“நான் சரணடையவே மாட்டேன்”

 

பொதுவாக மனிதன் ஒரு சூரையாடும் விலங்கு (Generally, man is a predatory animal). ஒருவனை ஒருவன் சூறையாடுவதும், அதை எதிர்த்துப் Anwardpm4போராடுவதும் மனித இனத்தின் வரலாறு – உலக வரலாறு. சூறையாடுபவர்களை, அக்கிரமக்காரர்களை, ஆதிக்கவாதிகளை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்துள்ளன. அவ்வாறான போராட்டங்களில் ஒன்று மோகனதாஸ் கரம்சந் காந்தி பிரிட்டீஷ் பேரரசை எதிர்த்து இந்தியாவில் நடத்திய போராட்டம்.

 

நீதிபதி எழுந்து நின்றார்

 

பிரிட்டீஷ் இந்திய அரசு காந்தியை கைது செய்து நிந்தனைச் சட்டம் பிரிவு 124-4 இன் கீழ் குற்றம் சாட்டி நீதிமன்றத்தில் நிறுத்தியது. மார்ச் 18, 1922 இல் காந்தி நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். காந்தி நீதிமன்றத்தினுள் நுழைந்ததும் அங்கு இருந்த 122 க்கு மேற்பட்டோரும் காந்திக்கு மரியாதை தெரிவிக்கும் பொருட்டு எழுந்து நின்றனர். பிரிட்டீஷ் பேரரசின் சட்டத்தை மீறியதற்காக குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றத்திலேயே மரியாதை!

நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரியாதை தெரிவிக்க எழுந்து நின்றவர்களில் ஒருவர் காந்திக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க நியமிக்கப்பட்ட மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி சி.எம்.புரூம்பீல்டு!

gandhiகுற்றச்சாட்டுக்கு எதிரான வாதத்தை காந்தி அறிக்கையாக நீதிமன்றத்தில் வாசித்தார். அதன் பின்னர், நீதிபதி புரூம்பீல்டு, காந்திக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்தீர்ப்பை ஏற்றுக்கொண்ட காந்தி, நீதிபதிக்கு நன்றி கூறினார்!

வரலாற்று பெருமைமிக்க இச்சம்பவம் பற்றி விளக்கம் அளித்த பக்கிங்ஹாம் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் “உண்னையான போராளியின் முன் நீதி தேவதையும் கூட வணங்கி நிற்பாள்” என்றார்.

93 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு முன் எழுந்து நின்றார்.

 

நீதிபதிகள் செவிமடுத்தனர்

 

இன்னொரு போராட்டப் பெருமகன் நெல்சன் மண்டேலா தென்னாப்ரிக்க அரசாங்கத்தை எதிர்த்து போராடியவர். அவருக்கு எதிராக தென்னாப்ரிக்க அரசாங்கம் தொடர்ந்த வழக்கில் பிரிடோரியா உச்ச நீதிமன்றம் 1964 ஆம் ஆண்டில் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

nelsonm1தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்னர், நெல்சன் மண்டேலா அந்த நீதிமன்ற நீதிபதிகளின் முன்  நீண்டதோர் அறிக்கையை வாசித்தார். நீதிபதிகள் மண்டேலாவின் அறிக்கையை முழுவதையும் செவிமடுத்தனர்.

நெல்சன் மண்டேலா அவரது அறிக்கையின் இறுதியில் கூறுகிறார், “During my lifetime I have dedicated myself to this struggle of the African people. I have fought against white domination, and I have fought against black domination. I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. It is an ideal which I hope to live for and to achieve. But if needs be, it is an ideal for which I am prepared to die.”

வெள்ளையர் இனவாத தென்னாப்பிரிக்க நீதிபதிகளின் முன் நெல்சன் மண்டேலா தமது இலட்சியத்தை அடைய தாம் உயிர் துறக்கவும் தயார் என்று அறிவித்தார். அப்போர் வீரனின் சவாலை அந்த நீதிபதிகள் செவிமடுத்தனர். 27 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பின்னர் நெல்சன் மண்டேலா அவரது இலட்சியத்தை அடைவதில் வெற்றி பெற்றார்.

 

நீதிபதிகள் வெளியேறினர்

 

நமது நாட்டில் இன்றைய எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அவரது வாழ்நாளின் பெரும் பகுதியை போராட்டத்தில் கழித்துள்ளார். பல்கலைக்கழக மாணவராக இருந்த காலத்திலிருந்து போராட்டவாதியாக இருந்த அன்வார் இப்ராகிம் இன்று சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பதவி வகித்த அன்வாரை அவரது கட்சியினரே கட்சியிலிருந்தும் அரசாங்கப் பதவியிலிருந்தும் அகற்றினர். எதிரணியை உருவாக்கி போராடிய அவர் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை சுமத்தினர், தண்டனை அளித்தனர்.

இறுதியாக, பெப்ரவரி 10, 2015 இல் பெடரல் உச்சமன்றம் அன்வாருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்திருந்த ஐந்தாண்டு சிறை தண்டனையை நிலைநிறுத்தியது.

அன்வார் இப்ராகிம் குற்றவாளிதான் என்று பெடரல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அறிவித்து தண்டனையை விதிப்பதற்கு முன்பு குற்றவாளி ஏதாவது கூற விரும்புகிறாரா என்று வினவினார்.

குற்றவாளி அன்வார் இப்ராகிம் குற்றவாளிக் கூண்டிலிருந்து பேசத் தொடங்கினார். பேச்சை நிறுத்தும்படி அன்வாருக்கு கூறப்பட்டது. cjஅன்வார் தொடர்ந்து பேசினார். நீதிபதிகள் அவர்களுடைய இருக்கைகளிலிருந்து எழுந்து அன்வாருக்கு மரியாதை தெரிவிக்கும் பொருட்டு நிற்கவில்லை, வெளியேறினர்.

93 ஆண்டுகளுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முன் நீதிபதி எழுந்து நின்றார். 51 ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்க நீதிபதிகள் குற்றவளி எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் வெள்ளையர் ஆட்சிக்கு சவால் விடுத்த அறிக்கையை செவிமடுத்தனர். இன்று நமது நாட்டு நீதிபதிகள் நமது நாட்டு தலைவர் ஒருவரின் அறிக்கையை செவிமடுக்காமல் வெளியேறினர். இது முறையான செயலா?

 

குற்றம் புரிந்தவன் கொற்றவனேயானாலும் குற்றம் குற்றம்தானே. அன்வார் இப்ராகிம் சுமத்திய குற்றச்சாட்டு என்ன? குற்றவாளி கூண்டிலிருந்து அன்வார் இப்ராகிம் ஆற்றிய உரை:

 

“நான் இந்த அருவருக்கத்தக்க குற்றச்சாட்டில் எனது குற்றமின்மையை வலியுறுத்துகிறேன் –  இச்சம்பவம் நடக்கவே இல்லை. இது ஒரு முழுமையான வைப்புக்கட்டு – இது எனது அரசியல் பயணத்திற்கு முடிவு கட்டுவதற்கான அரசியல் சதியிலிருந்து தோன்றியது.

 

இச்சம்பவம் எவ்வகையிலும் நடக்கவே இல்லை என்று இந்த வழக்கின் தொடக்கத்திலிருந்து எனது வழக்குரைஞர் முன்வைத்த வாதத்திற்கு நீங்கள் முறையான முக்கியத்துவம் அளிக்கவில்லை.

 

பண்டமாற்று வியாபாரம் செய்துள்ளீர்

 

நான் தொடர்ந்து பேச முடியும். ஆனால், இன்று நான் உங்களுடைய அறிக்கையை பார்க்கையில் அது பயனற்றதாகி விடும் – மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நான் குற்றவாளியாக்கப்பட்டதைப் போல் நான் மீண்டும் குற்றவாளியாக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இங்கு மட்டும் நாம் ஓர் எட்டு-நாள் விசாரணை என்ற போலி தோற்றத்தை நடத்தினோம்.

 

நீங்கள் உங்களுடைய தீர்ப்பை அளித்த வெகு சில நிமிடங்களுக்குள், தண்டனை அறிவிக்கப்படாததற்கு முன்னதாகவே, பிரதமர் அலுவலகம் எப்படி உங்களுடைய தீர்ப்பு மீது ஒரு முழுமையான, எழுத்துப்பூர்வமான அறிக்கையை  வெளியிட முடிந்தது. இது எதேச்சையாக நடந்த ஒன்றல்ல.

 

அரசியல் எஜமானர்களின் கட்டளைகளுக்கு பணிந்ததின் வழி நீங்கள்  நீதிபரிபாலன சுதந்திரம் மற்றும் நேர்மை ஆகியவற்றை கொலை செய்த குற்றத்தில் பங்காளிகள் ஆகியுள்ளீர். நீங்கள் உங்களுடைய ஆன்மாவை பேய்களிடம் விற்று விட்டீர். பொருளாதார இலாபத்திற்காகவும், சுகபோகத்திற்காகவும், பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவும் நீங்கள் உங்களுடைய மனச்சாட்சியை பண்டமாற்று வியாபாரம் செய்துள்ளீர்.

 

அநீதியின் புழுங்கிய நாற்றம்

 

கடந்த கால தவறுகளைத் திருத்தி, நீதித்துறையை களங்கமற்றதாக நிலைப்படுத்தி, எதிர்கால சந்ததியினருக்காக உங்களின் பெயர்களை நீதியின் உண்மையான பாதுகாவலர்கள் எனச் செதுக்கி – உங்களை ஈடேற்றிக்கொள்ள உங்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு இருந்தது.

