11-ஆவது மலேசிய திட்டமும், கம்போங் மேடான் வன்முறையும்!

1kg medanஇன்றோடு பதினான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. அந்தச் சம்பவத்தை மறக்க இயலாத நிலையில் வாழ்பவர்களில் வாசும் ஒருவர். தொடர்பு கொண்ட போது அந்த வன்முறை பற்றி எழுதப்பட்ட மார்ச் 8 என்ற புத்தகத்தை மீண்டும் நினைவுகூர்ந்ததாகக் கூறினார். வெட்டு காயங்களுடன் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டதோடு இரண்டு கைகளும் முறிந்த நிலையில் 2001-ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் அவர்.

மார்ச் 8-இல் பழைய கிள்ளான் சாலையில் உள்ள கம்போங் மேடானில் தொடங்கிய இந்த இனவாத வன்முறை தாக்குதல் மார்ச் 23-ஆம் தேதிவரை நீடித்தது.

வாசுவை போல் சுமார் 90-க்கும் அதிகமானோர் வெட்டு குத்துகளுக்கு ஆளானார்கள். ஆறு நபர்கள் உயிர் இழந்தனர்.  இத்தாக்குதல்கள் நடந்த போது பலத்த போலீஸ் பாதுகாப்பு அங்கு இருந்தது. ஆனால், உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

1969-ஆம் ஆண்டு நடந்த மே 13 இனக்கலவரத்திற்கு பிறகு மலேசியாவில் நடந்த இரண்டாவது இன வன்முறை சம்பவம் இதுவாகும். நமது வரலாற்றில் படிந்துள்ள கருப்பு நாட்களாக இவை  கருதப்படும்.

K. Arumugam_Suaramஅண்மையில் நடந்த 11-ஆவது மலேசிய திட்டத்திற்கான ஒரு கருத்து குவியல் கருத்தரங்கிற்கு தலைமையேற்றிருந்த முனைவர் டெனிசன் ஜெயசூரியா, “கம்போங் மேடான் வன்முறையில் பாதிப்படைந்தவர்களுக்கான நீதி தேடும் படலம் 11-ஆவது மலேசியா திட்ட விவாதங்களுக்கு உட்படுத்தப் பட வேண்டும்”, என்றார்.

எதிர்வரும் காலங்களில் கம்போங் மேடான் போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அரசாங்க அமைப்புகள் அனைத்திலும் பல்லின மக்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை இவ்விவாதம் பரிந்துரைக்கும்.

இதுவரையில் இந்த இன வன்முறை பற்றி எந்த விசாரணையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. குற்றவாளி என யாரும் தண்டிக்கப்பட வில்லை. இது சார்பாக நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட எல்லா வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன என்கிறார் இந்த இன வன்முறை பற்றி ‘மார்ச்-8’ என்ற நூலை எழுதிய வழக்கறிஞர் கா. ஆறுமுகம். இவரது மார்ச்-8 புத்தகத்தை மலேசிய அரசாங்கம் தடை செய்துள்ளது. அது தேசிய பாதுகாப்புக்கு மிரட்டலாக உள்ளதாம்.

kg-medanதடையை நீக்க இது சார்பாக ஆறுமுகம் தொடுத்த வழக்கு உயர் நீதி மன்றம் முதல் கூட்டரசு நீதிமன்றம் வரை சென்று தோல்வியில் முடிந்தது. அந்நூல் தேச நிந்தனையானது என்ற தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்டது. மலேசியாவில் தடை செய்யப்பட்ட ஒரே தமிழ்ப் புத்தகம் மார்ச்-8 தான்!

இந்த வன்முறை பற்றி கருத்துரைத்த சுவாராம் இயக்கத்தின் நிருவாக இயக்குனர் டாக்டர் குவா கியா சூங், இத்தாக்குதலை நடத்தியவர்கள் வெளியிடத்திலிருந்து வந்த மலாய்க்காரர்கள். போலீஸ் படையில் 95 விழுக்காட்டினர் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்தாதற்கு இதுவே காரணம் என்றார்.

ஆகவே, கம்போங் மேடான் போன்ற தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கு விரைந்து செயல்படக் கூடிய பல்லின பணிப்படை (multi-ethnic task force) அமைக்கப்பட வேண்டும் என்கிறார் டாக்டர் குவா.

இது சார்பாக ஹிண்ட்ராப் இயக்கத்தின் ஆலோசகர் என். கணேசன் கம்போங் மேடான் தாக்குதலை “ஓர் இனக் கொலை” என்கிறார். இத்தாக்குதலை “ஓர் இனக் கலவரம்” என போலீசார் வர்ணித்து மக்களை ஏமாற்றினர் என்றாரவர். “நாட்டின் மனச்சாட்சிக்கு பதில் அளிக்க இத்தாக்குதலை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும்”, என்றும் அவர் கூறினார்.

டெனிசன் கருதுரைத்தது போல் 11-ஆவது மலேசிய திட்ட விவாதம், இந்த இன வன்முறை சம்பவத்திற்கு  நீதியும் நியாயமும் தேட முற்பட வேண்டும்.