மருத்துவர்களுக்கும் மருந்தகர்களுக்கும் இடையில் ஏன் இந்த போராட்டம் ?

govindasamyநாட்டில் தற்பொழுது பரவலாக விவாதிக்கப்பட்டுவரும்  ஒரு  விடயம் மருத்துவர்கள் மருந்து எழுதித் தருவதும் அம்மருந்துகளை மருந்தகரிடம் போய் நோயாளிகள் பெற்றுக்கொள்வது என்பதாகும். அதை  Dispensing Separation (DS)  என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் . அதாவது மருத்துவர்கள் நோயைக் கண்டறிந்து மருந்து எழுதுவது , மருந்தகர்கள் (Pharmacists ) அதற்குண்டான   மருந்துகளைக் கொடுப்பது. வாசகர்கள் சுலபமாக  புரியும் வண்ணம் Dispensing Separation (DS) ஐ,  டிஎஸ் என்று  சுருக்கமாகக் கொள்வோம்.

வளர்ச்சியடைந்த நாடுகளில்  பெரும்பான்மையானவை இந்த டிஎஸ் முறையைத்தான் பயன் படுத்திவருகின்றன. மலேசிய நாட்டில் நடைமுறையில் இருக்கும்  தற்போதைய  முறை ஆங்கிலேயர்களால்  அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றைய காலத்தில் மருந்தகர்கள்  போதிய என்ணிக்கையில்  இல்லாததன் காரணமாக மருத்துவர்களே  நோயைக் கண்டறிந்து    அதற்குறிய மருந்துகளை அவர்கள் இடத்திலேயே வழங்கியும் வந்துள்ளார்கள். இந்நடை முறை  தனியார் கிளினிக்குகளில் மட்டுமே பின்பற்றப்பட்டு வரப்பட்டுள்ளது என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அராசாங்க  மருத்துவமனைகளில் தனியாக  மருந்தகம் என்று ஒன்று உள்ளது. அங்குதான் நோயாளிகள் அனைவரும் மருத்துவரைப் பார்த்த பின்னர் அவர் எழுதிக் கொடுத்த மருந்துகளை  பெற்றுக்கொள்வார்கள்.

இந்த டிஎஸ் முறையினால் யார் அதிகம் நன்மை பெறுவார்கள் ?

நிச்சயமாக நோயாளிகள்தான்.

மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளின் முழு விவரமும் மருந்தகர்களுக்குத் தெரியும். ஏனெனில் அவர்கள்  பயிற்சி பெற்ற துறையே மருந்தைப் பற்றியதுதான். அவர்கள்  நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்க தக்க கல்வியும் பயிற்சியும் மேற்கொண்டுள்ளனர். மருந்துகளின் இயைபியல் ,அதன் இயற் குணங்கள் என்ன என்பதனை அறிந்துள்ளனர். ஆழமான அறிவும், அதன் பயன் பாடுகள் மட்டுமின்றி , பக்க விளைவுகள் , பாதுகாப்பாக உட்கொள்ளும் முறைமையும் கற்றுள்ளனர் .மேலும் பல மருந்துகளை  ஒரே நேரத்தில் சாப்பிடுவதால் வரும் சாதக பாதக விளைவுளை நன்கு  தெரிந்துள்ள மருந்தகர்கள் , அதற்கு  ஏற்ப  நோயாளிகளுக்கு ஆலோசனைகளை   வழங்கும் தகுதியும் உள்ளவர்கள். இப்பொழுது  தனியார் கிளினிக்குகளில்  கொடுக்கப்படும் மருந்துகளுக்கு  சரியான, முறையான   விளக்கங்களை அளிக்க  பயிற்சிப் பெற்ற மருந்தகர்கள் அங்கு இல்லை. மருத்துவர்கள் என்ன மருந்து கொடுக்கின்றார்கள் என்றே பெரும்பாலான நோயாளிகளுக்கு தெரிவதில்லை. டாக்டர்  சரியாகத்தான்  கொடுத்திருப்பார் , சாப்பிட வேண்டியது  நமது கடமை  என்ற நம்பிக்கையில்தான் நோயாளிகள்  இருக்கின்றார்கள். மருந்துகளின் பெயர்கள்  மருந்து பைகளில் கட்டாயமாக எழுதப்பட வேண்டும் என்ற சட்டம் இருந்தும் கூட பெரும்பாலும் அது கடைபிடிக்கப்படுவதில்லை . நாளுக்கு நாள் மக்களின்  அறிவு விசாலமடைகிறது. தொலைக்காட்சி , இணையம் என  பல வழிகளில் அவர்கள் நோய் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுகிறார்கள். அவர்கள்  தங்கள்  உட்கொள்ளும் மருந்து பற்றி  தெரிந்து கொள்வது அவசியம் என்று  உணர்ந்திருக்கின்றார்கள். ஆகவே இந்த டி.எஸ் தேவையான விவரங்களை  அவர்கள் மருந்தகர்கள்  வழி தெரிந்து கொள்ள வழி வகுக்கின்றது. மருந்துகளைப் பற்றிய தங்களின் சந்தேகங்களை  நேர்முகமாக தெளிவு படுத்திக் கொள்ள வாய்ப்பையும் இது  ஏற்படுத்துகின்றது. மேலும் மக்கள் சாதாரண நோவுகளுக்கு தங்களின் முதல் தேர்வாக  மருந்தகர்களிடம் செல்லும் பொழுது பணம் மிச்சப்படுத்தக் கூடிய  வாய்ப்பும் உள்ளது.

இம்முறையினால் மருந்துகளின் விலை குறையுமா ?  நோயாளிகளின் பணம் மிச்சமாகுமா ?

இதற்கு பதில் இல்லை ஆமாம் என்ற இரண்டுமே உண்டு.

உதாரணத்திற்கு, இப்பொழுது ஒரு நோயாளி மருத்துவர் ஒருவரிடம் சளிக் காய்ச்சல் என்று  போனால்   ரிம 50 கொடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அதே மருந்துகளை அவர் எழுதிக் கொடுத்து மருந்தகத்தில் வாங்கினால் அம்மருந்துகளின் விலை  ரிம 20 க்குள் அடக்கமாகக்கூடும். இது மருந்தின் விலை மட்டுமே , மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம் இதில் சேர்க்கப்படவில்லை . அது மருத்துவரைப் பொருத்து ரிம 20 ல் இருந்து ரிம 35 வரை ஆகலாம். ஆகவே டிஎஸ் திட்டதின் வழி நோயாளிகள் செலவழிக்கும் பணம் குறையவும் அல்லது அதே அளவு இருக்கவும் அல்லது சிறிது கூடவும் வாய்ப்புள்ளது.

இந்த டிஎஸ் முறை அமுலாக்கப்பட்டால்  டாக்டர்கள் , தங்களிடம் இல்லாத வேறு நல்ல மருந்துகளை எழுதிக்கொடுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. டாக்டர்கள்  பொதுவாக  குறிப்பிட்ட மருந்துகளை மட்டுமே அவர்களுடைய  கிளினிக்குகளில் வைத்திருப்பார்கள். காரணம்  அதிகமான மருந்துகளை  வைத்திருப்பது அவர்களின் பணப் புழக்கத்தைக் பாதிக்கும் என்பதாலும் அவர்களின் முதன்மைத் தொழில்  நோய் கண்டறிவது மட்டுமேயன்றி மருந்து  விற்பனை அல்ல என்று தெரிந்து வைத்திருப்பதனாலும் அவர்கள் அதிகமான மருந்துகளை தங்களின் கைவசம் வைத்திருக்க மாட்டார்கள். தங்களிடம் உள்ள  மருந்துகளைக் கொண்டே அவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க விரும்புவார்கள. ஒரு வேளை  நோயாளியின் நோய்க்கு ஏற்ற மருந்து அங்கு இல்லை யென்றால் மட்டுமே மருத்துவர்கள பார்மஸியில்  அம்மருந்துகளை பெற்றுக்கொள்ள மருந்து சீட்டு   தருவார்கள் .இந்த டி எஸ் முறை அமுலுக்கு வந்தால் மருத்துவர்கள் சுதந்திரமாக எந்த மருந்து வேண்டுமானாலும் நோயிற்கு தகுந்தவாரு எழுதிக் கொடுக்கலாம். அவர்கள் தங்கள் வசமுள்ள குறிப்பிட்ட சில மருந்துகளையே மாற்றி மற்றி வழங்கும் அவசியம் நின்று போய்விடும்.  இதனால் நோயாளிகள் அதிக பயன் பெறுவார்கள்.

மருந்தகர்கள் (Pharmacists)  மருத்துவர்களின் (Doctors) முக்கிய பணியாகிய நோய் கண்டறிதலை செய்வதில்லை. அது மருத்துவர்களுக்கே வழங்கப்படுள்ள தனிப்பட்ட  உரிமை.  இருந்த போதிலும்  சிறு சிறு உபாதைகளுக்கு   மருந்தகர்கள் மருந்து கொடுக்க சட்டம் வகை செய்கிறது. இச்சட்டம் 63 ஆண்டுகளுக்கே முன்பிருந்தே  நடைமுறையிலுள்ளது. குருப் சி (Group C) வகையான மருந்துகளை  மருந்தகர்கள் , மருத்துவர்களின் மருந்துச் சீட்டு இல்லாமலேயெ வழங்க சட்டம் வகை செய்கிறது .

குருப் சி வகைகளையும் மேலும் கட்டுப்படுத்தபாடாத வகைகளையும் கொண்ட பட்டியலிலுள்ள மருந்துகளை மருந்தகர்கள், டாக்டர்களின் அனுமதி இல்லாமலேயே  நோயாளிகளுக்கு கொடுக்க முடியும். இதில் சளிக் காய்ச்சல், தலைவலி , சாதாரண புண்கள் அரிப்புக்கான மேல் பூச்சு மருந்து வகைகளும் அடங்கும்.

குருப் பி பட்டியலிலுள்ள , ஆண்டிபையோடிக் , ரத்த அழுத்த மருந்துகளை டாக்டரின் மருந்து சீட்டு இல்லாமல்  மருந்தகங்கள் நோயாளிகளுக்கு  விற்கக்கூடாது என்பது சட்டமாகும்

மருத்துவர்கள் குறிப்பாக தனியார் கிளினிக்குகள் வைத்திருப்பவர்கள்  இந்த டி எஸ் திட்டத்திற்கு பரவலாக எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் ?`

நிச்சயமாக அவர்களின் வருமானம் குறையும். அவர்கள் இது நாள் வரை விற்று வந்த மருந்துகள் மருந்தகர்களிடம் போய்ச் சேரும்பொழுது அதன் விளைவால்  மருத்துவர்களுக்கு  வருமானம் குறைவு ஏற்படும். பெரும்பாலான தனியார்  கிளினிக்குகள்  நடத்தும் மருத்துவர்கள் தங்களின் வருமானத்தை மருந்துகள்  விற்பதன் வழியே பெறுகின்றார்கள் என்றால் அது மிகை ஆகாது.

சில மருத்துவர்களின்  கூறுகிறார்கள், டி எஸ் வந்தால் நாங்கள் எங்களின் ஆலோசனை கட்டணத்தை ரிம 35 க்கு குறையாமல் உயர்துவோம் என்று . இது  டாக்டர்கள், ,நோயாளிகளுக்கும் அராசங்கத்திற்கும் விடுக்கும் ஒரு மறைமுக சவலாகும்..

அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் ஆலோசனைக் கட்டணம்  ரிம் 35 ஆகும் . அதை அவர்கள் நடைமுறைப்படுத்துவதும் படுத்தாததும் அவர்களின் உரிமையாகும்.

அப்படி அது உயர்த்தப்பட்டால் பெரும்பாலான நோயாளிகளுக்கு அது சுமையாக  அமையும் . அதனால்தான் மருத்துவர்கள சாதாரண நோய்களுக்கு மருந்துடம் சேர்த்து ரிம 50 மொத்தமாக  சேர்த்து வாங்குகிறார்கள். இது பொருளாதரா ரீதியில் ஏற்புடையதாக இருக்கும் வேளையில் ,  நோயாளிக்கு அது முழுமையான  பயனை  வழங்குகிறதா என்பது  சிந்திக்க வேண்டிய ஒன்று.

டி எஸ் திட்டத்தின் வழி, மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துச் சீட்டினை மறு பரிசீலனை செய்து தவறுகள் ஏதும் இருகின்றனவா என்று ஆராய்ந்து அப்படி இதுக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரிடம் சுட்டி காட்டி திருத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. இவ்வழக்கம் ஒன்றும் புதிதல்ல. காலங்காலமாகவே அரசாங்க மருத்துவ மனைகளில் இது கையாளப்பட்டு வரப்படுகிறது. தனியார் கிளினிக்குகளில்தான் இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை . இந்த டி ஏஸ் முறை மருத்துவர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பது என்பது அர்த்தமாகாது. மருத்துவர்களுக்கும் மருந்தகர்களுக்கும்  இடையே உள்ள நிபுணத்துவ பொறுப்புகளை நோயாளிகளின் நலன் கருதி பகிர்ந்தளிப்பதே  அதன் நோக்கமாகும்.

நாட்டில் போதிய மருந்தகங்கள் இல்லை ,24 மணி நேர மருந்தகங்கள் இல்லை , கிரமப்புரங்களில் மருந்தகங்கள் இல்லை ஆகவே இந்த டி எஸ் திட்டம் மக்களுக்கு பெரும் சுமையக் கொடுக்கும் என்பதெல்லாம் சாக்கு போக்கு. இவையெல்லாம் கருத்தில் கொள்ளப்பட்ட பின்னரே இந்த டிஎஸ் திட்டத்தை அராசாங்கம் அமுல் படுத்த எண்ணியுள்ளது.

தற்பொழுது நாட்டில் ஏறக்குறைய 2 ஆயிரம் தனியார்  மருந்தகங்கள் (Private Pharmacies) இருக்கும் வேளையில் 13,000 மருந்தகர்கள் (Pharmacists) அரசாங்கத் துறையிலும் தனியார் துறையிலும் வேலை செய்கின்றனர்.  தேவைகேற்ப அதிகமான  மருந்தகங்களும் வந்த வண்ணமே உள்ளன. ஆகவே பற்றாக் குறை என்பது ஒரு தற்காலிக பின்னடைவே அன்றி அதுவே முட்டுக்கட்டை என்று சொல்ல முடியாது. இந்த டி எஸ் திட்டம் சில அசொளகரியங்களைக் கொண்டு வந்தாலும் நோயாளிகளுக்கு  காலப் போக்கில் சிறந்த மருத்துவச் சேவையை வழங்க வழி கோலும் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.

கோவிந்தாசாமி அண்ணாமலை,

மருந்தகர் ,

தஞ்சோங் மாலிம்