குற்றம் கடிதல் திரைப்படத்துக்கு தேசிய விருது: தயாரிப்பாளர் கிரிஸ்டி நன்றி

62-வது தேசிய திரைப்பட விருதுகள் தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதில், ‘குற்றம் கடிதல்’ எனும் படம், சிறந்தத் தமிழ்ப் படத்துக்கான விருதை வென்றுள்ளது. J.S.K. ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இப்படத்தை க்றிஸ் பிக்சர்ஸுடன் இணைந்து தயாரித்துள்ளது. பிரம்மா G இயக்கியுள்ளார். பள்ளிக் கல்வித் துறையின் சீர்திருத்தம், ஆசிரியர் – மாணவர்கள் உறவு, தவறு செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு விவாதங்களைத் தூண்டக் கூடிய வகையில் இந்தக் ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இப்படம் கோவா, ஜிம்பாப்வே, பெங்களூர், மும்பை ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் தேசிய விருது வென்ற ‘தங்க மீன்கள்’ திரைப்படத்திற்கு அடுத்து, இவ்விருதினை வென்றதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தேசிய விருது பெறும் பெருமையை பெற்றுள்ளது J.S.K. ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம். இதனிடையே குற்றம் கடிதல் படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கிரிஸ்டி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், குற்றம் கடிதல் திரைப்படம் வெளியாகும் முன்னரே எனக்கும், எங்களின் படத்திற்கும் தாங்கள் அளித்த உற்சாகத்திற்கும் உறுதுணைக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கும், ஜே சதீஷ் குமார் அவர்களுக்கும் குற்றம் கடிதல் படத்திற்காக 12வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது பெற்றது தாங்கள் அறிந்ததே. தற்போது எங்களுக்கு மேலும் தெம்பூட்டும் விதமாக, தமிழ் படத்திற்கான தேசிய விருது குற்றம் கடிதல் படத்திற்கு கிடைத்துள்ளதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம். இத்தருணத்தில், உங்களுக்கும், தேசிய விருது தேர்வு குழுவினருக்கும், படக்குழுவினருக்கும் எங்களின் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

-http://www.dinamani.com