எம்எச்370 ஒரு ‘சதி’ என்ற டிவிட்டர் பதிவால் போலீஸ் தலைவர் ஆத்திரம்

twitடிவிட்டரில் மலேசிய  விமான  நிறுவனமான எம்எச்370  பற்றிப்  பதிவிட்டிருக்கும்  ஒரு  பதிவாளர்மீது  ஆத்திரமடைந்துள்ளார்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்.

அவரை  அடையாளம்  கண்டு  விசாரிக்குமாறு  அவர்  போலீஸ்  சைபர் குற்றப்  பிரிவுக்கு  உத்தரவிட்டுள்ளார்.

எம்எச்370  விமானப்  பயணிகளின்   குடும்பத்தாருக்கு  அனுதாபம் தெரிவித்து  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  டிவிட்டரில்  இட்டிருந்த  பதிவுக்கு   எதிர்வினையாற்றியிருந்த @ollie_mollie என்பார் “…அது  ஒரு  விபத்தல்ல, சதி”, என்று  குறிப்பிட்டிருந்ததுதான் காலிட்டின்  ஆத்திரத்துக்குக்  காரணம்.

அந்த  டிவிட்டர்  பயனரின் பதிவு “கெட்ட நோக்கம்  கொண்டது” என்றும்  “சினம் கொள்ள  வைக்கிறது”  என்றும் காலிட்  மலேசியாகினிக்கு  அனுப்பிய  குறுஞ்செய்தியில் கூறினார்.

“நாங்கள்   குடும்பத்தாருக்கு  ஆறுதல்  கூற  முயன்று  கொண்டிருக்கிறோம்.   உங்களுக்கு எம்எச்370-க்கு என்னவாயிற்று  என்று  தெரியாவிட்டால் வாயை  மூடிக் கொண்டிருக்க  வேண்டும்.  மடத்தனமாக  உளறி  வைக்கக்கூடாது”, என்று  காலிட்  கூறினார்.

இவ்விவகாரத்தை  விசாரிக்கும்  பொறுப்பை  போலீஸ்  எம்சிஎம்சி-இடம்  ஒப்படைத்திருப்பதாக  தெரிகிறது.

இதனிடையே.  இதை  எழுதும்  நேரத்தில்  குறிப்பிட்ட  டிவிட்டர் பதிவும் நீக்கப்பட்டிருக்கிறது.