பீனிக்ஸ் பறவை விக்ரம்! ஸ்பெஷல் தொகுப்பு

பீனிக்ஸ் பறவை விக்ரம்! ஸ்பெஷல் தொகுப்பு - Cineulagam

தமிழ் சினிமாவின் உச்சத்தை தொட என்றுமே அதிர்ஷ்டம் என்ற வார்த்தை போதாது, இதற்கு மேல் எங்கு கடின உழைப்பு இருக்கிறதோ அவர்களால் தான் உச்சத்தை தொட முடியும். அப்படிப்பட்ட ஒரு கலைஞன் தான் சீயான் விக்ரம்.

சினிமா பின்னணியில் இருந்து விக்ரம் வந்தாலும் தன்னை ஒரு நடிகனாக நிலை நிறுத்த அவர் மிகவும் சிரமப்பட்டார். ஆரம்ப காலத்தில் சில மலையாள படங்களில் தலையை காட்டி, பின் மீரா, புதிய மன்னர்கள் போன்ற ஒரு சில படங்களில் நடித்தார்.

ஆனால், இதில் எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை, இதனால் சினிமாவிற்கு பின் தன் சோகத்தை அடக்கி வைத்துக் கொண்டு ஒரு டப்பிங் ஆர்டிஸ்டாக வலம் வந்தார். ஏன் இன்று தமிழகமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அஜித்திற்கு முதல் படத்தில் டப்பிங் கொடுத்தது விக்ரம் தான்.

இது மட்டுமின்றி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், குருதிப்புனல், மின்சார கனவு, காதலன் போன்ற பல படங்களில் கதாநாயகர்களுக்கு குரலாக இருந்தவர். பின் இவரின் நிழல் பாலாவின் பார்வையில் விழ, சேதுவாக விக்ரம் மறுபிறவி எடுத்தார்.

இப்படத்தின் இவரின் நடிப்பாற்றலை கண்ட கோலிவுட், இப்படி ஒரு நடிகனையா நாம் துரத்தினோம் என்று தலை குனிந்தது. இதன் பின் இவர் நடித்த தில், காசி, ஜெமினி, தூள், சாமி, அந்நியன் என தொடர் வெற்றிகளுக்கு மட்டுமே சொந்தக்காரர் ஆனார்.

ஆனால், மீண்டும் பீமா, ராஜபாட்டை, டேவிட், தாண்டவம் என பல படங்களின் சறுக்கல் விக்ரமை கொஞ்சம் கீழே தள்ளியது. ஆனால், எந்த ஒரு இடத்திலும் தன் திறமை மீது உள்ள நம்பிக்கையை கைவிடாத விக்ரம் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் ஐ யாக அவதாரம் எடுத்தார்.

ஒரே படத்தில் 110 கிலோ, 70 கிலோ, 45 கிலோ என உடல் எடையை ஏற்றி, இறக்கி மெர்ஷலாக்கினார், இப்படம் இன்று வரை கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது, இருப்பினும் படத்தின் வசூல் ரூ 100 கோடியை தாண்டியுள்ளது.

படம் வருவதற்கு முன் ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பல பெயர்களை குறிப்பிட்டாலும், இப்படத்தின் வெற்றிக்கு ஒரே காரணம் விக்ரம், விக்ரம், விக்ரம் மட்டுமே. இவரின் இந்த வெற்றி பயணம் இன்று போல் எப்போதும் தொடர சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.

-http://www.cineulagam.com