சிங்கள தேசம் வேறு தமிழ்த தேசம் வேறு என்பதனை வெளிப்படுத்த வேண்டும் – செல்வராஜா கஜேந்திரன்

kajendran”இருவரில் யார் வந்தால் எமது இன உரிமை பெறும் எமது செயற்பாடுகளுக்கு சர்வதேச மட்டத்தில் பயனுள்ள சூழ்நிலை தோன்றலாம் என்ற ஒரு கணிப்பு பற்றியதே” என்ற கேள்விக்கான எனது பதில் செல்வராஜா கஜேந்திரன்

யார் ஆட்சிக்கு வந்தாலும் பூகோள அரசியல் போட்டி தமிழ் மக்களுக்கு சாதகமாக மாறவேண்டுமாக இருந்தால் தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டிலும் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாணை வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் உறுதியாக இருக்க வேண்டும்.

அவ்வாறு உறுதியாக இருப்பதென்பது அந்த நிலைப்பாடுகளை ஏற்க மறுக்கும் ஆட்சியாளர்களை – இந்தியாவின் தேவைக்காகவோ அன்றி மேற்கின் தேவைக்காகவோ ஆதரிக்கும் நிலைப்பாடுகளை கைவிடவேண்டும்.

எதிர்காலத்திலும் மகிந்த நிச்சமாக மேற்கின் எதிரியாக இருப்பார் என்றோ அன்றி மைத்திரி எதிர்காலத்திலும் இந்தியாவின் நண்பராக தொடர்ந்தும் இருப்பார் என்றோ உறுதியாக எதிர்பார்க்க முடியாது. அவர்கள் எந்த நிலைப்பாடு எடுத்தாலும் எம்மை வழிநடத்துபவர்கள் நாமாக இருக்க வேண்டுமே தவிர இந்தியாவாகவோ மேற்கு நாடுகளாவோ சிங்கள ஆட்சியாளர்களாகவோ இருக்க கூடாது.

இல்லையேல் தானாக வரும் வாய்ப்புக்களை வலிந்து காலால் உதைந்து தள்ளுவதாகவே அமையும்.

உதாரணமாக இன்று சீன சார்பு ராஜபக்சேக்கள் ஆட்சியிலிருந்தனர் – சீன ஆதிக்கத்தை இலங்கையில் கட்டுப்படுத்த ஆட்சியாளர்களை மிரட்டிப் பணிய வைக்கும் நோக்கில் அமெரிக்க சார்பு மேற்குலகம் சர்வதேச விசாரணை என்ற ஒன்றினை கருவியாக கையில் எடுத்தது.

அவ்வாறான நிலைமை ஏற்பட்டதற்கான காரணம் கடந்த 2010 – 2014 மார்ச் வரை சீன சார்ப்புப் போக்கை கைவிட்டு மேற்கு சார்பு நிலைப்பாட்டை எடுப்பதற்காக வழங்கப்பட்ட சந்தற்பத்தில் ராஜபக்ச அரசு அதனைச் செய்ய மறுத்ததுடன் தொடர்ந்தும் சீனாசார்பு போக்கில் தீவிரம் காட்டியமையுமே காரணம்.

அதன் விளைவு சர்வதேச விசாரணை என்ற தீர்மானம் 2014 மார்ச்சில் எடுக்கப்பட்டது. அதன் பிரகாரம் செப்ரெம்பர் 01 தொடக்கம் ஒக்டோபர் 31 வரை போர்க்குற்ற சாட்சியங்கள் ஐ.நா விசாரணை குழுவினால் கோரப்பட்டது.

இது ராஜபக்ச சீனாவுடனான தனது அரசின் உறவை கட்டுப்படுத்த மறுத்ததன் விளைவால் ஏற்பட்ட ஒன்று மட்டுமே.

இவ்வாறு போர் குற்ற சாட்சியங்கள் ஐ.நாவால் கோரப்பட்டமை என்பது தமிழர்களுக்கு வாழ்நாளில் கிடைத்திருக்க முடியாத அரிய சந்தற்பகமாகும். இதனை தமிழ் மக்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலிந்து காலால் தள்ளி நாசமாக்கி ராஜபக்ச சகோதரர்களை காக்க முனைந்துள்ளது-

சாட்சியங்கள் அங்கு போதியளவு உள்ளது. இங்கிருந்து கொடுப்பது ஆபத்தானது. ஒரு விடயம்தொடர்பில் 10 பேர் கூறியவுடன் உண்மை என்று ஆகிவிடாது என்றெல்லாம் கூறி மக்கள் சாட்சியமளிக்கவிடாமல் தடுத்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

இன்படுகொலை தீர்மானத்தை மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப நிறைவேற்றப் பின்னடிப்பதும் இன அழிப்பு என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதனை தடுப்பதற்காக மட்டுமே.

அமெரிக்கா விரும்பினால் கூட மூடிமறைக்க முடியாளவுக்கு போதிய சாட்சியங்களை அளித்து போர்க்குற்றத்தை தாண்டி நடைபெற்றது இனப்படுகொலை என்ற நிலைப்பாட்டை உருவாக்கி அப் படுகொலைகளானது வெறுமனே ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் மட்டுமல்ல கடந்த 60 வருடங்களாக இடம்பெற்றுள்ளது என்பதனை நிரூபிப்பதற்கான வாய்ப்பாக அதனைப் பயன்படுத்தியிருக்கலாம்.

