பிகேஆர்: ஜாஹிட் மவுனம் காக்க விரும்பினால் பதவி விலகுவது நல்லது

pkrஉள்துறை  அமைச்சர்  ஜாஹிட்  ஹமிடி,   அமெரிக்காவில்    கைது  செய்யப்பட்ட  சூதாட்ட  மன்னன்  என்று  கூறப்படும்  பால்  புவாவுக்கு  ஆதரவுக்  கடிதம்  எழுதியது  பற்றித்  தொடர்ந்து  மவுனம்  காக்க  விரும்பினால்  அவர்  பதவி  விலகுவதே  நல்லது  என்று  பிகேஆர்  கூறியது.

கடந்த  ஆண்டு  லாஸ்  வேகாஸில்  கைது  செய்யப்பட்ட  புவாவுடன்  உள்ள  உறவு  பற்றிய  கேள்விகளுக்கு  அஹ்மட்  ஜாஹிட்  இதுவரை  பதில்  சொல்லவில்லை. புவா கடந்த  ஆண்டு பிரேசில்  உலகக்  கிண்ணக்  கால்பந்து  போட்டியின்போது  இணையவழி  சூதாட்ட  நடவடிக்கையை  மேற்கொண்டதாக  குற்றச்சாட்டை  எதிர்நோக்கியுள்ளார்

புவா 2004-இல்  சரவாக்,  மிரியில்  கைது  செய்யப்பட்டுக்  குற்றவாளி  எனத்  தீர்ப்பளிக்கப்பட்ட  ஒருவர்  என்ற தகவலை மலேசியாகினி நேற்று  வெளியிட்டிருந்தது.

புவாவுக்கு   ஆதரவாக  எழுதிய  கடிதத்தில்  அஹமட்  ஜாஹிட்  அவர்  தேசிய பாதுகாப்பு  விவகாரங்களில்  உதவியாக  இருந்தார்  என்று  குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அது  பற்றி  அவர்  மேல்விவரம்  தெரிவிக்க  மறுக்கிறார். கேட்டால்  அதிகாரத்துவ  இரகசிய  சட்டத்தைக்  காண்பிக்கிறார்.

“இவ்விவகாரத்தில்  ஜாஹிட்   விளக்கமளிக்க முன்வராதது  அவர்மீதுள்ள  நம்பிக்கையைக்  கெடுக்கிறது. எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்குப்  பதிலளிக்க  அவர்  முன்வரவேண்டும்”, என பிகேஆர்  தொடர்பு  இயக்குனர்  பாஹ்மி   பட்சில்  கூறினார்.