கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள நடவடிக்கை: பாரிக்கர்

கடல் பகுதியில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக மக்களவையில் கேள்விநேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேசுகையில், “பாகிஸ்தான், மியான்மர், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளின் கடற்பகுதியில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது’ என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து மனோகர் பாரிக்கர் தெரிவித்ததாவது:

இந்திய கடற்படையை நவீனப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய கடற்படையை வலிமைப்படுத்தும் வகையில், 6 நீர்முழ்கி கப்பல்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. மேலும் 6 நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்தியாவிடம் எத்தனை நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன என்பது குறித்து தெரிவிக்க இயலாது.

கப்பல்களை கட்டும் பணியில் எந்த தொய்வும் ஏற்படவில்லை. தொழில்நுட்ப கோளாறால் மட்டுமே சில தாமதம் ஏற்பட்டது. அதை சரி செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, குறுகிய கால தாமதத்தில் அந்தப் பணிகள் முடிந்துவிடும் என அரசிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பொதுத் துறை, தனியார் துறை கப்பல் கட்டும் தளங்களில், போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிகள் உள்பட கடற்படைக்குத் தேவையான அனைத்து விதமான கப்பல்களை கட்டுவதற்குத் தேவையான வசதிகளும் இருக்கின்றன. மாலேகான் டோக் லிமிடெட், கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ், கொச்சின் கப்பல் கட்டும் தளம் ஆகியவை விமானந்தாங்கி கப்பல், நீர்மூழ்கிகள், மிகப்பெரிய கப்பல்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதுபோல பிற கப்பல்கட்டும் தளங்களும், தனியார் கப்பல்கட்டும் தளங்களும், ரோந்து படகுகள், இழுவைக் கப்பல்கள், பெரிய விசைப்படகுகள், எண்ணெய் கப்பல்கள் உள்ளிட்ட கப்பல்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்தியாவில் உருவாக்கப்படும் கப்பல்களை அடிப்படையாகக் கொண்டே, கப்பற்படையை நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார் பாரிக்கர்.

 பாகிஸ்தான், சீனா அத்துமீறல்

நிகழ் ஆண்டில், இந்திய வான்பகுதிக்குள் பாகிஸ்தான், சீனா ஆகியவை 16 முறை அத்துமீறியதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் தெரிவித்திருப்பதாவது:

2012ஆம் ஆண்டு, இந்திய வான்பகுதிக்குள் பாகிஸ்தானும், சீனாவும் 6 முறை அத்துமீறின. 2013ஆம் ஆண்டில் 12 முறை அத்துமீறின. 2014ஆம் ஆண்டிலோ, இந்திய வான்பகுதிக்குள் 16 முறை அத்துமீறியுள்ளன என அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.dinamani.com

TAGS: