அம்னோ இளைஞர் தலைவர்மீது வழக்கு தொடுக்கப் போவதாக மிரட்டுகிறார் கைருடின்

khairidinபத்து  கவான்  அம்னோ  தொகுதி  துணைத்  தலைவர்  கைருடின்  அபு  ஹசன், பினாங்கு  அம்னோ  தலைவர்  ரபிஸால்  அப்துல்  ரகிம்மீது  வழக்கு  தொடுக்கப்போவதாக  எச்சரித்துள்ளார். பினாங்கு  அம்னோவைக்  குறை  சொன்னதிலிருந்து  முன்னவருக்கும்  அம்னோவுக்குமிடையில்  விரிசல்  விரிவடைந்து  வருகிறது.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  உருவாக்கிய  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன(1எம்டிபி)த்துக்கு  எதிராக  போலீஸ்  புகார்  செய்ததன்வழி  பிரபலமான  கைருடின்  அதன்  பிறகு  மலேசியாகினிக்கு  வழங்கிய  நேர்காணலில் பினாங்கு  அம்னோ  தலைமைத்துவத்தையும்  குறைகூறி  இருந்தார்.

சும்மா  இருக்குமா  பினாங்கு  அம்னோ? கைருடின்மீது  கண்டனக் கணைகளைப்  பாய்ச்சியது. கைருடின்  பினாங்கு  பக்கம்  அடிக்கடி  வருவதில்லை,  மாநில  அம்னோ  நிகழ்வுகளில்  கலந்துகொள்வதில்லை  என   ரபிஸால்  குற்றஞ்சாட்டினார்.

இதற்குப்  பதிலடியாக கைருடின், ரபிஸால் தனக்கு  எதிராக  மிகப்  பெரிய  அவதூறு  கூறியுள்ளார என்று  ஓர்  அறிக்கை விடுத்தார்.

ரபிஸால்  தம்  குற்றச்சாட்டைத்  திரும்பப்  பெற்றுக்கொண்டு ஏழு நாள்களில்  மன்னிப்பு  கேட்க  வேண்டும்  எனவும்  அவர்  கோரினார்.

“நான்  கோலாலும்பூரில்  வசிக்கிறேன். ஆனால், முடிந்தவரை  ஒவ்வொரு  வாரமும் என்  தொகுதிக்குத்  திரும்பிச்  செல்கிறேன்.

“முன்பு  பலருக்கு அவர்களின்  நிலப்  பிரச்னைகளைத்  தீர்த்து  வைத்துள்ளேன். என்ன,  மக்களுக்குச்  செய்யும்  உதவிகளை விளம்பரப்படுத்திக்  கொள்வதில்லை. அரசியலில்  எனக்கு  ஆசை  இல்லை. மக்களுக்குச்  சேவை  செய்வதே  என்  விருப்பம்”, என்றவர் வலியுறுத்தினார்.