காவிரி விவகாரம்: பிரதமருடன் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் சந்திப்பு

kaveriதமிழகத்தைச் சேர்ந்த டெல்டா மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்ட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினர்.

 

காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தைச் சேர்ந்த டெல்டா மாவட்ட விவசாயிகள், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தலைமையில் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், காவிரி பிரச்சனையில் நியாயமான தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தனர். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்தாகவும் தெரிவித்தனர்.

 

டி.ராஜா கூறுகையில், தமிழக மற்றும் கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்படாமல் ஒரு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும். கர்நாடக அரசு தன்னிலையில் நின்று புதிய அணை கட்டுவது என்று அறிவிப்பது தமிழ்நாட்டு விவசாயிகளை பாதிக்கும். அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பிரதமர் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்றார்.

-http://www.nakkheeran.in

TAGS: