமிழர்களுக்குச் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்.

13-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் பயனற்றது ஆகிய முதலமைச்சரின் மூன்று கருத்துகளையும் மனமார வரவேற்கலாம்.

வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் இக்கருத்துகளை அல்லது கோரிக்கைகளைச் சிங்கள இனவெறி அரசு புறம்தள்ளும் என்பதை நாம் அறிவோம்.

ஆனால், அத்தகைய மறுப்பும் – புறம் தள்ளுதலும் “தமிழீழம் ஒன்றே தீர்வு’ என்னும் தந்தை செல்வாவின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நோக்கிய – தமிழீழத்துக்காக உலக ஈழத் தமிழரிடையேயான வாக்கெடுப்பு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானத்தை நோக்கிய தமிழீழ மக்களின் விடுதலைப் பயணத்துக்குத் துணையாக அமையும் என்பது உறுதி.

முதலமைச்சர் தெரிவித்திருக்கும் வேறு சில கருத்துகள் முற்றிலும் தவறானவையாக உள்ளன.

தமிழீழத்தில் சிங்களவர்கள் திட்டமிட்டு முழுவீச்சில் குடியேற்றப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழர் தாயகம் தன் அடையாளத்தை இழந்துவிடும் என்று முதலமைச்சர் கூறி இருக்கிறார். இதில் யாருக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

ஆனால், சிங்களவர் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்குத் தமிழ்நாட்டில் ஏதிலிகளாக (அகதிகள்) வந்து தங்கியிருக்கும் ஓர் இலட்சம் ஈழத் தமிழர்களை இந்திய அரசு இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்னும் கோரிக்கையை, அவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் முன் வைத்திருக்கிறார்களே, இந்தக் கொடுமையைத்தான் நம்மால் ஏற்க முடியவில்லை.

தமிழர்கள் வெளியே போய்விட்டார்கள் என்பதால்தான் தமிழீழ மண்ணில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள் என்பதும், தமிழர்கள் திரும்பினால் அந்த மண் பாதுகாக்கப்படும் என்பதும் தவறான, பொருளற்ற கருத்து வைப்பாகும்.

சிங்கள இனவெறி அரசால், கொடிய கொலை வெறியாட்டத்தால், தமிழீழ மண்ணில் வாழ முடியாமல் வெளிநாடுகளை நோக்கி ஏதிலிகளாகத் தமிழர்கள் ஓடுவதற்கு முன்பு, தமிழீழ மக்கள் தங்கள் தாய் மண்ணில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில்தான் 1949-இல் சிங்களர் குடியேற்றம் தொடங்கப்பட்டது, தொடர்ந்தது.

உலகில் வாழும் 15 இலட்சம் தமிழீழ மக்களும் தாயகம் திரும்பினாலும் சிங்களர் குடியேற்றம் தொடர்ந்து நடைபெறவே செய்யும். சிங்களர் குடியேற்றம் சிங்கள இனவெறி அரசின் “தமிழின அழிப்புக் கொள்கை’யின் ஆணிவேர் என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏன் மறந்து போனார்களோ தெரியவில்லை.

தமிழீழம் தவிர்ந்த சிங்களவர்களின் தாயகமான “சிங்கள சிறீலங்காவில், வெறுமையான மிகப்பெரிய நிலப்பரப்பு உண்டு. சிங்களவர்களுக்குக் குடியிருப்பு வாய்ப்புத் தேவையெனில், அந்த நிலப்பரப்பில் சிங்களவர்களைக் குடியமர்த்தலாம். ஆனால், திட்டமிட்டுத் தமிழீழ மண்ணில் சிங்களவர்களைக் குடியேற்றுவது அப்பட்டமான “இன அழிப்பு’ நடவடிக்கையாகும்.

