அன்வார் அரச மன்னிப்பு கோருவாரா?

Anwarroyalpardonகுதப்புணர்ச்சி வழக்கு 2 இல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் தண்டனையிலிருந்து விடுபடவும் தமது பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இருக்கையை வைத்துக்கொள்ளவும் பேரரசரிடம் அரச மன்னிப்பு கோருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அன்வார் அரச மன்னிப்பு கோர மாட்டார். அவ்வாறு செய்வது அன்வார் குற்றத்தை ஒப்புக்கொள்வதாகும்.  “அவர் நிரபராதி” என்று பிகேஆர தலைமைச் செயலாளர் ரபிஸி ரமலி வலியுறுத்திக் கூறினார்.

அரச மன்னிப்பு கோருவதற்கான மனு எதனையும் தயாரிக்குமாறு அன்வார் அவரது வழக்குரைஞர்களுக்கு கட்டளை எதனையும் விடுக்கவில்லை. ஆனால், பெடரல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுவிசாரணை செய்வதற்கு அவர் நடவடிக்கை எடுக்கலாம்.

அன்வார் பேரரசரிடம் அரச மன்னிப்பு கோர மாட்டார் என்று அன்வாரின் வழக்குரைஞர்களில் ஒருவரும் பிகேஆர் மத்திய குழு உறுப்பினருமான லத்தீபா கோயா மலேசியாகினிடம் தொடர்பு கொண்ட போது கூறினார்.

பொதுவாக, அரச மன்னிப்பு அல்லது கருணை கோருவது அன்வார் குதப்புணர்ச்சி குற்றத்தை ஒப்புக்கொள்கிறார் என்பதாகும். அக்குற்றத்திற்காக அன்வார் தண்டிக்கப்பட்டுள்ளார். ஆனால், அக்குற்றத்தை அவர் திடமாக மறுத்து வந்துள்ளார்.