இன்று சுதந்திர தகவல் தினம் – மலேசியாவில் இரண்டு மாநிலங்களில் மட்டுமே இது சட்டமாக்கப்பட்டுள்ளது!

FOI1மார்ச் 16 ஆம் தேதி உலக சுதந்திர தகவல் தினம் ஆகும். இதுவே அமெரிக்காவின் நான்காவது அதிபர் ஜேம்ஸ் மாடிசன் பிறந்தநாளுமாகும்.  ஜேம்ஸ் மாடிசன் (James madison) 1809 முதல் 1817 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தார்.  அமெரிக்காவின் 1787 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தினை எழுதியவர்களின்  முதன்மையானவர் இவர். இதனால் இவரை “அரசியல் நிறுவன சட்டத்தின் தந்தை” என  போற்றுவர். இவரது  குடிமக்களின் உரிமைகள் என்ற சட்டம் முக்கியமானது ஆகும்.  இதனால் இவரை “உரிமைகள் சட்டத்தின் தந்தை” எனப் போற்றுவர்.

 தகவல் சுதந்திரம்

தகவல் சுதந்திரம் அல்லது தகவலுக்கான உரிமை என்பது கருத்து வெளிப்பாடுச் சுதந்திரத்தின் நீட்சியாக அடிப்படை மனித உரிமையாக அனைத்துலக சட்டங்களால்  உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அரசுகளிடம் இருக்கும் தகவல்களைப் பெறுதல்,  இணையம் ஊடாகக் தகவல் பகிர்வு ஆகியவை தொடர்பான உரையாடல்களிலும்  சட்டங்களிலும் தகவல் சுதந்திரம்  முக்கியம் பெறுகிறது.

தகவல் உரிமைச் சட்டங்கள்

foi2அரசுகளிடம் இருக்கும் தகவல்களை மக்கள் பெறுவதற்கு தகவல் சுதந்திரமே சட்ட அடிப்படையாக அமைகிறது. கடந்த பத்தாண்டுகளில் பல நாடுகள் தகவல் உரிமைச் சட்டங்களை நிறைவேற்றி உள்ளன.

அந்தரங்கம் தொடர்பான உரிமைகளை உறுதி செய்யவும் தகவல் சுதந்திரம் பயன்படுகிறது. அதாவது அரசுகள் தமது தரவுத்தளங்களில் நபர்கள் பற்றி வைத்திருக்கக் கூடியத் தகவல்களைப் பெறுவதற்கும், அரசுகள் எவ்வாறான தனிநபர் பற்றிய தகவல்களைச் சேகரிக்கலாம், எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் கட்டுப்படுத்தவும் வெளிப்படுத்தவும் தகவல் சுதந்திரம் உதவுகிறது. எ.கா யார் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளார்கள், அவர்கள் என்னவாறு நடத்தப்படுகிறார்கள் போன்ற தகவல்களைப் பெறுவதற்கு, இணையப் பயன்பாடு தொடர்பான அரசுகள் என்ன தரவுகளைத் திரட்டுகின்றன என்பதை அறிவதற்கு தகவல் சுதந்திரம் உதவுகிறது.

மலேசியாவில் இது போன்ற சுதந்திரம் உள்ளதா?

2011- ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலமும் பினாங்கு மாநிலமும் தகவல் சுதந்திர சட்ட மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்கியுள்ளனர். இவை இரண்டுமே மக்கள் கூட்டணியின் ஆட்சியில் உள்ள மாநிலங்களாகும்.