ஜ.நா விசாரணை மூலமே தீர்வு! உள்ளக விசாரணை வேண்டாமென்கிறார் சுரேஸ்!!

suresh_premachanran_1.pngஎக்காரணம் கொண்டும் ஜ.நாவினது போர்க்குற்ற விசாரணைகளை பின்போடுவதையோ அல்லது கைவிடுவதையோ தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென தெரிவித்துள்ளார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுரேஸ்பிறேமச்சந்திரன்.

யாழ்ப்பாணத்தினில் இன்று புதன்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் இது பற்றி மேலும் தெரிவிக்கையில்:-

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் மீண்டும் உள்ளக விசாரணை பற்றியே பேசி வருகின்றனர். ஆனால் உள்ளக விசாரணை தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டதொன்று. கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுக்கள் அவர்களது செயற்பாடுகள் என்பவை மக்களால் நிராகரிக்கப்பட்டதொன்றாகும்.

அவை மீதான நம்பிக்கையீனமே தமிழ் மக்களினை சர்வதேச விசாரணையை விரும்ப காரணமாகியிருந்தது. அதற்கு புலம்பெயர் உறவுகள் மற்றும் கூட்டமைப்பு கடுமையாக பாடுபட்டிருந்தது. பல சந்திப்புக்கள் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் முழு முயற்சியினை எடுத்திருந்தன.

இந்நிலையில் அடுத்த மாதம் ஜ.நா கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் அரச தரப்பை சேர்ந்தவர்கள் விசாரணை பிற்போடப்படலாமெனவும் அல்லது கைவிடப்படலாமெனவும் கூறி வருகின்றனர்.

எமது மக்களை பொறுத்தவரை ஜ.நா விசாரணையினை மூலமே நல்லதொரு தீர்வும் நீதியும் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.ஆனால் அது பொய்த்துப்போக கூடாது. அதனால் அமெரிக்கா உள்ளிட்ட எமது தரப்புக்களிற்கு ஆதரவாக குரல் எழுப்பிய நாடுகள் கவனமெடுத்து நல்லதொரு தீர்வை பெற்றுத்தரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே அண்மையில் ஜெனீவாவிற்கு விஜயம் செய்யவுள்ள தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் ஜ.நா விசாரணையினை பிற்போடும் அரச தரப்பின் முயற்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றதே என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் இதனை தமிழரசுக்கட்சியிடமே கேட்கவேண்டுமென தெரிவித்தார்.

எனினும் தான் அறிந்தவரையில் அவ்வாறு எதுவும் நடப்பதாக தெரியவில்லையென தெரிவித்த அவர் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தின் கீழேயே இனப்பிரச்சினைக்கான தீர்விற்கான பேச்சுக்கள் நடக்கவேண்டுமன வலியுறுத்திவருவதையும் சுட்டிக்காட்டினார்.

-http://www.pathivu.com

TAGS: