மகாதிர்: அரசாங்கச் செலவுகளை வெளியார் தணிக்கை செய்வது நல்லது

auditமுன்னாள்  பிரதமர்  மகாதிர்  முகம்மட்,  கூட்டரசு  அரசாங்கம்  அதன்  செலவுகளைக்  கண்காணிக்க வெளிக் கணக்காய்வாளர்களை அமர்த்திக்கொள்வதே  நல்லது  என்கிறார்.

இன்று  அவரது  வலைப்பதிவில்  இவ்வாறு  குறிப்பிட்ட  மகாதிர், மலேசியாவிடம்  இப்போது  பெரும் பணம்  இருக்கிறது  என்பதுடன்  கூட்டரசு  அரசாங்கமும்   அதன்  நிறுவனங்களும்  நிறையவே   செலவிடுகின்றன  என்றார்.

“கூட்டரசு  நில  மேம்பாட்டு  நிர்வாகம் (பெல்டா) , இபிஎப்,  தாபோங்  ஹாஜி  போன்றவை  பில்லியன்  கணக்கில்  செலவிட்டு  வெளிநாடுகளில்  சொத்து  வாங்குவதையும்  மலேசியா  ஏர்போர்ட்ஸ்  ஹோல்டிங் பெர்ஹாட், பெட்ரோனாஸ்  போன்றவை  பெரும்  பணத்தை   விமான  நிலைய பங்குகளிலும்  கெனடா  முதலிய நாடுகளின்  தொழில்களிலும்  முதலீடு  செய்துள்ளன”.

இந்நிலையில் இவற்றின்  கணக்குகளைத்  தணிக்கை  செய்யும்  பொறுப்பை  வெளியார்  நிறுவனத்திடம்  ஒப்படைப்பது  நல்லது. அந்தத்  தணிக்கை  நிறுவனத்தையும்  இந்நிறுவனங்கள்  நியமிக்கக்  கூடாது. இவற்றுடன்  தொடர்பில்லாத ஒரு  சுயேச்சை  அமைப்புத்தான்  நியமிக்க வேண்டும்  என்றாரவர்.

“புகழ்பெற்ற  கணக்காய்வாளர்களைக்  கொண்டு  முறையாக  கணக்குத்  தணிக்கை  செய்வதன்வழி   பொதுப்பணம்  சரியாக  நிர்வகிக்கப்படுவதை  உறுதிப்படுத்த  முடியும்.  அரசாங்கத்தின்   பெயரையும்  காக்க  முடியும்”, என  மகாதிர்  கூறினார்.