கிட் சியாங்: அமைச்சரவை 1எம்டிபி விவாதத்தைத் தடுக்கப் பார்க்கிறதா?

kit1எம்டிபி  கணக்குகளைத்  தணிக்கை  செய்வதென்ற  அமைச்சரவையின்  முடிவு, அதைப்  பற்றி    நாடாளுமன்றத்தில்  பேசப்படுவதைத்  தவிர்ப்பதற்கான  முயற்சிபோல் தெரிகிறது  என  லிம்  கிட்  சியாங்  கூறுகிறார்.

அம்முடிவினால், நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  தலைமைக்  கணக்காய்வாளர்  அவரது  விசாரணையை  முடிக்கும்வரை  அது  பற்றிக்  கேள்வி  எழுப்ப இயலாது  என  கிட்  சியாங்  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

நாடாளுமன்றம்  மார்ச்  9-இல்  தொடங்குகிறது.

நேற்று 1எம்டிபி  அதிகாரிகளை  விளக்கமளிப்புக்காக  அமைச்சரவை  அழைத்திருந்தது.

விளக்கமளிப்புக்குப்  பின்னர்  “1எம்டிபியில்  முறைகேடுகள்  நிகழவில்லை”  எனத்  திருப்தி  கொள்வதாக  அது  தெரிவித்தது.

ஆனாலும்,  1எம்டிபி-இன்  கணக்குகளைத்  தணிக்கை  செய்து  பொது  கணக்குக்  குழுவுக்கு  அறிக்கை  தாக்கல்  செய்யுமாறு  தலைமைக்  கணக்காய்வாளர்  பணிக்கப்பட்டிருப்பதாக  பிரதமர்  அலுவலகம்  கூறியது.

1எம்டிபியில்  முறைகேடுகள்  நிகழவில்லை  எனக்  கூறிய அமைச்சரவையை  லிம்  கடிந்து  கொண்டார்.

“நேற்று  35  அமைச்சர்களும்  என்ன  செய்கிறோம்  என்பதை  அறிந்துதான்  செய்தார்களா,  கடந்த  ஆறு  மாதங்களாக  1எம்டிபி-இல்  நடப்பதை  அவர்கள்  முழுமையாக  புரிந்து  கொண்டுதான்  1எம்டிபிக்கு  நற்சான்று  வழங்கினார்களா?”, என்றவர்  வினவினார்.