மஇகா தலைமையகத்தில் பரபரப்பு: உதவித் தலைவர் வாசலில் தடுக்கப்பட்டார்

saravananமஇகா  எதிர்நோக்கும்  நெருக்கடி  குறித்து செய்தியாளர்  கூட்டமொன்றை  நடத்துவதற்காகக்   கட்சித்  தலைமையகம்  சென்றார்  உதவித்  தலைவர்  எம்.சரவணன். ஆனால், அவர்  உள்ளே  செல்ல  முடியாதபடி சுமார் 20 “குண்டர்கள்” அவரைத்  தடுத்து  நிறுத்த  முயன்றார்கள்.

தாங்கள் தலைமையகக்  கட்டிடத்தைப்  பாதுகாக்க  தலைவர் ஜி.பழனிவேல்,  தலைமைச்  செயலாளர்  ஜி. குமார் அம்மான்  ஆகியோரால்  நியமிக்கப்பட்டவர்கள்  என்று  அவர்கள்  கூறிக்கொண்டனர்.

இதனைக்  கேட்டதும்  சரவணனுடன்  சென்ற  சுமார்  200   பேர்  ஆத்திரமடைந்து  சத்தமிட்டனர். “பழனிவேல்  சூடா  மாபோக்( பழனிவேலுக்குப் போதை ஏறி  விட்டது”, என்றவர்கள்  கூச்சலிட்டனர்.

சுமார்  ஒரு  மணி  நேரம்  அந்த  இடம்  அமளிதுமளிப்பட்டது. பின்னர்  போலீசார்  கூட்டத்தைக்  கலைத்து  அமைதியை  நிலைநாட்டினர்.

ஆனால், அத்துடன்  முடியவில்லை.

சரவணன் அதன்  பின்னர்  செய்தியாளர்  கூட்டம்  நடத்தியபோது  இரண்டு  தொலைபேசி  அழைப்புகள்  மூலமாக  அவருக்குக்  கொலை மிரட்டல்கள்  வந்தன.

சரவணன்  அனைவரும்  கேட்பதற்காக  தொலைபேசி  உரையாடலை ஒலிபெருக்கியில்  போட்டு  விட்டார்.

அழைத்தவர்  மலாயில்  பேசினார். சரவணனைக்  கொல்லப்போவதாக  மிரட்டினார்.

“அப்படியானால்  இங்கே  வாங்க. நீங்கள்  என்னைச்  சுடுவதைச்  செய்தியாளர்களும்  பார்க்க  விரும்புகிறார்கள்”, என்றார்  சரவணன்.