கித்தா லவான் சனிக்கிழமை மிகப் பெரிய பேரணியை நடத்தும்

farizகித்தா  லவான்,  எதிர்வரும் சனிக்கிழமை  சோகோ  விற்பனை  வளாகத்தில்  மிகப்  பெரிய  பேரணி  ஒன்றுக்கு  ஏற்பாடு  செய்துள்ளது. அப்படியே  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  மகள்  திருமணக்  கொண்டாட்டத்தில்  கலந்துகொள்ளவும்  அது  திட்டமிட்டுள்ளது.

மார்ச்  28-இல்,  சோகோவிலிருந்து  கோலாலும்பூர்  மாநாட்டு  மையம்(கேஎல்சிசி)வரை  ஊர்வலம்  செல்லும்  திட்டமிருக்கிறது  என்றும்  ஆனால்,  அது அன்றைய  நிலைமையைப்  பொறுத்து  அமையும்  என்று  பிகேஆர்  தலைமைத்துவ  மன்ற  உறுப்பினரும்  ஜிங்கா 13  தலைவருமான ஃபாரிஸ்  மூசா கூறினார்.

“கேஎல்சிசி-க்குச்  சென்று நஜிப் அப்துல் ரசாக்கின்  மகள்  திருமணத்திலும்  கலந்துகொள்ள திட்டமுண்டு, ஆனால், சுற்றிலும்  பல  தடைகள்  இருக்கும்  என  நினைக்கிறேன்”, என்றாரவர்.

எதிர்வரும்  பேரணி,  சுமார் 10,000 பேர்  கலந்துகொண்ட  மார்ச் 7 பேரணியைவிட  பெரியதாகவும்  சிறப்பாகவும்  இருக்கும்  என  அனுமானிக்கப்படுகிறது.

இந்தத்  தடவை கித்தா லவான்  பேரணி  சிறையில்  உள்ள  அன்வார்  இப்ராகிமின்  விடுதலைக்காகக்  கோரிக்கை  விடுவதுடன்  பொருள், சேவை  வரி  மீதும்  கவனம்  செலுத்தும்  எனத்  தெரிகிறது.

அத்துடன்  அவர்கள் பிரதமர்  மற்றும்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  ஆகியோரின்  பதவி  விலகலுக்கும்  கோரிக்கை  விடுப்பார்கள்.