இஸ்மா, ஆலய-எதிர்ப்பை மீண்டும் கிளப்பிவிட்டு ஆத்திரமூட்டியுள்ளது

barathiஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா),   சமூக   வலைத்தளத்தில்  கிள்ளான்  ஆலய-எதிர்ப்பு  விவகாரத்தை  மீண்டும்  கிளறிவிட்டிருப்பது  இந்து  சமூகத்தை  ஆத்திரமடைய  வைத்துள்ளது.

அந்த  வலச்சாரி  அமைப்பைத்  தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  விசாரிக்க வேண்டும்  என  மலேசிய  இந்தியர்  முற்போக்குச்  சங்கத்  தலைமைச்  செயலாளர்  எஸ்.பாரதிதாசன்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“எதற்காக  இஸ்மா  வேண்டுமென்றே  இந்துக்களை  ஆத்திரப்பட  வைக்கிறது?”, என்றவர்  வினவினார்.

இதன்மீது  செந்தூல்   மாவட்ட போலீஸ்  தலைமையகத்தில்  புகார்  செய்யப்போவதாக  பாரதிதாசன்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

கிள்ளான் சுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தைக் காண்பிக்கும்  2013ஆம் ஆண்டில்  தயாரிக்கப்பட்ட  காணொளியை  இஸ்மா மீண்டும் சமூக  வலைத்தளத்தில்  பதிவேற்றம்  செய்துள்ளது.

அந்தக்  காணொளியில், நிகழ்ச்சியுரையாளர்  சுந்தரராஜப்  பெருமாள்  ஆலயத்தைச்  சுற்றுலா  கவர்ச்சி  மையமாக்கும்  திட்டம்  இருப்பதாகவும்  அத்திட்டத்தால்   ஓர்  அரச  நகரம்  என்ற  கிள்ளானின்  மதிப்பும்  மலேசியா  ஒரு  இஸ்லாமிய  நாடு  என்ற  தோற்றமும்  கெடும்  என்று  கூறுகிறார்.