விவேகனந்தா ஆசிரம்: பாரம்பரிய சொத்தாக அறிவிக்க ஆட்சேபம்

 

VivekandaNasriKulaகோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்சில் அமைந்திருக்கும் விவேகனந்தா ஆசிரம நிலத்தில் பல மாடிகளைக் கொண்ட கொண்டோக்களும் வாணிப மையமும் அமைக்க அந்த ஆசிரமத்தின் அறங்காவலர்கள் எடுத்திருந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ஆசிரமத்தை பாரம்பரிய சொத்தாக அறிவிக்கும் நோட்டீஸை கடந்த ஜனவரி 14 இல் பாரம்பரிய சொத்து இலாகா தேசிய பாரம்பரிய சொத்து சட்டத்தின் கீழ் விவேகனந்தா ஆசிரம அறங்காவலர்களிடம் தாக்கல் செய்தது. அந்த நோட்டீஸ் கடந்த வியாழக்கிழமை காலாவதியானது.

அந்த நோட்டீஸ் காலாவதியாவதற்கு ஒரு நாளுக்கு முன்பு ஆசிரம அறங்காவலர்கள் ஆசிரமத்தை பாரம்பரிய சொத்தாக அறிவிக்கப்படும் என்று பாரம்பரிய சொத்து இலாகா தாக்கல் செய்திருந்த நோட்டீஸுக்கு அவர்களின்  எழுத்து மூலமான ஆட்சேபத்தை அந்த இலாகாவிடம் அளித்ததாக டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத் தொடரில் மீண்டும் எழுப்பப் போவதாக அவர் கடந்த வாரம் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான லிம் குவான் எங், போங் குய் லுன் (புக்கிட் பிந்தாங் – இந்தத் தொகுதியில்தான் ஆசிரமம் அமைந்திருக்கிறது), குலசேகரன் மற்றும் சிலரும் அமைச்சர் நஸ்ரியை சந்தித்து அறங்காவலர்கள் தாக்கல் செய்துள்ள ஆட்சேபம் குறித்து அவரிடம் தெரிவித்தாக குலா கூறினார்.

விவேகனந்தா ஆசிரமத்தின் அறங்காவலர்கள் தெரிவித்துள்ள ஆட்சேபம் குறித்து அமைச்சர் நஸ்ரி அதிர்ச்சி அடைந்தார் என்று குலா மேலும் கூறினார்.

விவேகனந்தா ஆசிரமம் ஒரு பாரம்பரிய சொத்து என்பதால், அதனை பாரம்பரிய சொத்தாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு அமைச்சர் இணக்கம் காட்டியதாக குலா தெரிவித்தார்.

விவேகனந்தா ஆசிரம அறங்காவலர்கள் பகிரங்கமாக ஆட்சேபம் தெரிவித்திருப்பதால், அதன் மீது விரைவில் ஒரு வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறிய அமைச்சர் நஸ்ரி, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அவர்களுடைய கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியதாக குலா கூறுகிறார்.

ஆசிரமத்தை பாரம்பரிய சொத்தாக அறிவிப்பு செய்வதற்கு வலுவான ஆதரவு இருப்பதாக கூறிய அமைச்சர் நஸ்ரி, தாம் சந்தித்த பொதுமக்களும், அரசியல்வாதிகளும் ஆசிரமம் பாதுகாக்கப்படுவதை விரும்பினார்கள் என்றார்.

அமைச்சர் நஸ்ரியின் உறுதிமொழியை தாம் வரவேற்பதாகக் கூறிய குலசேகரன், விவேகனந்தா ஆசிரமத்தின் அறங்காவலர்களை மக்களின் விருப்பத்திற்கேற்ப நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.