சிஎம்: உயர வேண்டியது பெர்ரி சேவைத்தரம்; கட்டணமல்ல

ferryபினாங்குப் பயணப் படகு(பெர்ரி)ச்  சேவையை  நடத்திவரும் நிறுவனத்தின்  இழப்புகளை  ஈடுசெய்ய கட்டணத்தை உயர்த்தும்  மத்திய  அரசாங்கத்தின்  திட்டத்துக்கு  மாநில  அரசு  எதிர்ப்புத்  தெரிவித்துள்ளது.

பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங், போக்குவரத்து  அமைச்சர்  லியோ  தியோங்  லாய்க்கு  எழுதிய  கடிதத்தில், பினாங்கு பெர்ரி   சேவையை  நடத்திவரும்  பினாங்கு  துறைமுக  நிறுவனம்(பிபிஎஸ்பி) கட்டணத்தை  உயர்த்துவதை  விடுத்து சேவைத்  தரத்தை  உயர்த்த  வேண்டும்   என்றார்.

2013-இல்  பிபிஎஸ்பி-க்கு  ஏற்பட்ட  ரிம23 மில்லியன்  இழப்பை  ஈடு  செய்ய   பினாங்கு  துறைமுக  ஆணையம்(பிபிசி)  கட்டணத்தை  உயர்த்த  நினைக்கிறது  என  லிம்  குறிப்பிட்டார்.

பிபிசி-இன்  திட்டம்  நிறைவேறினால் கார்கள்,  ரிம1.30  கூடுதலாக, மொத்தம் ரிம9  ரிங்கிட்  கட்டணம் செலுத்த  வேண்டி  இருக்கும்.

மோட்டார்  சைக்கிள்களுக்கான  கட்டணம்  ரிம1.50 கூடி ரிம3.50 ஆகும்.

“கார்களைவிட  மோட்டார்  சைக்கிளுக்கான  கட்டண உயர்வு  அதிகமாகவுள்ளது. இது  நியாயமல்ல. குறைந்த  வருமானம்  பெறுவோர்தான் பெரும்பாலும்  மோட்டார்  சைக்கிள்  பயன்படுத்துகிறார்கள்  என்பதால் இது  அவர்களுக்குப் பெரும்  சுமையாக இருக்கும்”, என  லிம்  கூறினார்.

“பிபிஎஸ்பி  நிர்வாகம்  சரியாக  இல்லை. அதனால்தான் இழப்பு  ஏற்படுகிறது. அது  கட்டணத்தை  உயத்துமுன்னர்  சேவைத் தரத்தை  உயர்த்த  வேண்டும்”, என பாகான்  எம்பியுமான  லிம்  கூறினார்.