ரணில் – விக்கி நிழல் யுத்தம் மீண்டும் அம்பலம் – ரணிலை புறக்கணித்த சிறீதரன்

UNPPவடமாகாணத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.

சமகாலத்தில் பிரதமருக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் நிழல் யுத்தம் ஒன்று நடைபெற்று வருகின்றது.

இந்த நிழல் யுத்தம் கடந்த வாரம் யாழ்.வளலாய் பகுதியில் இடம்பெற்ற காணிகள் கையளிப்பு நிகழ்வில் வெளிப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வட மாகாண முதலமைச்சரை சந்திக்கப்போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களையே சந்திப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.

இன்றைய நிகழ்வுகளுக்கு முதலமைச்சருக்கு அழைப்பிதழ்களும் அனுப்பி வைக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றயதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடமாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பிரதமரின் யாழ். நிகழ்வுகளை நாங்கள் புறக்கணிப்போம் என தெரிவித்திருந்தனர்.

எனினும் இன்றைய தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபம் மற்றும் யாழ்.மாவட்டச் செயலகம் ஆகியவற்றில் இடம்பெற்ற நிகழ்வுகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை பிரதமரின் கிளிநொச்சி விஜயத்தை தாங்கள் புறக் கணிக்கப்போவதாக கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

வடக்கு முதல்வரை புறக்கணித்த ரணில்: ரணிலை புறக்கணித்த சிறீதரன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வட மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும்  நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்காது புறக்கணித்துள்ளார்.

இது தொடர்பாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் நிலையில் வடக்கு முதல்வர், நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு அழைப்பவிடுக்காது, ஏனைய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளமையானது தமிழ் மக்களின் தேசிய ஒற்றுமையை சிதறடிப்பதன் வடிவமே.

எனவே வடக்கு மாகாண முலமைச்சரை புறக்கணித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பங்குபற்றும் நிகழ்வுகளை நானும் புறக்கணிக்கின்றேன்.

இலங்கையின் பிரதமராக அவருடைய உத்தியோகபூர்வ பணிமனையின் ஊடாக வடக்கு மாகாணத்தின் சகல மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்து, அந்த அழைப்பின் பிரகாரம், அவர் பங்குபற்றும் நிகழ்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்குபற்றுவதே பொருத்தமானது.

அதை விடுத்து மாவட்ட அரச செயலகங்களில் உள்ள அதிகாரிகளினூடாக அழைப்பு விடுத்து அரச உயர் பண்பாட்டு நாகரீகங்களை மீறி, ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவது கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராகிய எனக்கு பொருத்தமற்றது.

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உக்கிரவடிமாக ரணில் விக்கிமசிங்க திகழ்கின்றார். தமிழ் தேசியத்தின் மீதான தீராத தாகம் கொண்டு பயணிக்கும் கொள்கைவாதிகளையும், மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் பிரித்து ஒற்றுமையை சிதைத்து, தமிழர்களின் சுதந்திர தாகம் கொண்ட ஆன்மாவை அடக்கலாமென அவர் செயற்படுவதாகவே உணரமுடிகின்றது.

வடக்கு, கிழக்கிலும், மலையகத்திலும் ஏன் உலகமெல்லாம் வாழும் புலம்பெயர் மக்களினதும் ஏகோபித்த வரவேற்பையும் மதிப்பையும் பெற்ற கடந்த வடமாகாண சபை தேர்தலில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் விருப்புவாக்குகளையும் பெற்ற வடக்கு மாகாண முதலமைச்சரை புறக்கணித்து வடக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிகழ்வுகளை நடத்துவதானது ஜனநாயகத்திற்கும், நல்லாட்சிக்கும், இன சகிப்புத்தன்மைக்கும், நல்லிணக்கத்துக்கும், மக்கள் ஆணைக்கும் வைக்கப்பட்ட வேட்டாகும்.

கடந்த கால வரலாற்று பாடங்களை தமிழ்மக்களாகிய நாம் உற்று நோக்கும் போது இன்றைக்கும் தன் பௌத்த பேரினவாத சிந்தனையில் இருந்து வெளிவராத தென்னிலங்கைத் தலைமைகளின் ஒரு வடிவமாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளதை நாம் உணர்கின்றோம் என அவரது அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: