மீத்தேன் திட்டம் செத்த பாம்பல்ல அது ஒரு தூங்கும் நாகம்: திருமுருகன் காந்தி!

Thirumurugan-gandhi“மீத்தேன் திட்டம் என்பது செத்த பாம்பல்ல அது ஒரு தூங்கும் நாகம்” என கூறியுள்ளார் மே பதினேழு இயக்க  ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
நிலம் கையகப்படுத்தல் அவசர சட்டம் குறித்து சமூக வலைதளத்தில் மேலும்  கருத்து தெருவிக்கையில்

”மீத்தேன் திட்டம் செத்த பாம்பு” என அதிமுக அரசின் முதல்வர் சட்டசபையில் தெரிவித்திருக்கிறார். வரவேற்கும் அதே நேரம், சில கேள்விகள் எழுவதையும் பதிவு செய்ய விரும்புகிறோம். நிலச் சீர்திருத்த சட்டத்தினை அவசரமாக 2014 டிசம்பரில் கொண்டு வந்த பாஜக கும்பல், மூன்று வாரங்களுக்கு முன்பு அதில் மேலும் திருத்தத்தினை கொண்டு வந்திருக்கிறது.

இதன் படி அரசு நிறுவனங்கள் 70% மக்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகு நிலத்தினை கையகப்படுத்த வேண்டும், அரசு-தனியார் கூட்டு முயற்சிகள் , தனியார் நிறுவனங்கள் 80% மக்களின் ஒப்புதலைப் பெற்று நிலம் கையப்படுத்தப்பட வேண்டும் என்கிற சரத்துகள் திருத்தப்பட்டிருக்கிறது. இதன் படி 80% ஒப்புதல் இல்லாமலேயே, இன்னும் சொல்லப் போனால் மக்களின் விருப்பமில்லாமலும் நிலத்தினை தனியார் நிறுவனங்கள், தனியார்-அரசு கூட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் கையகப்படுத்தலாம் என்று திருத்தம் பாஜக கும்பல் கொண்டு வந்திருக்கிறது.

இதைவிட ஒருபடி மேலே சென்று , பாதிப்பினைப் பற்றிய ஆய்வுகளை நிலம் கையகப்படுத்தப்படும் இடத்தில் எடுக்க வேண்டியதில்லை என்றும் , அதற்குரிய சரத்துகளையும் நீக்கி இருக்கிறது மோடி அரசு.

இந்த மோசடி நில அபகரிப்புச் சட்டம் அமுலுக்கு வருமென்றால், மீத்தேன் திட்டம் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமலேயே நடைமுறை படுத்தப்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். ஏனெனில் அரசின் ஒப்புதல் இல்லாமலும், மக்களின் ஒப்புதல் இல்லாமலும் நிலத்தினை கையகப்படுத்தி மீத்தேன் திட்டம் தனியாரால், மத்திய அரசால் துவக்கப்பட முடியும்.

ஆக ‘மீத்தேன் திட்டம் ஒரு செத்த பாம்பு’ என்பது உண்மையில்லை.. ‘அது தூங்கும் நாகம்’ என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இந்த நில அபகரிப்பு சட்டம் நிறைவேற வேண்டுமென்றால் பாராளுமன்றம், ராஜ்ய சபை ஒப்புதல் வேண்டும். பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை வைத்து பாஜக ஒப்புதலைக்கொண்டு வந்தாலும், மேலவை-ராஜ்ய சபாவில் இதை நிறைவேற்றுவது கடினம். ஏனெனில் இங்கு பாஜகவிற்கு பெரும்பான்மை கிடையாது.
இச்சமயத்தில் பிற கட்சிகளின் எம்.பி களை நம்பியே பாஜக இருக்கிறது. எனில் இதில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன?.

அதிக ராஜ்ய சபா உறுப்பினர்களை வைத்திருக்கும் அதிமுக நில அபகரிப்பு சட்டத்திற்கு ஆதரவளிக்குமா?
அதிமுக அரசு தனது நிலைப்பாட்டினை வெளிப்படையாக சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இந்த கொலைகார சட்டத்திற்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். வீதியில் இறங்கி போராட்டம் நிகழ்த்தினால் மட்டுமே மீத்தேன் போன்ற கொலைகார திட்டங்களை தடுக்க இயலும்.

ஆகவே தமிழகத்தின் முதலமைச்சர் இச்சட்டத்தினை தில்லியிலும் எதிர்க்கும் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டினை வெளிப்படையாக அறிவிப்பது அவசியம். அதிமுக செய்யுமா? தமிழகத்தின் வாழ்வாதாரத்தினை காக்குமா?

அனைவரும் ஒரே குரலில் எதிர்ப்பினை பதிவு செய்வோம். தமிழகத்தினை மட்டுமல்லாமல் இந்தியாவின் உழைக்கும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தினை காப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

-http://www.pathivu.com

TAGS: