பழனிவேல்: மஇகா தலைமையகத்தில் திரண்டிருந்தவர்களில் பெரும்பாலோர் என் ஆதரவாளர்கள்

palanivelகடந்த  வியாழக்கிழமை  மஇகா  தலைமையகத்தில்  திரண்டிருந்தவர்களில் “ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர்” தமக்கு  ஆதரவு  தெரிவிக்க  வந்தவர்கள்  என்கிறார்  மஇகா  தலைவர்  ஜி.பழனிவேல்.

அன்று அங்கு  பல  இடங்களிலும்  அவரைப்  பதவி  விலகச்  சொல்லும்  பதாதைகளைத்தான்  பார்க்க  முடிந்தது.  நூற்றுக்கணக்கானவரின் ‘பதவி விலகு’ முழக்கத்தைத்தான்  கேட்க  முடிந்தது.

ஆனால், பழனிவேல்,  கட்சி  மறு-தேர்தல்மீதான   அந்த  அவசர  மத்திய  செயலவைக்  கூட்டத்துக்கு  வந்திருந்த  மஇகா  கிளைத்  தலைவர்கள்,   மாநிலத்  தலைவர்கள்  அத்தனை  பேரும்  அவருக்கு  ஆதரவு  தெரிவித்ததாக  த  ஸ்டாரிடம்  கூறினார்.

“எங்கள்  கட்சி  வலிமையாக  உள்ளது. ஆயிரத்துக்கு  மேற்பட்டவர்கள்  எனக்கு  ஆதரவு  தெரிவிக்கவே  அங்கு  வந்திருந்தனர். மஇகா  கிளை  மற்றும்  மாநிலத்  தலைவர்கள்  எல்லாருமே  அங்கிருந்தனர்.

“ஒரு  சிறு  கும்பல்தான்  ரவுடித்தனத்திலும் காலித்தனத்திலும்  போக்கிரித்தனத்திலும்  ஈடுபட்டது.

“அவர்கள்  எங்களைச்  சீண்டிவிட  முயன்றார்கள். என்  ஆதரவாளர்களும்  பதிலடி  கொடுக்க  நினைத்தார்கள். ஆனால், அப்படி  எதுவும்  செய்யவில்லை. அமைதியாக  இருந்தார்கள்”, என்று  பழனிவேல்  கூறியதாக  அந்நாளேடு  அறிவித்துள்ளது.

கடந்த  ஆண்டு  மலாக்காவில்  தேர்தலில்  தோற்றுப்போனவர்கள்தாம் கட்சிக்குப்  “பிரச்னைகளை  உண்டுபண்ண”ப்  பார்க்கிறார்கள்  என்று  பழனிவேல்  கூறினார்.