 

yrsaycrediblecourtஆனால், மாறாக நீங்கள் இருளை நாடியுள்ளீர். உங்களுடைய நன்னெறியையும் மன உருத்தலையும் பொய்ம்மை மற்றும் திருக்குமருக்கு வாதம் என்ற கடலில் மூழ்கடித்துள்ளீர். நீங்கள் அழுக்கிலும் அழுக்குற்ற நிலையிலும் புரளுகின்றீர் என்பதையும், உங்களுடைய அநீதியின் புழுங்கிய நாற்றம் தவறாக அழைக்கப்படும் இந்த நீதி அரசமாளிகையின்  ஒவ்வொரு மூலையிலும், பிளவிலும் ஊடுருவியுள்ளது என்பதையும் நீங்கள் அறியமாட்டீர்கள். நான் உங்கள் அனைவருக்குமாக இரங்குகிறேன்.

 

ஆம். நீங்கள் என் மீது தீர்ப்பு அளித்துள்ளீர் – நான், மீண்டும் மூன்றாவது தடவையாக, சிறைக்கூடம் செல்வேன். ஆனால் இதை நிச்சயமென நம்புங்கள்: என் தலை நிமிர்ந்து நிற்கும். ஒளி என் மீது பிரகாசிக்கிறது.

 

படைத்தவருக்கு பதில் கூறி ஆக வேண்டும்

 

ஆனால், நீங்கள் அவமானப்படுவீர், ஏனென்றால் வரலாறு உங்களை மனித இனத்தின் மிகப் பெரிய கோழைகள் என்று தீர்ப்பளிக்கும். நீதித்துறையின் உச்சமட்ட அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் நீங்கள் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து அரசியல் எஜமானர்களுக்கு கீழ்மகன்களாக ஆகியுள்ளீர்.

 

சட்டம் பயிலும் மாணவர்களும் சட்ட இயல் பேராசிரியர்களும் உங்களுடைய தீர்ப்புகளை ஆய்வு செய்வார்கள். உங்களின் விவாதத்தையும் தீர்ப்பையும் அவர்கள் கூறு போட்டு ஆய்வு செய்யும் போது, உங்களுடைய நம்பகத்தன்மை மற்றும் நேர்மை கந்தலாக கிழிக்கப்படும். நீதியை  திசைதிருப்புவதற்காகவே நீதிமன்ற அதிகாரத்திற்குரிய மேலங்கியை அணிந்திருந்த மோசடிக்காரர்கள் என்று அம்பலப்படுத்தப்படுவீர்.

மறந்து விடாதீர். நாம் அனைவரும் செய்ய வேண்டியதைப் போல், நீங்களும் உங்களைப் படைத்தவருக்கு பதில் கூற வேண்டும். அவ்வளவு பயபக்தியுடன் கோட்பாடுகளை நிலைநிறுத்துவோம் என்று நீங்கள் எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்தை ஏன் மீறினீர் என்பதற்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்

 

உங்களுடைய நீதிமன்றத்திற்குள் வரும் மக்கள் உங்களை வணங்கி உங்களை “எனது பிரபுக்களே” என்று கூறுகின்றனர். ஆனால், நீங்களும் கூட ஒரு நாள் உங்களுடைய பிரபுக்கு பதில் கூறியாக வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? அதற்குள் நீங்கள் தலையைத் தாழ்த்துவதற்கும் விழுந்து வணங்குவதற்கும் மேலானவற்றை செய்து நீங்கள் ஏன் வேண்டுமென்றே சூரா அன்- நிஸ்ஸாவில் கூறப்பட்டுள்ள அல்லாவின் கட்டளையை மீறினீர் என்பதை நியாயப்படுத்த வேண்டும், வாக்கியம் 58.

 

சரணடையவே மாட்டேன்

 

சிறைக்குப் போவதை நான் இந்நாட்டு மக்களுக்காகச் செய்யும் தியாகமாகக் கருதுகிறேன்.

 

இந்நாட்டு மக்களுக்காக நான் எனது வாழ்நாள் முழுவதும் போராடியுள்ளேன் -மக்களுக்காக நான் சிறை செல்ல தயாராக இருக்கிறேன் Anwar sedition as wellஅல்லது வேறு எந்த ஒரு விளைவையும் எதிர்கொள்வேன்.

 

என்னை எங்கே அனுப்பினாலும், எனக்கு எதைச் செய்தாலும், எனது போராட்டம் தொடரும்.

 

எனது நண்பர்களே, சக மலேசியர்களே, நீங்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க அனுமதியுங்கள் அல்லா எனது சாட்சி. நான் வாயடைக்கப்பட்டவனாக மாட்டேன், நான் சுதந்திரத்திற்காகவும் நீதிக்காகவும் தொடர்ந்து போராடுவேன்,  நான் சரணடையவே மாட்டேன், என்று உறுதியளிக்கிறேன்.”