அவ்வாறு செய்து அன்று முதல் இன்று வரை ஆட்சியிலிருந்த அரசியல் தலைமைகளும் – சம்பந்தப்பட்ட நிர்வாகங்களிலும் முப்படை மற்றும் பொலிஸ் அதிகார மட்டங்களிலும் இருந்தவர்கள் தூக்கிற்கு செல்ல வேண்டும் என்ற அச்ச நிலையை உருவாக முயன்றிருக்க வேண்டும்.

58 கலவரம் தொடக்கம் ஆட்சி செய்தவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு அன்றிலிருந்து துணைநின்ற பொலிஸ் மற்றும் முப்படைகளில் கடமையாற்றிய முக்கியஸ்த்தர்களுக்கும் எதிராக இனப்படுகொலை அல்லது போர்க்குற்றச் சாட்டுக்களை சுமத்த ஏற்பாடுகளை செய்திருந்தால் ஒட்டுமொத்த நாடும் கலங்கியிருக்கும். பௌத்த இனவாத தளம் ஆட்டம் கண்டிருக்கும்.

அந்த இடத்தில் நின்று கொண்டு சிங்களத்துடன் பேரம் பேச முற்பட்டிருந்தால் – ஒருவர் கொடுக்க முற்பட மற்றவர் இனவாதம் பேசி குழப்ப முடியா நிலையை ஏற்படுத்தியிருக்கலாம் –
மாறாக அனைவரும் சேர்ந்து கொடுக்க வேண்டும் என்று பேச வேண்டிய நிலைக்கும் சிங்கள இனவாதத்தை தள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

அவ்வாறான நிலையில் ஒரு ஆட்சியாளர் தமிழர்களுடன் இணக்கப்பாட்டிற்கு வர முற்பட்டால் மற்றயவர்கள் இனவாதம் பேசி குழப்பியும் இருக்க முடியாது. இது தமிழ் மக்களுக்கு கைநழுவிச் சென்ற மீண்டுவராததொரு சந்தற்பம்.

எனவே நீங்கள் கேட்ட ”இருவரில் யார் வந்தால் எமது இன உரிமை பெறும் எமது செயற்பாடுகளுக்கு சர்வதேச மட்டத்தில் பயனுள்ள சூழ்நிலை தோன்றலாம் என்ற ஒரு கணிப்பு பற்றியதே” என்ற கேள்விக்கு நான் கூறும் பதில்

அவர்களில் யார் வரவேண்டும் வரக்கூடாதது என்று தீர்மானிப்பதற்கு முன்னர் – எங்களுக்கு வேண்டியதை ஏற்க மறுத்தால் தொடர்ந்து போராடுவோம் என்பதனை சிங்களத்திற்கும் சர்சதேசத்திற்கும் வெளிப்படுதும் முடிவை அறிவித்து சிங்கள தேசம் வேறு தமிழ்த தேசம் வேறு என்பதனை வெளிப்படுத்த வேண்டும். அதனை செய்ய விளையுங்கள்.

13 ஐ. தாண்டி(அதிகாரப்பகிர்வு) தீர்வு கொடுக்க ராஜபக்ச தயார் என்று அறிவிக்க ஒஸ்லோ அடிப்படையில் அதிகாரப் பகிர்வை ஏற்றுக் கொள்ள முடியுமென சம்பந்தன் அறிவிக்க – தலைவர் பிரபாகரன் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலேயே தீர்வு வேண்டும் அந்த அடிப்படையிலேயே பேச்சுக்களில் ஈடுபட முடியும் என்று உறுதியாகவிருந்தார்.

இந்நிலையில் அதிகாரப் பகிர்வு கொடுக்க சிங்கள மக்கள் தயார் அதனை ஏற்க தமிழ் மக்கள் (சம்பந்தன்) தயார். ஆனால் பிரபாகரன் சிங்கள் மக்கள் தரவிரும்பாத சுயநிர்ணய உரிமை கேட்டு குழப்புகிறார்,

ஆகவே அவரை படத்திலிருந்து அற்றும்வரை நடைமுறைச் சாத்தியமான தீர்வுக்கு இடமில்லை.

எனவே நடைமுறைச் சாத்தியமான 13பிளஸ் ஐ நடைமுறைப்படுத்த முதலில் புலிகள் அழிக்கப்படல் வேண்டும் என்ற கோசத்துடனேயே முள்ளிவாய்க்காலில் புலிகளும் லட்சம் மக்களும் அழிக்கப்பட்டனர்.

அந்த அழிவுக்கு அதிகாரப் பகிர்வை ஏற்கத்தயார் என்ற நிலைப்பாட்டை எடுத்ததன் மூலம் சம்பந்தன் தலைமையிலான இந்திய அடிமைகள் பூரணமாக துணை நின்றன.

இந்த உண்மை மக்களுக்கு தெரியாமலிருப்பதுதான் இன்றைய தடுமாற்றங்கள் அனைத்திற்கும் காரணம்.

-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்-

-http://www.pathivu.com

TAGS: