இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட 2000 ஏக்கர் நிலம்: இன்றைய நிலை என்ன?

kula-280x300-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஜனவரி 28, 2014.

மஇகா விற்கு சொந்தமான  சொத்துக்களின் தற்போதைய  நிலைமை இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட இந்த 2 ஆயிரம் ஏக்கர்  நிலத்துக்கும் வந்து  சேரக் கூடாது.

ச.சாமி வேலு, எம். சரவணன், வீரசிங்கம், டாக்டர் சுப்ரமணியம் மற்றும் ஜி.பழனிவேல் ஆகியோரில் சரவணன், டாக்டர் சுப்ரமணியம் மற்றும் பழனிவேல் ஆகியோரைத் தவிர மற்ற இருவரும் அரசியலில் எந்த பதவியிலும் இல்லை. மஇகாவிற்கு சொந்தமாக 40 கட்டிடங்கள்,  70  நிலங்கள் இருப்பதாகவும் பத்திரிகை வாயிலாக அறிகிறோம்.  மேலும் மஇகா பெயரால் அமைக்கப் பெற்ற  எம் ஐ இ டி யும்  , ஏய்ம்ட்ஸ் பல்கலைகழகமும் தனி ஒருவரின்  சொத்தாக உள்ளதாக நம்பப்படுகிறது.

 

அறங்காவலர்களின் நியமனம் எந்த அடிப்படையில் செய்யப்பட்டது?

 

இச்சொத்துக்கள் காலப்போக்கில்  இந்த அரங்காவலர்களுக்கோ அல்லது அவர்களின் வாரிசுகளுக்கோ போய்ச் சேராது என்ற சாத்தியத்தை யாராலும் மறுக்க முடியுமா ?

ஒரு காலக்கட்டத்தில் அவர்கள்  அரசியலில் இருக்கும் போது  சமுதாய நலன் கருதி  சமுதாயத்தின் பேரில்  அரசாங்கத்தின் அணுசரணையினால் வாங்கப்பட்டது அல்லது  கொடுக்கப்பட்டது. இவர்கள் அரசியலை விட்டும் மஇகாவின் முக்கிய பதவிகளில் இருந்தும் விலகிய பின்னரும் இச்சொத்துக்கள் இன்னும் அவர்கள்  பெயரிலேயே இருப்பது என்ன நியாயம்?

இச்சொத்துக்கள் நடப்பில் இருக்கும் சமுதாயத் தலைவர்களின் பெயர்களில் அல்லவா மாற்றப்பட்டிருக்க வேண்டும்?

இப்பொழுது பெரிய பிரச்சனையாக உருவாகி இருக்கும் மஇகாவின் சொத்துக்கள் இந்த அடிப்படையில்தான் புதிய அறங்காவலர்கள்  நியமிக்கப்படாமையால்  ஏற்பட்டுள்ளது.

2000 ஏக்கர் நிலத்திற்கு ஒன்பது பேர் பேரா மாநில இந்திய மாணவர்  கல்வி மேம்பாட்டு அறவாரியத்தின்  அறங்காவலர்களாக இருக்கிறார்கள்:

1.    சாகாதேவன் – தேசிய நில நிதி கூட்டுறவு சங்கப் பிரதிநிதி.
2.    டாக்டர் என் எஸ் நாஜேந்திரன் – தலைவர், மலேசியத் தமிழப்பள்ளிகளின்  எதிர்கால  திட்ட வரைவு  குழுவின் பிரதிநிதி.
3.    முனியாண்டி – தலைவர் பேரா மாநில  தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மன்றத்தின் பிரதிநிதி
4.   மாரிமுத்து – பேரா மநில தமிழ்ப் பள்ளிகளுக்கான வாரியச் சங்கப் பிரதிநிதி.
5.    கே.நாச்சிமுத்து –ஸ்ரீ முருகன் நிலைய பிரதிநிதி
6.   .தில்லை நாதன் – திறன் பயிற்சி கழக பிரதிநிதி
7.    இளங்கோ –பேரா மாநில அரசாங்கத்தின் பிரதிநிதி
8.    குமரன் – எந்த அமைப்பிலும் இல்லை
9.    வீரசிங்கம் –எந்த அமைப்பிலும் இல்லை

மாரிமுத்து, தில்லைநாதன் மற்றும் நாச்சிமுத்து இவர்களின் நியமனத்தை  நான் கேள்வி கேட்கவில்லை. ஆனால்  அந்த நியமனம்  அவர்கள் சார்ந்த அமைப்பின் ஒப்புதலின் பெயரில் செய்யப்பட்டதா? அதற்கு அவர்கள்  சார்ந்த  இயக்கங்களின் துணைச் சட்டங்கள் வகை செய்கின்றனவா போன்ற கேள்விகள்  எழுகின்றன.

இவை எல்லாம்  முறையாகச் செய்யப்படவேண்டும் என்பதே  நமது வேண்டுகோள். பின்னாளில் சட்டப் பிரச்சனைகள் எற்படாமல் இருப்பதற்கு ஏதுவாக அவர்களைச் சார்ந்த இயக்கங்களின்  சட்டங்கள்  திருத்தம் செய்யப்படவேண்டும். இப்படி செய்யவில்லை என்றால் அந்த நியமனங்கள் அவர்களின் தனிப்பட்ட நியமனமாகவே கருதப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் .இதன் விளைவாக அச்சொத்துக்கள் சமுதாயச்
சொத்துக்கள் என்றில்லாமல் அவர்களின் சொந்த சொத்துக்களாகவே பின்னாளில் மாறக்கூடிய வாய்புக்கள் இருகின்றன..

வீரசிங்கம் பேரா மாநில முதல்வருக்கு ஆலோசகராக  இருந்த போது அந்த நிலம் வழங்கப்பட்டது. ஆரம்ப வேலைகளை அவர் செய்தார் என்பது மட்டுமே உண்மை. அவருக்கு பதில் இளங்கோ இப்பொழுது இருக்கும் பொழுது  வீரசிங்கத்திற்கு  இன்னும் என்ன வேலை ? இதே கேள்விதான்   குமரனுக்கும். இவர்களுக்குப் பின் யார் இவர்களை  பிரதிநிதிக்கப்போகிறார்கள ? எந்த சட்டத்தின் அடிப்படையில் இது அமையப் போகிறது?

இந்த இரண்டு ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு  தார்மீக பங்குதாரர்கள் பேரா மநில இந்திய மக்கள். பங்குதாரர்களுக்கு  அவர்களின்  சொத்து எப்படி நிர்வகிக்கப்படுகிறது என்று தெரியவேண்டியது அவர்களின் உரிமை. இதுவரையில் இந்த அறவாரியம்  ஒரு தடவைக் கூட  பேரா மாநில இந்திய மாணவர்களை பிரதிநிதிக்கும்  பெற்றோர் ஆசிரியர் சங்கம், தலைமை ஆசிரியர்  மன்றம், பள்ளி வாரியங்கள் போன்றவைகளிடம் விளக்கம் அளிக்கவில்லை.

 

வருமுன் காப்போம்

 

தெரிய வேண்டியவர்களுக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது வாரிய இயக்குனர்கள் தங்களின் சமுதாய பொறுப்பைத்  தட்டிக்கழிப்பதாக கருதப்படும்..

மீண்டும் மீண்டும் நான் கேட்கும் கேள்விகள் கீழ்க்கண்டவைதான்:
•    வாரிய இயக்குனர்கள் சுழல் முறையில் இருக்கப் போகின்றார்களா அல்லது நிரந்தர உறுபினர்களா?kula
•    சுழல் முறை என்றால் எத்தனை ஆண்டுகளுக்கு ?
•    நிரந்தரம் என்றால் , இது சட்டத்திற்கு உடன்பட்டதா?
•    இந்த வாரிய உறுப்பினர்களை  எந்த சட்ட திட்டங்கள்  கட்டுப்படுத்துகின்றன ?

இன்று  இருக்கும் அறங்காவலர்கள்  எல்லோரும் முதுமைச் சாபத்தினின்றும்  விலக்கு அளிக்கப்பட்டவர்கள் அல்ல. இவர்களுக்குப் பின் இவர்களின் வாரிசுகள் அதனை சொந்தம் கொண்டாடினால் நாம் என்ன செய்யப் போகிறோம் ? அப்படி ஒரு நிலைமை ஏற்பாட்டால் இந்திய சமூகத்திற்கு அது மேலும் ஒரு பட்டை நாமம் என்று  சொல்லவும் வேண்டுமோ! அந்த நேரத்தில் தலைவர்கள் ஏமாற்றிவிட்டர்கள் என்று
நொந்துக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. வருமுன் காப்போம் என்ற நோக்குடன் இப்பொழுதே களம் இறங்க வேண்டும்.

பேரா மாநில இந்திய மாணவர்  கல்வி மேம்பாட்டு அறவாரியத்தின் சட்ட திட்டங்கள்  சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதன் உள்ளடக்கம் மக்களின் பரிசீலனைக்கு உட்படுத்தப் படவேண்டும் அதனை மக்கள்  தெரிந்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.  இதனை இயக்குனர்கள்  விளக்குவார்களா ?

இந்திய மாணவர்களுக்காகவே  கொடுக்கப்பட்ட நிலம் என்றென்றைக்கும் அது  சட்ட ரீதியாக அவர்களுக்காகவே இருக்க வேண்டியது உறுதிச் செய்யப்பட வேண்டும்.

இதை  சமுதாய நலன் கருதி வழக்கறிஞர் என்ற முறையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் அதன் சட்ட திட்டங்களைத் தெரிந்து கொள்வதற்கு வாரிய இயக்குனர்கள் எனக்கு விளக்கம் கொடுக்க  தயாராக இருகின்றார்களா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.