கிழக்கு உக்ரைன் நிலவரம்: ரஷிய அதிபர் புதினுடன் ஜெர்மனி பிரதமர் பேச்சு

Ethnolingusitic_map_of_ukraineகிழக்கு உக்ரைனில் நிலவி வரும் சண்டை குறித்து ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுடன் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் கவலை தெரிவித்தார்.

ரஷிய ஆதரவாளர்களான கிழக்கு உக்ரைனைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பரில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை அண்மையில் நிராகரித்தனர். இதையடுத்து, உக்ரைன் ராணுவத்தினருடனான சண்டை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

டொனெட்ஸ்க் விமான நிலையம் கிளர்ச்சியாளர்களின் முழுக் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த மரியுபோல் துறைமுகத்தைக் கைப்பற்ற நடைபெற்று வரும் மோதலில், குடியிருப்புப் பகுதியில் ராக்கெட் குண்டு வீசப்பட்டதில் 30 பேர் உயிரிழந்தனர்.

இது சர்வதேச அளவில் அதிர்ச்சி அலையை எழுப்பியது.

இதையடுத்து, சண்டையை நிறுத்தி மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி, கிளர்ச்சியாளர்களை ரஷியா வலியுறுத்த வேண்டும் என ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் கூறியுள்ளார்.

ரஷிய அதிபர் விளாதிமிர் புதினை அவர் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். கிளர்ச்சியாளர்களிடம் ரஷியாவுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, சண்டையை நிறுத்தச் செய்யும்படி கேட்டுக் கொள்ள வேண்டும் என்று புதினிடம் மெர்க்கெல் தெரிவித்தார்.

கிளர்ச்சியாளர்கள், கடந்த ஆண்டு செப்டம்பரில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் அடிப்படையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என மெர்க்கெல் கூறினார்.

பின்னர், உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோவை ஜெர்மனி பிரதமர் மெர்க்கெல் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, துறைமுக நகரமான மரியுபோலில் நடைபெற்ற குண்டு வீச்சு, அமைதி ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும், அதனை நியாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்குமாறு பொரொஷென்கோவிடம் ஜெர்மனி பிரதமர் மெர்க்கெல் தெரிவித்தார்.

-http://www.dinamani.com