உழவன் உலைவைக்கப்பட்டாலும், பொங்கள் தேவை என்பது கேவலமானது! – சாந்தலட்சுமி பெருமாள்

ponggal2உழவர் பெருநாள், தமிழர் திருநாள் பொங்கலையொட்டி மலேசிய சோசலிசக் கட்சி மற்றும் ஜெரிட் அமைப்பு ஏற்பாட்டில் அண்மையில் நடந்த பட்டிமன்றம் ஒன்று நாடுதளுவிய அளவில் பலரின் கருத்தாடல்களுக்கு ஆளாகியுள்ளது.

இப்பட்டிமன்றத்தின் ‘உழவன் மடிகிறான், பொங்கல் தேவையா?’ எனும் தலைப்பு பலரிடையே பல கேள்விகளையும் கருத்து மோதல்களையும் உருவாக்கியுள்ளது. ஒருசிலர் அறிந்தும், இன்னும் சிலர் அறியாமலும் நாளிதழ்களிலும் மின்னூடகங்களிலும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இங்கு நான் பி.எஸ்.எம். கட்சியையோ அல்லது ஜெரிட் அமைப்பையோ தற்காத்து பேச எண்ணவில்லை. என் தனிப்பட்ட கருத்தையே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்நிகழ்வு குறித்து நான் என் முகநூல் மற்றும் புலனத்தில் அழைப்பு விடுத்தபொழுது; பல தோழர்கள் இத்தலைப்பு குறித்து என்னிடம் கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு நான் கூறிய பதில், ‘இத்தலைப்பு குறித்து நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். வெறுமனே மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, கருத்துரைக்கக் கூடாது’, என்பதே. ஆனால், இத்தலைப்பு மலேசிய இந்தியரிடையே, குறிப்பாகத் தமிழரிடையே இவ்வளவு கொந்தளிப்பை ஏற்படுத்துமென நான் கிச்சின்றும் எண்ணவில்லை; குறிப்பாக, தள்ளு முள்ளுவரை செல்லுமென்று.

பி.எஸ்.எம். மற்றும் ஜெரிட்

பி.எஸ்.எம். கட்சி மற்றும் ஜெரிட் அமைப்பைச் சார்ந்தவர்கள், இந்நாட்டில் தொழிலாளர்களுக்குக் குரல் கொடுப்பதில் முதன்மையாக விளங்கும் செயல்பாட்டாளர்கள் என்பது நாம் அறிந்தது. ஆரம்பக்காலத்திலிருந்தே, தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள் என, இன, மத வேறுபாடின்றின்றி; அனைத்து வர்க்க மக்களின் நலனுக்காகவும் போராடும் இவர்கள் நிச்சயம் ஓர் இனத்தின் பண்பாட்டு விழாவை மதியாது நடக்கமாட்டார்கள்.

May day 1மேலும், இன்று நாட்டில் தொழிலாளர் தினப் பேரணியைப் பெரிய அளவில் ஏற்று நடத்தும் அரசியல் கட்சியான பி.எஸ்.எம். , பொங்கல் திருநாளையும் ஆண்டுதோறும் பல நிகழ்வுகளுடன் நடத்தி வருகின்றது. ஆக, பொங்கலின் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும் அறியாதவர்கள் அல்ல இவர்கள். ஒரு சிலர் குறைபட்டுக் கொள்வதுபோல், தமிழர் பண்டிகைக்குச் சாவுமணி அடிக்க நினைப்பவர்கள் ; பொங்கலை வெறுப்பவர்கள், மறுப்பவர்கள், அழிப்பதற்கும் ஒழிப்பதற்கும் நினைப்பவர்கள் வருடா வருடம் அதனைத் தவறாமல், மறவாமல் கொண்டாடி மகிழமாட்டார்கள். பகுத்தறிவாளர்கள் என நான் கருதிய சிலரின் கருத்துகள், எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

உலகம் முழுவதும் உழவர் பண்டிகை

முதலில் நாம் இந்த உழவர் பெருநாள், தமிழர்கள் , நமக்கு மட்டும்தான் சொந்தம் என்று மார்தட்டிக் கொள்வதிலிருந்து விடுபட வேண்டும். உலகில் இன்று பல நாடுகளில் , அவரவர் மொழி, இன, பண்பாட்டு அடிப்படையில் இத்திருநாளை உழவர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என பல கண்டங்களிலும் இப்பெருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேப் போல, இந்தியாவின் பல பாகங்களிலும் பல்வேறு பெயர்களில், அவரவர் பண்பாட்டிற்கு ஏற்றவாரு இப்பண்டிகையை உழவர்கள் மட்டுமல்ல; அனைவருமே கொண்டாடுகின்றனர். நெல், காய்கறி என்று வித்தியாசப்படுத்தி பாராமல்; ‘உழவு’ என்பதன் பொருளை, ஏர் பிடித்து நிலத்தை உழும் பணியாக மட்டும் பாராமல்; விவசாயத்தின் வழி உணவு உற்பத்தி செய்யும் அனைவரையும் நாம் கருத்தில் கொள்வது இங்கு சிறப்பாக அமையும்.

மலேசிய இந்தியர்களாகிய நாம், இப்பொங்கலை இன, மத விழாவாகக் கருதாமல், அனைவரும் இணைந்தே இதுநாள் வரை கொண்டாடி வருகிறோம், இனியும் அப்படிதான். தமிழ்ப்பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், அனைத்து ‘இந்திய’ மாணவர்களாலும் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. மலேசியாவில் தமிழர்களில் அதிகமானோர் உழவர்களாக இல்லை என்பதனால், நாம் பொங்கலைக் கொண்டாடாமல் இல்லை. அதனை ஒரு பண்பாட்டு நிகழ்வாக அனைவரும் கொண்டாடுகிறோம்.

may_day_protestsஉழவனுடன் தொடர்புடைய, முக்கியமாக நம்மிடையே பழக்கப்பட்ட ஒரு சொல் ‘பொங்கல்’. எனவேதான், ‘பொங்கல் தேவையா?’ எனத் தலைப்பிட்டுள்ளனர். ஒருவேளை, சரவாக்கில் கொண்டாடப்படும் ‘காவாய் திருநாளை’ இந்தியர்களாகிய நாம் கொண்டாடியிருந்தால்; ‘உழவன் மடிகிறான், காவாய் பெருநாள் தேவையா?’ என இப்பட்டிமன்றத்திற்குத் தலைப்பிட்டிருக்கலாம்.

ஆக, நமது தலைப்பின் நோக்கம், தமிழருடன் தொடர்புடையது எனக் கருதப்படும் ‘பொங்கல்’ திருநாளை மட்டும் ஒட்டியது அல்ல, உழவனுடன் தொடர்புடைய ‘அறுவடை’ திருநாளையும் ஒட்டியது. இரண்டிற்கும் உள்ள உள்ளார்ந்த அர்த்தத்தை நாம் உணர வேண்டும், உணர்ச்சிவயப்படாமல்.

உழவன் பாதிப்படைகிறான்; அவன் உற்பத்தி செய்யும் உணவுக்குத் தடை ஏற்படுகிறது; இதனால் மனிதக்குலத்திற்கு ஆபத்து; அவர்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள் அதனை செய்யாமல் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்; அவர்களைக் கண்டிக்க வேண்டும், அவ்வளவுதான்.

உழவர் வாழ்க்கை

உழவன் உலகெங்கிலும் இருக்கிறான்; அவன் சீரும் சிறப்புமாக வாழ்கின்றானா என்பதே நமது கேள்வி. இங்கு நான் மீண்டும் முன்வைக்க விரும்புவது, நாம் பொங்கலுக்கு எதிரானவர்கள் அல்லர், மாறாக; மடிந்துகொண்டிருக்கும் உழவுத் தொழிலுக்கு தோல் கொடுக்க விரும்புபவர்கள்.

இன்று பல நாடுகளில்,  முதலாளி வர்க்கத்தின் கொடூரப் பிடியில் அடிமைபட்டு, வறுமையாலும் கடன் தொல்லையாலும் உழவன் தனது உயிரை மாய்த்துக்கொள்கிறான். ஆதிக்க வர்க்கத்திற்கு வென்சாமரம் வீசும் அரசாங்கம், மனித உயிரின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யும் உழவர்களைப் பாதுகாக்க தவறிவிடுகிறது. மழையின்மை, நிலத்தடி நீர் வற்றி போதல், வெள்ளம், மண் சரிவு என இப்படி பல இயற்கை பேரிடர்களை நாம் காரணமாக சுட்டிக் காட்டினாலும், இதற்கு எல்லாம் மூலமாக, மனிதனின் பேராசையே முதலிடத்தில் நம் முன்னே வந்து நிற்கும்.

‘சுழன்றும்ஏர்ப்  பின்னது  உலகம்; அதனால்

உழந்தும் உழவே  தலை’  என்பது வள்ளுவன் வாக்கு.

உலகில் பல தொழில்கள் புலக்கத்தில் இருந்தாலும்; விவசாயத்தைப் பின்பற்றியே இவ்வுலகம் இயங்கும். அதனால், எவ்வளவு துன்பம் வந்தாலும், எந்தச் சூழலிலும் உழவே சிறந்த தொழிலாகும் என்பது இக்குறளின் பொருள்.

இதை உணராத சில அர்ப்பப்பதர்கள், விவசாய நிலங்களை இன்று கூறுபோட்டு வருகின்றனர், அரசின் அனுமதியோடு. அவர்களைப் பாதுகாக்கும் வகையில் ‘நில மீட்புச் சட்டங்கள்’ வேறு. ஆக, உணவு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அரசாங்கம், நாட்டு மக்களின் அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய அரசாங்கம் தனது கடமையிலிருந்து வழிதவறிவிட்டதைச் சுட்டிக்காட்ட நமக்கு ஒரு மேடை தேவைபடுகிறது.

பொறுப்பில் உள்ளவர்களின் கையாளாகாத்தனம்

உழவனை , உழவுத் தொழிலைப் பாதுகாக்காமல்; ‘ஒரே மலேசியா பொங்கல்’, ‘1008 பானைகளில் பொங்கல்’ , ‘கின்னஸ் சாதனை பொங்கல்’ என மக்களை ஏமாற்றும் அரசியல்வதிகளின் பொங்கல் நமக்குத் தேவையில்லை. ஆளுயர மாலையைப் பிரதமருக்குச் சாற்றுவதால், அன்றாட வாழ்க்கையைத் தங்குத்தடையின்றி ஒரு விவசாயியினால் ஓட்ட முடியாது.

Ponggal batu cavesஇன்று இந்த உழவர்கள் அனுபவிக்கும் அனைத்து இன்னல்களுக்கும் ஆளும்  அரசாங்கத்தின் மெத்தனப் போக்கும் ஒரு காரணம். விவசாயம் மற்றும் வேளாண்மை கைத்தொழில் அமைச்சு, இயற்கை வள மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சு, கிராமப்புற மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சு, சக்தி, பசுமை தொழில்நுட்பம், நீர் வள அமைச்சு, தோட்டத்துறை மற்றும் உற்பத்தி துறை அமைச்சு என பல அமைச்சுகள், பல அமைச்சர்கள். இன்று நாட்டில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண கடமைபட்டுள்ளார்கள். முக்கியமாக, நமது பிரதம மந்திரி, நஜிப்.

ஆனால், பொறுப்பில் உள்ள இவர்கள் தங்கள் பொறுப்பற்ற, கையாளாகாத் தனத்தை மறைக்க, பொங்கல் போன்ற பல நிகழ்வுகளை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்கின்றனர். பல வேளைகளில், அவர்களின் பிரம்மாண்டங்களுக்கு நடுவே, நமது போராட்டங்கள், கோரிக்கைகள் நீர்த்துபோய் விடுகின்றன என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.

குரல் கொடுப்போம்

ஆக, அரசியல் இலாபத்திற்காக, உழவர் பண்டிகையைக் கூறு போடுபவர்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல்; அவர்களின் நலன் காக்கப் பாடுபடும் பி.எஸ்.எம். மற்றும் ஜெரிட் போன்ற இயக்கங்களுக்குக் கண்டனம் தெரிவிப்பது சரியானதொன்றா என நாம் சிந்திக்க வேண்டும். இத்தலைப்பை ஒட்டியோ, வெட்டியோ பேசுவது இங்கு முக்கியமல்ல; விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும்; அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு காண வேண்டும்; விவசாயிகளின் பிரச்சனை அவன் ஒருவனைச் சார்ந்ததல்ல; மாறாக, ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் சார்ந்தது என்பதை நாம் உணரவேண்டும்.

இத்தலைப்பிற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் அனைவருமே சமுதாய பற்றுடனேயே இங்கு தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர் என்பதனை நான் அறிவேன்; நானும் அந்த நேர்க்கோட்டிலேயே என் கருத்தை முன்வைக்கின்றேன்.

pongal1இன, சமய, மொழி கடந்து நாம் இப்பெருநாளை கொண்டாட முனைவோம். காரணம், உழவு என்பதும் உணவு என்பதும் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது. ‘பசி வந்தால் பத்தும் போகும்’ , செத்தும் நம்மை வாழவைக்கும் உழவர்க்குத் தலை வணங்குவோம். தம் சுயநலத்திற்காக, உலக சோற்றுப்பானையை உடைத்தெறிய துணிந்த அரக்கர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்போம். உழவர்கள் உலைவைக்கப்பட்டாலும் பொங்கல் தேவை என்பது மனிதபிமானமற்றது, கேவலமானது. அது மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வேறுபட்டை தகர்கிறது.

குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல், திரணி இருந்தால் உழைப்பவர்களுக்காக உரையாட வாருங்கள். பொங்கல் என்பதை  வெறும் அழங்கார பண்பாட்டு நடவடிக்கையாக மாற்ற முயலாதீர்கள். அது ஓர் உயிரோட்டமுள்ள உணர்வு விழா. உழைப்பவர்களின் வாழ்வியலுக்கு உயிர் கொடுக்கும் நன்னாள்.

 –