கடந்த கால தவறுகளை இலங்கை மீண்டும் மேற்கொள்ளக்கூடாது: மனித உரிமைகள் ஆணையர்

Zeid Ra ad al-Husseinகடந்த காலங்களில் விட்ட தவறுகளை மீண்டும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைன் கோரியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வில் இன்று உரையாற்றிய அவர்,

இலங்கை அதிகாரிகள் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆழ்ந்த நிலையில் சிந்திக்க வேண்டும் என்று கோரினார்.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருந்தபோதும் கோரிக்கைகளின் அடிப்படையில் அது செப்டம்பர் மாதத்துக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இந்த முடிவு, விசாரணைக் குழுவினரின் ஆலோசனைகளுக்கு ஏற்பவே மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்திற் கொண்டே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று செய்ட் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் செப்டம்பர் மாத அறிக்கையில் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் தகவல்களும் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் செய்ட் குறிப்பிட்டார்.

இலங்கையின் அரசாங்கம், தம்மையும் உண்மையை கண்டறிதல் மற்றும் நீதிக்கான விசேட நிபுணரையும் நாட்டுக்கு அழைத்துள்ளதாக தெரிவித்த செய்ட், எதிர்வரும் செப்டம்பருக்குள் தமது அதிகாரிகள் உண்மையை கண்டறிய முயற்சிப்பர் என்றும் செய்ட் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கமும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் செய்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: