கர்நாடகம் புதிய அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும்: மத்திய அரசை வலியுறுத்தி தமிழகப் பேரவையில் தீர்மானம்

மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்த இந்தத் தீர்மானம், அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.

கர்நாடகத்தின் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, சட்டப் பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை கொண்டு வந்த தீர்மானத்தின் விவரம்:

மேக்கேதாட்டுவில் அணைகள் கட்டும் திட்டம் போன்ற எந்தவொரு திட்டத்தையும் கர்நாடகம் செயல்படுத்த முயற்சிக்கக் கூடாது என்றும், கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு டிசம்பரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததன் காரணமாக, தமிழகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.25 கோடியை கர்நாடக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கியிருப்பதற்கு சட்டப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தையும், எதிர்ப்பையும் தெரிவிக்கிறது.

கர்நாடக அரசு, மேக்கேதாட்டு நீர்மின் திட்டம் உள்பட வேறு பல திட்டங்களை எடுத்துக் கொள்வதை நிறுத்தி வைக்கும்படி கர்நாடகத்துக்கு அறிவுரை வழங்க கடந்த 2013-ஆம் ஆண்டு அன்றைய பிரதமரை கடிதம் வாயிலாக வலியுறுத்தினார் ஜெயலலிதா. கர்நாடக அரசானது, காவிரி நீர்வாரி நிகமம் என்ற அமைப்பின் மூலமாக, பல நவீனமயமாக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதை நிறுத்தி வைக்கவும், அன்றைய பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையிலும், தமிழகத்தின் அனுமதியில்லாமலும் புதிய நீர்த் தேக்கத் திட்டங்களை கர்நாடகம் மேற்கொள்ள தடை விதிக்கவும், மேல்முறையீட்டு மனுக்களில் தீர்வு ஏற்படும் வரையிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையிலும் இப்போதைய நிலையே கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரலில் வழக்குத் தொடரப்பட்டது.

மேக்கேதாட்டுவில் புதிய அணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு எழுதிய கடிதத்துக்கும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவுக்கும், அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கியதை சுட்டிக் காட்டி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்துக்கும், இதுதொடர்பாக, கடந்த வியாழக்கிழமை கூடுதல் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ததற்கும், தனது பாராட்டையும், நன்றியையும் சட்டப் பேரவை தெரிவித்துக் கொள்கிறது.

மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை கர்நாடகத்தால் தயாரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் எனவும், காவிரி மேலாண்மை வாரியம் செயலாக்கத்துக்கு வரும் வரையிலும், தமிழகத்தின் அனுமதியின்றி மேக்கேதாட்டுவில் அணை, நீர்த்தேக்கம் போன்ற எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு கர்நாடக அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என உரிய அறிவுரைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை சட்டப் பேரவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என்ற தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார்.

இந்தத் தீர்மானத்தின் மீது திமுக (துரைமுருகன்), மார்க்சிஸ்ட் (கே.பாலகிருஷ்ணன்), இந்திய கம்யூனிஸ்ட் (ஆறுமுகம்) உள்ளிட்ட பேரவையில் உள்ள அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பேசினர். இதன்பின், தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.

பிரதமருடன் தமிழக எம்.பி.க்கள் இன்று சந்திப்பு

தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சனிக்கிழமை (மார்ச் 28) மாலை 5 மணிக்குச் சந்திக்கின்றனர்.

மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட எதிர்ப்புத் தெரிவித்து நிறைவேற்றப்பட்ட பேரவைத் தீர்மானத்தை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் நேரில் சந்தித்து வழங்குவர் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அதன்படி அதிமுக, திமுக, பாமக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து கர்நாடக அரசுக்கு எதிரான பேரவைத் தீர்மானத்தை அளிக்க உள்ளனர். தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு,””பேரவைத் தீர்மானத்தை வழங்கி, தமிழகத்தின் கவலையையும், நிலைப்பாட்டையும் பிரதமரிடம் எடுத்துரைக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தத் தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.

 அணை கட்டுவது உறுதி: கர்நாடக அமைச்சர்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் திட்டமிட்டபடி அணை கட்டுவது உறுதி என்று, கர்நாடக சட்ட மேலவையில் நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.

மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம் என்று, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது தொடர்பாக கர்நாடக மேலவையில் பாஜக உறுப்பினர் கணேஷ் கார்னிக் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினார். இதை ஆதரித்து மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா பேசியதாவது:

அணை கட்ட பாஜக ஆதரவு: மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை (மார்ச் 28) தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அணையின் கட்டுமானப் பணியை விரைவில் தொடங்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு பாஜக ஆதரவளிக்கும். பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து முறையிடவும், உச்ச நீதிமன்றத்தை அணுகவும் அரசுக்கு பாஜக ஒத்துழைப்பு அளிக்கும் என்றார்.

இதற்குப் பதிலளித்து நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியது:

அணை கட்டுவது உறுதி: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு அரசியல், சட்ட ரீதியாக தமிழக அரசு தடைகளை ஏற்படுத்தினாலும், அதையும் மீறி அணை கட்டுவது உறுதி. தமிழகத்தின் எதிர்ப்பைச் சமாளிக்க கர்நாடக அரசு தயாராக உள்ளது.

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு திட்ட விவர அறிக்கையைத் தயாரிக்க உலகளாவிய விருப்ப மனு கோரப்பட்டு, 5 நிறுவனங்கள் விண்ணப்பங்கள் அளித்துள்ளன. திட்ட விவர அறிக்கை தயாரிக்கப்பட்டதும், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கானப் பணிகள் தொடங்கப்படும். மேக்கேதாட்டுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு விழிப்புடன் செயல்பட்டு வருவதோடு, சட்ட நிபுணர்களோடு தொடர்ந்து ஆலோசித்து வருகிறது என்றார்.

-http://www.dinamani.com

TAGS: