சீன நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இனி இலங்கைக்குள் இடமில்லை என்கிறார் மங்கள

csubmarineசீன நீர்மூழ்கி கப்பல்களை, இலங்கையில் இனிமேல் அனுமதிக்க மாட்டோம் என, சீனாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற பின் மைத்திரிபால சிறிசேன தனது முதல் வௌிநாட்டு சுற்றுப்பயணமாக, அண்மையில் இந்தியா சென்றார்.

அத்துடன் இம்மாதம் அவர், சீனா செல்ல உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, இலங்கை வெளிவிவகார அமைச்சர் அங்கு விஜயம் செய்துள்ளார்.

தலைநகர் பீஜிங்கில் நேற்று, நிருபர்களிடம் பேசிய மங்கள,

“ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, சீன நீர்மூழ்கி வந்தது எப்படி என, எனக்கு தெரியவில்லை. அப்போது, ராஜபக்ஷ அரசு பதவியில் இருந்தது என்பதால், அதுகுறித்த விவரங்கள் தெரியவில்லை. அது போன்ற சம்பவங்கள், எங்கள் ஆட்சி காலத்தில் நடைபெறாது என, உறுதியளிக்கிறேன்” என்று கூறியதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இலங்கை வந்த அதேநாளில், ஜப்பானோடு கடல் எல்லை தகராறில் ஈடுபட்டுவரும் சீனாவின் நீர் மூழ்கி கப்பல்களை கொழும்பு துறைமுக பகுதியில் எப்படி அனுமதித்தீர்கள்? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை துறைமுகங்களில், சீன நீர்மூழ்கி கப்பல்கள் தங்கிச் சென்ற விவகாரத்தை, அப்போதே இந்திய வெளியுறவுத் துறை கடுமையாக கண்டித்தது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், இலங்கை சென்று, இந்தியாவின் கண்டனத்தை பதிவு செய்தார்.

சமீபத்தில், இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் மோடியும் இதனை வலியுறுத்தினார் என இந்திய ஊடகமான தினமலர் கூறியுள்ளது.

இதன் பலனாகவே நேற்று, இலங்கை வெளிவிவகார அமைச்சர், சீனாவிலேயே, ´இலங்கை துறைமுகங்கள், சீன நீர்மூழ்கிகளுக்கு இனி இடமளிக்காது´ என கூறியதாக, தகவல்கள் கூறுகின்றன.

-http://www.tamilcnnlk.com

TAGS: