நூல் வெளியீடு: துயரார்ந்த அனாதைகள் – மலேசிய இந்தியர்கள்

Book launch Tamilசுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆய்வாளர் நீலகண்ட ஐயர் மலாயாவில் உள்ள இந்தியர்கள் துயரார்ந்த சமூகமாக உருவாக்கம் காண்பார்கள் என்றார். தொழிலாளர்களாக மட்டுமே காணி நிலம் கூட இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட அவர்களை இந்தியா அந்நியப்படுத்தியதோடு மலாயாவும் அவர்களை ஓரவஞ்சனையுடன் நோக்கியதே அதற்கான காரணமாகும்.

அது இன்றும் எதிரொலிக்கிறது. ஒரு சிறுபான்மை சமூகமாக வாழும் இந்தியர்கள் காலனித்துவம் விட்டுச்சென்ற இனவாதமும்  மதவாதமும் கொண்ட அரசியலால் பாதிப்படைந்து, நாட்டின் ஒட்டு மொத்த அரசியலிலும் பொருளாதாரத்திலும் பின்தள்ளப்பட்டு, ஓர்  ஓரங்கட்டப்பட்ட சமூகமாக உருவாகி வருகிறார்கள்.

இந்த நூலில் முனைவர் கார்ல் வடிவேலன் பெல்லா இந்தியர்களின் நிலைமையை, காலனித்துவத்தில் தொழிலாளர்களாக வந்த காலம் தொட்டு புதிய நவீன மலேசியா வரையில், ஒரு முழுமையான கண்ணோட்டத்தில் காட்டுகிறார்.

இன்றைய மலேசியா உருவாக்கம் காண இந்தியர்கள் ஆற்றிய பங்கினையும், அதன் பின்னணியில் அவர்கள் அடைந்த பாதிப்புகளையும் ஒப்பிடுகிறார்.

அண்மைய காலங்களில் உண்டான இந்தியர்களின் எழுச்சி அரசியல் விழிப்புணர்ச்சியோடு ஒரு புதிய நம்பிக்கையைக் கொண்டிருப்பினும், இனவாத அடிப்படையில் உள்ள அரசமைப்பு முறை இந்தியர்களுக்குத் தேவையான தீர்வைத் தர இயலாது என்கிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்த ஆய்வாளர்.

Coverமொத்தம் 500-க்கும் அதிகமான பக்கங்களை கொண்ட இந்நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. Tragic Orphans – Indians in Malaysia என்ற இந்நூலை அறிமுகம் செய்து வெளியிடும் நிகழ்வில் முனைவர் லிம் டெக் கீ, முனைவர் எஸ். நாகராஜன், வழக்கறிஞர் கா. ஆறுமுகம் மற்றும் ஜானகிராமன் ஆகியோர் உரையாற்றுவார்கள். முனைவர் கார்ல் வடிவேலன் அவர்கள் சிறப்புரையாற்றுவார்.

கே.எஸ். சாந்து (1969) மற்றும் எஸ். அரசரத்தினம் (1970)  போன்ற ஆய்வாளர்கள் இந்தியர்களின் நிலையை ஆய்வு செய்த முன்னோடிகள் ஆவர். அவர்களைப் போன்றோர்களுக்கு அடுத்தபடியாக சுமார் நாற்பது வருட இடைவெளிக்கு பிறகு, கார்ல் அவர்களின் ஆய்வு ஒரு வெற்றிடத்தை நிரப்புவதாக உள்ளது.

செம்பருத்தி.காம் ஏற்று நடத்தும் இந்த நூல் வெளியீடு 16.2.2015-இல் மாலை மணி 7.30க்கு கோலாலம்பூர் விஸ்மா துன் சம்பந்தன் அரங்கத்தில் நடைபெறும். நிகழ்வு ஆங்கிலம் – தமிழ் என இரு மொழிகளிலும் நடைபெறும்.