1949 முதல் 1976 வரை 27 ஆண்டுகள் தந்தை செல்வா சிங்களவர் குடியேற்றத்தை எதிர்த்து அற வழியில் போராடினார். அந்த 27 ஆண்டு காலத்தில் தமிழர்களின் 7,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தமிழீழ நிலப் பகுதியைச் சிங்களவர் குடியேற்றத்தால் தமிழர்கள் பறிகொடுக்க நேர்ந்தது.

1833-இல் கால்புறூக் ஆணைக்குழு அறிக்கையின்படி, தமிழீழத் தாயகம் 26,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்தது. 1901-இல் மாகாணப் பிரிவினை நிகழ்ந்தபோது, தமிழீழ நிலப்பரப்பில் 7,500 சதுர கிலோ மீட்டர் நிலம் சிங்கள சிறீலங்காவின் மாகாணங்களோடு இணைக்கப்பட்டது. அப்போதே தமிழர்கள் தங்கள் தாயகத்தில் 7,500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை இழந்து விட்டார்கள்.

வெள்ளைக்காரன் வெளியேறிய பின்பு, தந்தை செல்வாவின் அறப்போராட்ட காலத்தில் மேலும் 7,500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பைச் சிங்களவர் குடியேற்றத்தால் இழந்தோம். மொத்தமாக 15,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை இழந்து, 1833-இல் 26,500 சதுர கிலோ மீட்டர் தங்கள் நிலப்பரப்பாக இருந்த தமிழர்கள் 1976-இல் 11,500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை மட்டுமே தங்கள் தாயகமாகக் கொண்டு சிதைந்து தேய்ந்து சீரழிந்து நின்றார்கள்.

தந்தை செல்வாவின் அறப் போராட்டத்துக்கு சிங்கள இனவெறி அரசு பணியவில்லை. ஆனால், வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்துக்குப் பணிந்தது. பிரபாகரன் களத்தில் நின்ற 33 ஆண்டு (1976-2009) காலத்தில் தமிழீழத்தின் ஒரு அங்குல நிலத்தைக்கூடச் சிங்களர் குடியேற்றத்தால் பறித்தெடுக்க இயலாமல் போயிற்று.

இந்திய அரசும், உலக நாடுகளின் அரசுகளும், ஐ.நா. மன்றமும் புரிந்து கொள்ள வேண்டிய ஓர் உண்மை உண்டு. சிங்கள இனவெறி அரசு பேச்சுரைகளுக்கோ, உடன்படிக்கைகளுக்கோ என்றும் பணிவதில்லை.

நார்வேயுடன் இலங்கை அரசு செய்து கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கை என்ன ஆனது? செயவர்த்தனா – ராஜீவ் காந்தி உடன்படிக்கை என்ன ஆனது? புத்தன் சொன்னதையே கேட்காதவர்கள் மோடி சொல்வதைக் கேட்பார்கள், ஒபாமா சொல்வதைக் கேட்பார்கள் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும்.

“தமிழ்நாட்டில் ஈழத்தின் உண்மையான நிலைமை பற்றிப் பேசிவிட்டு இலங்கை போகிறேன். அங்கே எனக்கு என்ன நேருமோ தெரியாது’ என்று முதலமைச்சர் விக்னேசுவரன் தன் அச்சத்தைச் சென்னையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரு முதலமைச்சரே இலங்கை செல்லத் தயங்கும் நிலையில், சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டவர்களாகவோ, ஈடுபட்டவர்களுக்கு உதவியவர்களாகவோ, அவர்களின் உறவினர்களாகவோ உள்ளவர்கள் சிங்களப் படையினரால் தேடப்பட்ட நிலையில், ஏதிலிகளாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தமிழ்நாட்டில் வந்து தங்கியிருக்கிறார்கள். இவர்களை ஈழத்துக்குத் திருப்பி அனுப்புங்கள் என்று முதலமைச்சர் எப்படிக் கூறுகிறார் என்று தெரியவில்லை.

