தாக்குதலுக்குப் பிந்தைய “சார்லி ஹெப்டோ’: 70 லட்சம் பிரதிகள் வெளியீடு

france_001பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இந்த மாதம் 7-ஆம் தேதி பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான “சார்லி ஹெப்டோ’ வார இதழின் 70 லட்சமாவது பிரதி சனிக்கிழமை அச்சிடப்பட்டது.

இந்த இதழின் அட்டையில் முகமது நபியின் உருவத்துடன் கூடிய கேலிச் சித்திரம் மீண்டும் வெளியிடப்பட்டிருப்பதால் முஸ்லிம் சமூகத்தினரின் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ள நிலையிலும், பிரான்ஸில் விற்பனை செய்வதற்காக மட்டும் 63 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.

இது தவிர மேலும் 7 லட்சம் பிரதிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பயங்கரவாதத் தாக்குதலில் “சார்லி ஹெப்டோ’ அலுவலகத்திலிருந்த ஆசிரியர் குழுவினர், ஊழியர்கள் உள்பட 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, “உயிர்பிழைத்தோர் பதிப்பு’ எனப் பெயருடன் இந்த இதழ் கடந்த 14-ஆம் தேதி வெளியானது.

வழக்கமாக 60,000 பிரதிகள் அச்சிடப்பட்டு வந்த இந்த இதழ், தாக்குதலுக்குப் பிறகு லட்சக்கணக்கில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டதால் 10 லட்சம் பிரதிகள் அச்சிட இதன் விநியோகஸ்தரான எம்.எல்.பி. நிறுவனம் முடிவு செய்தது.

எனினும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இந்தப் பதிப்புக்கான தேவை அதிகரித்து வந்ததையடுத்து இந்த எண்ணிக்கையை 30 லட்சமாக அந்த நிறுவனம் உயர்த்தியது.

இந்த நிலையில், அச்சாகிய அனைத்துப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்து வருவதால், பிரதிகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரித்து வந்த எம்.எல்.பி., 70 லட்சமாவது பிரதியை சனிக்கிழமை வெளியிட்டது.

இந்தப் பதிப்பின் விற்பனை மேலும் உயரும் எனவும், இறுதி விற்பனை நிலவரம் இன்னும் பல வாரங்கள் கழித்தே தெரியவரும் எனவும் கூறப்படுகிறது.

பிரான்ûஸத் தவிர, அண்டை நாடான பெல்ஜியத்தில் இந்த இதழுக்கு மிக அதிக தேவை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-http://www.dinamani.com