7 நாட்கள் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்திருக்கிறேன்: எஸ்.ஏ.சந்திரசேகரன்

‘இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியுள்ள படம் டூரிங் டாக்கீஸ்.

இப்படத்தில் அபி சரவணன், அஸ்வின் குமார், சுமலட்சுமி, காயத்ரி, சாய் கோபி, இன்பராஜ், தேனி பிரகாஷ் என புதுமுகங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளையராஜா இதற்கு இசையமைக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அப்படத்திற்குப் பிறகு ‘டூரிங் டாக்கிஸ்’ படம் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைகின்றனர். படம் வருகிற 30-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இதனிடையே டூரிங் டாக்கிஸ் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது. விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும் போது பலவற்றை வெளிப்படையாகப் பேசினார். அதில் நான் ஒவ்வொரு படத்தையும் இயக்கும் போது அதை என்னுடைய முதல் படமாக நினைத்து தான் இயக்குவேன். இதுவரை நான் எத்தனையோ படங்களை இயக்கியிருந்தாலும் அப்படங்களில் கிடைக்காத ஒரு மன திருப்தி இந்த ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தில் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில். நான் ரொமான்ஸ் செய்வதாக எழுதுகிறார்கள். ஆனால் நான் 75 வயது கிழவனாகத்தான் வருகிறேன். 90ல் என் மகன் நடிக்க ஆசைப்பட்ட போது விஜய்யை நடிக்க வைக்கும்படி எல்லா முன்னணி இயக்குநர்களிடமும் கேட்டேன். ஆனால் யாரும் இயக்க முன்வரவில்லை.

வேறு வழியில்லை ஏன் நாமே தயாரித்து இயக்கக் கூடாது என்று முடிவு செய்து தயாரிப்பாளரானேன். இப்போது கூட அன்று நான் ராஜகுமாரி தியேட்டர் ப்ளாட்பாரத்தில் படுத்துக் கிடந்தது நினைவுக்கு வருகிறது. பட்டினியாக கிடந்து 7 நாட்கள் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழவும் செய்திருக்கிறேன். இன்று எனக்கு கடவுள் எல்லாமும் கொடுத்திருக்கிறார். துக்கம் மகிழ்ச்சி இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ள பழகி இருக்கிறேன் என்றார். டூரிங் டாக்கீஸ் படத்தில் முதல் பாதியில் ஒரு கதையையும் இரண்டாம் பாதியில் ஒரு கதையையும் சொல்லும் யுக்தியை தமிழில முதன் முறையாக கொண்டு வந்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

-http://www.dinamani.com