அரச மன்னிப்பு கோருகிறது அன்வாரின் குடும்பம்

 

anwarfamilyfilesforpardenகுதப்புணர்ச்சி வழக்கு 2 இல் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம் அரச மன்னிப்பு கோருவதற்கான கால அவகாசம் காலாவதியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக அவரது குடும்பத்தினர் அவருக்கு அரச மன்னிப்பு கோரும் விண்னப்பத்தை அரண்மனையில் சார்வு செய்தனர்.

“அரச மன்னிப்புக்கான முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் குற்றவாளி என தீர்ப்பளித்திருக்கலாம், ஆனால் எங்களுடைய தகப்பனார் ஒரு நிரபாரதி என்று நாங்கள் ஒரு குடும்பமாக தொடர்ந்து கூறிவருகிறோம்.

“பெடரல் அரசமைப்புச் சட்ட விதி 42 இன் கீழ், உண்மையாக நடந்த அனைத்து செயல்களின் அடிப்படையில், நீதியின் பெயரில் அரச அமைப்பு முறை எங்களுடைய விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம்.

“கடினமான சூழ்நிலையில் இருக்கும் இந்நாட்டு குடிமகனுக்கு உதவக்கூடிய அனைத்தையும் நாங்கள் நாடுவோம், அவற்றை பயன்படுத்துவோம்”, என்று அன்வாரின் மகள் நூருல் நுஹா ஓர் அறிக்கையில் கூறினார்.

இன்று அன்வாரின் மூத்த மகளும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இஸ்ஸாவுக்கும் நாடாளுமன்ற தேவான் ரக்யாட்டின் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவுக்கும் இடையில் ஒரு சந்திப்பு நடந்ததாக மாலெக் ஹுசேன், எதிரணித் தலைவரின் நாடாளுமன்ற விவகார அலுவலகத்தின் தலைவர், கூறினார்.

அன்வாரின் குடும்பத்தினர் தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்தை பேரரசர் தள்ளுபடி செய்தால் மட்டுமே பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இருக்கை காலியானதாக அறிவிக்கப்படும் என்று பண்டிகார் பின்னர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

அன்வார் குடும்பத்தினரின் விண்ணப்பம் இன்று பிற்பகல் மணி 3.30 க்கு இஸ்தானா நெகாராவில் தாக்கல் செய்யப்பட்டது என்று பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா பெர்னாமாவிடம் கூறினார்.