“தமிழீழ மண்ணில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’. “சிங்களப் படைகளின் ஒடுக்குமுறைக்கு நடுவில் வாழ்கிறோம்’. “எதையும் அந்த மண்ணில் நாங்கள் செய்ய முடியவில்லை’ என்றெல்லாம் சென்னையில் உரையாற்றிய முதலமைச்சர், இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் வாழும் ஏதிலிகளை எதற்காகத் தமிழீழ மண்ணுக்கு அழைக்கிறார்?

இன்றும், தமிழீழத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கும் கனடாவுக்கும் ஏதிலிகளாகத் தமிழர்கள் கப்பலேறிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையிலுமா தமிழ்நாட்டில் வாழும் ஈழ ஏதிலிகளைத் தமிழீழத்துக்கு அழைக்கிறீர்கள்?

அமைதியான சூழ்நிலை உருவாகும்வரை அந்நாட்டில் இருந்து வெளியேறிய ஏதிலிகளைத் திருப்பி அனுப்புவது நெருப்பில் இருந்து தப்பியவனை மீண்டும் நெருப்பில் தள்ளும் செயலேயாகும்.

இந்தியாவில் தங்கி இருக்கும் திபேத்திய ஏதிலிகளை திபேத்துக்குத் திருப்பி அனுப்பி விட்டீர்களா? இல்லையே.

குர்திஸ்தானில் இருந்து உலகெங்கும் ஏதிலிகளாக வாழும் குர்திஸ் ஏதிலிகள் அவர்கள் மண்ணுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்களா? இல்லையே.

வட மாகாண சபை முதலமைச்சரின் இன்னொரு கருத்து, தமிழ்நாட்டு ஈழ உணர்வாளர்கள் முடிவு எதையும் எடுக்கத் தகுதியற்றவர்கள் என்பதுபோல் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தமிழீழம் குறித்து உணர்ச்சி வசப்படக் கூடாது என்று கூறி இருக்கிறார் அவர்.

அன்றாடம் தமிழீழ மக்கள் கொல்லப்படும்போது, தமிழீழப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு இரையாகும்போது, தமிழீழ நிலம் சிங்களர் குடியேற்றத்தால் பறிக்கப்படும்போது, தமிழீழத் தேசிய இனம் சிங்கள இனவெறி அரசின் “இன அழிப்பு’ வெறிப் பாய்ச்சலைச் சந்திக்கும் போது தமிழ்நாட்டு மக்கள் உணர்ச்சி வசப்படக் கூடாது என்று கூறுவது சரியா?

அமெரிக்காவில் வாழ்ந்த அயர்லாந்து மக்கள் உணர்ச்சி வசப்பட்டுக் கொந்தளித்ததன் விளைவாகத்தான் பிரிட்டன் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும், அயர்லாந்து தனி நாடாக விடுதலை பெறவும் நேர்ந்தது என்பதை முதலமைச்சர் அறிவாரா?

தமிழ்நாட்டு மக்களின் “தமிழீழத்துக்காக உலகம் தழுவிய தமிழீழ மக்களிடையேயான வாக்கெடுப்பு’ என்னும் கருத்துச் சிங்கள அரசுக்குச் சினத்தை உண்டாக்கும் என்பதற்காக, தமிழ்நாட்டு மக்களின் இந்த உறுதிமிக்க முடிவையும், கருத்தையும் அவர்களின் “உணர்ச்சி கூடிய நடவடிக்கை’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், முதலமைச்சரும் கருதுவார்களானால் அவர்கள் தவறிழைக்கிறார்கள்.

தமிழீழ மக்களும், தமிழ்நாட்டு மக்களும், உலகத் தமிழர்களும் இலங்கைக்கு வெளியே தமிழீழ விடுதலைக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தடைக் கற்களாக இருக்காதீர்கள் எனப் பணிவுடன் வேண்டுகிறேன்.

– உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன்-

-http://www.pathivu.com

TAGS: