கவுரவக்கொலைகளுக்கு எதிரான மாநாடு

Ria Munk on her Deathbed, Gustav Klimt (1912), Oil on canvasஇந்தியாவில் கவுரவக்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதைத் தடுக்க தனியாக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இல்லையென்றால் இதை தடுக்க முடியாது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகரத்.

புதுக்கோட்டையில் அக்கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற கவுரவக்கொலைகளுக்கு எதிரான மாநாட்டில் மேலும் அவர் பேசியது.

கவுரவக்கொலை என்பது  தானாக நடப்பதில்லை. மாறாக,  இது சந்தர்ப்பவாத சாதிய அரசியல் வாதிகளின் சதியாகும்.   இது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் பல மாநிலங்களில் இதை வைத்தே கட்டப்பஞ்சாயத்து செய்யப்படுகிறது.  சாதி மற்றும் மதத்தை மையமாகக்கொண்டு வாக்கு கேட்கும் பழக்கத்தை இடதுசாரிகள் அல்லாத கட்சிகள் செய்கிறது.

இத்தகைய அவலநிலைகளை தடுப்பதையே எங்களது கொள்கைகளில் ஒன்றென கூறிக்கொள்ளும்  திமுக,அதிமுக-வினரோ தற்போது மவுனம் சாதிக்கிறார்கள்.  அதே நிலையில் இதற்கெல்லாம் இத்தகைய கட்சிகள் மவுனம் சாதித்தாலும் ஒருவருக்கொருவர் செய்த ஊழலுக்கு மட்டும் வாய் திறக்கிறார்கள்.

சாதி, தீண்டாமை, சாதிய பாகுபாடெல்லாம் இந்தியாவுக்குப் பிடித்துள்ள சாபக்கேடாகும். ஆகவே, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும், முற்போக்கான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் சாதிய  முறையை ஒழிக்காமல் இவற்றைப் பெற இயலாது.

கவுரவக்கொலைகள்  குறித்து அரசோ, காவல் துறையினரோ கண்டுகொள்வதில்லை. ஆகையால், இது அரசின் கண்ணில்படாத குற்றமாக உள்ளது. கவுரக்கொலைகளை தடுக்க தனியாக சட்டம் கொண்டுவர வேண்டுமென்பது அவசியமாக உள்ளது  அதிலும், காதலர்களை பிரிக்கும் முயற்சி யில் ஈடுபடும் காவல்துறையினர், அரசியல் வாதிகளுக்கு தண்டனை கொடுக்கும் அளவுக்கு வலுவான சட்டமாக  இருக்க வேண்டும்.   அதற்கு நாம் தொடர்ந்து போராட வேண்டு மென்றார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ’’தேர்தல் களத்தில் வேட்பாளர்களின் வரவு செலவு கணக்கை கண்காணிப்பதுபோல வேட்பாளர்களின் கட்சிகள் சார்பில்  செல விடப்படும் தொகையையும் கண்காணிக்க வேண்டும். 100  நாள் வேலை நிறுத்தம்,  தானிய ஒதுக்கீடு குறைப்பு   போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மத்திய அரசால் சாதாரண மக்களுக்கு எவ்வித பலனும் இல்லை.  மோடியின் மேக் இன் இந்தியா எனும் தவறான கொள்கை மேக் இன் யூஎஸ்ஏ-வாக மாறப்போகிறது’’ என்றார்.

மாநாட்டில்   கவுரவக் கொலைகளால்  பாதிப்புக்குள்ளானோர்  பேசினர். மேலும்,  கட்சியின்  மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநிலக்  குழு உறுப்பினர்  எம். சின்னத்துரை,  மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர், மாநில நிர்வாகிகள்  பி. சுகந்தி,   சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலர்  எஸ். கவிவர்மன் உள்ளிட்டோர் பேசினர்.

-http://www.nakkheeran.in
      – இரா.பகத்சிங்
TAGS: