இன்று வண்ணத்துப் பூச்சியின் தினம்…

Butterfly1இன்று வண்ணத்துப் பூச்சியின் தினம்…வண்ணத்துப் பூச்சிகளைப் பார்த்தால் யாருக்குத்தான் பிடிக்காது? காதலியின் இசைதலில் காதல் கைகூடிய இளைஞனின் மனதில் வண்ணத்துப் பூச்சி பறக்கும்.

40 நாட்கள் வரை உயிர் வாழும் இவற்றின் வாழ்க்கை வலியும் வேதனையும் கொண்டவை. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இணையைத் தேட முற்படுகின்றன. இதற்காக பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றன.வானிலே நேர்த்தியான நடனம், பல குரல் அல்ட்ரா சவுண்டு இசை,மெல்லிய நறுமணம் வீசுதல் அவைகளில் சில. பாட்டும் பரதமும் சிறந்த கலைஞனைப் போன்றுள்ளதாகக் கூறுகிறார் பூச்சியியல் நிபுணர் ‘ராண்டீ ஜோன்ஸ்’.

குரலையும், வண்ணத்தையும் மாற்றிக் கொள்வது, காதலுக்காக மட்டுமன்றி எதிரியை வீழ்த்தும் உபாயமாகவும், தான் சார்ந்த குழுக்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை சமிக்ஞையாகவும் கொள்கின்றன.முட்டையானது 4நாட்களில் பொரிக்கத் துவங்குகின்றது.

பாதுகாப்பகங்களில் இடப்பட்ட முட்டையானது 90 சதவீதமும், காடுகளில், தோட்டங்களில் இடப்பட்டவை வெறும் 7 சதமும் பொரிக்கிறது. பெண் தன் முட்டைகளை பால் வரும் செடி, கொடிகளில் இடுகிறது.

பொரித்த முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் அவ்விலைகளையே உணவாக உட்கொள்கிறது.

Butterfly2இயற்கையின் ஏற்றத் தாழ்வுகள் இவைகளின் வாழ்வை வெகுவாக பாதிக்கின்றன. எந்த நாட்டில் எந்த மரத்தில் தாய் முட்டை இட்டதோ அதே இடத்தை பல நூறு மைல்களுக்கப்பால் இருந்தாலும் சரியாகக் கண்டறிந்து பருவமடைந்த அதன் இளம் பூச்சிகள் இலக்கை அடைவது இவ்வகை இனங்களுக்கு உள்ள ஆச்சரியமூட்டும் குணம்.

பொதுவாக ஆப்பிரிக்க நாட்டு மக்கள் முட்டைகளில் இருந்து வரும் புழுக்களை அசுர சக்தியாகப் பாவித்து கொன்றுவிடுகின்றனர். திபெத்திய லாமாக்கள் கனவில் அவை வந்தால் அவர் முக்தி அடைந்து விடுவார் என்று அர்த்தமாம்.ஜென் தத்துவ வாதிகள் கனவில் வந்தால் ஏதோ விபரீதம் நடக்கப் போகின்றது என்று அர்த்தமாம். தாய்லாந்து மக்கள் விடியல் போதில் பூச்சிகளைக் கண்டால் முதல் வேலையாக அவைகளைக் கொன்று அன்றைய பொழுதின் துவக்கம் மகிழ்ச்சியாக இருக்கும் எனக் கொண்டாடுவார்களாம். ஆனால் அமேசான் பழங்குடி மக்களோ தங்களைக் காத்து வரும் கடவுளின் குட்டி தேவதையாக அன்போடு வழிபடுகின்றனர்.

சிக்கிம் பழங்குடிகளின் பாரம்பரியக் கவிதையில் ஒரு வரி வரும் “பட்டாம் பூச்சிகள் பறக்காத உன் வீட்டை வீடென்று எப்படிச் சொல்கிறாய்” என்று…..

இக்கவிதை வரிகளை,பிளாஸ்டிக் வண்ணத்துப் பூச்சி சூழலில் ஒவ்வொரு வீட்டிற்கும் பொருத்திப் பார்த்தால் வேதனைதான் மிஞ்சும். ஆனால் வரிகளின் உண்மை என்றும் மாறாதது தானே

Butterfly3 வண்ணத்துப் பூச்சியின்  வாழ்க்கை………………………!!

இருட்டுக்குள் வாழ்க்கை 
இன்னும் எத்தனை நாளோ? 

மெல்ல மெல்ல 
இறக்கை முளைக்கிறது. 
மெதுவாக பறந்து 
பார்க்கிறேன். 

ஆஹா…………..!! 

என்ன ஒரு மாயம்!! 

பறப்பது ஒரு ஆனந்தம். 

மலருக்கு மலர் தாவி 
அமுதுண்டு மகிழ்கிறேன். 

வயிறு நிறைந்தது. 

வாழ்க்கைத்துணை கேட்கிறது. 

தேடுகிறேன் எனக்கான 
ஓர் இணையை, 

இணை கிடைத்தது. 
இல்லறம் தொடங்கியது. 

அடுத்து, 

தங்குமிடம் அமைக்க 
தவியாய் தவிக்கிறேன், 

முட்டை இட்டு 
அடை காக்க. 

இனிய இல்லறம் 
நடக்கிறது. 

வாழ்வின் கடைசி 
மணித்துளிகளை நோக்கிப் 
போய்க் கொண்டிருக்கிறேன். 

மரணம் வருவது 
தெரியாமல் சோர்ந்து 
போய் கிடக்கிறேன். 

இதோ.!! 

மரணம் நெருங்குகிறது. 

ஒருநாள் வாழ்க்கைதான் 
ஆனாலும் 
மதசண்டை இல்லை, 
சாதிப்பிரிவினை இல்லை, 
தீண்டாமை இல்லை 

நிம்மதியுடன் விடைபெறுகிறேன் 
இந்த உலகத்தை விட்டு. 

(நன்றி : கிருஷ்ணன் ரஞ்சனா;  கவிதை: மெஸ்சர் சுரேஷ்)