ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாம்புக்கும், கொசுக்கும், வியாதிக்கும் இரையானதுதான் இந்தியர்களின் சாதணையா? – ஜீவி காத்தையா

estate-workers-old-photoகாலனித்துவ மலாயாவை, சுதந்திர மலேசியாவை கடந்த 150 ஆண்டுகளாக மேம்படுத்தி, வளப்படுத்தி பிரிட்டீஷ் பேரரசை இரண்டவாது உலகப் போரில் காப்பாற்றி, பலரை செல்வந்தர்களாகவும், பல நாடுகளை, மலேசியாவும் உட்பட, செல்வந்த நாடுகளாகவும் உயர உழைத்த  இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்தியர்களும் அவர்களின் ஏழு தலைமுறை சந்ததியினரும் கண்ட, அனுபவித்த பலன்கள் என்ன என்ற கேள்வியை “துயரார்ந்த அனாதைகள் – மலேசியாவில் இந்தியர்கள்” (“Tragic Orphans – Indians in Malaysia”) என்ற நூலின் ஆசிரியர் கார்ல் வடிவேலா பெல்லே எழுப்பினார்.

இந்நூலை எழுதுவதற்கான ஆய்வுகளை லண்டன் ஓரியண்டல் மற்றும் இந்தியா அலுவலகம் நூலகத்தில் மேற்கொண்ட போது 1957 ஆம் ஆண்டு மலாயா பெடரேசன் மக்கள் தொகை அறிக்கையில் 4 மில்லியன் இந்தியர்கள் மலாயாவில் வேலை செய்வதற்காக கொண்டு வரப்பட்டனர். அவர்களில் 2.8 மில்லியன் பேர் பின்னர் இந்தியாவுக்கு திரும்பிச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில், “எஞ்சிய 1.2 மில்லியன் நிகர குடியேறிகளில் பெரும்பாலானோர் வியாதி, பாம்புக்கடி, சோர்வு மற்றும் ஊட்டச்சத்து இன்மை ஆகியவற்றால் துடைத்தொழிக்கப்பட்டதாகத் தெரிகிறது, ஏனென்றால் மலாயாவில் இந்திய மக்களின் எண்ணிக்கை 858,614 மட்டுமே. அதில் 62.1 விழுக்காட்டினர் உள்நாட்டில் பிறந்தவர்கள்” என்ற கருத்து அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை கார்ல் வடிவேலா அவரது உரையில் சுட்டிக் காட்டினார்.

(இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளிவிபரப்படி இந்நாட்டில் வேலை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட  4 மில்லியன் இந்தியர்களில் 687,718 பேர் துடைத்தொழிக்கப்பட்டனர். இவ்வளவு இந்தியர்கள் பலியாகி இருக்கின்றனர் என்பதை  சுட்டிக் காட்டும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் தெலுக் இந்தானை சேர்ந்த டாக்டர் (டி.எஸ்?) மேனன் என்பவர் எழுதியிருந்த ஒரு கட்டுரையில் இறந்த போன இந்தியர்கள் அனைவரையும் ஒன்றாக போட்டு கொளுத்தி இருந்தால் மலாயாவின் வானத்தில் பல மாதங்களுக்கு இருளே இருந்திருக்காது என்று குறிப்பிட்டிருந்தார்.)

carl-belle“பொருளாதார மற்றும் கட்டமைப்பு அடித்தளங்களை அமைத்து வளர்ச்சி கண்டு வரும் நவீன மலேசிய பொருளாதாரம் தோன்றுவதற்கு வழிவகுத்த அந்த பெயரற்ற இந்தியர்களுக்கு அதிகாரப்பூர்வமான நினைவுச் சின்னம் ஏதும் இல்லை. ஆனால், தொழிலாளர் வர்க்க இந்தியர்கள் அவர்களின் மூதாதையர்கள் விட்டுச் சென்ற உழைப்பின் சின்னத்தை மலேசிய தண்டவாளக் குறுக்குக் கட்டைகளிலும், ரப்பர் மரங்களிலும் காணலாம் என்று உங்களுக்கு கூறுவர்; ஒவ்வொன்றும் ஓர் இந்தியரின் உயிர் தியாகத்தை பிரதிபலிக்கிறது”, என்று கார்ல் வடிவேலா மேலும் கூறினார்.

கார்ல் வடிவேலா பெலே எழுதிய “துயரார்ந்த அனாதைகள் – மலேசியாவில் இந்தியர்கள்” (“Tragic Orphans – Indians in Malaysia”) என்ற நூல் செம்பருத்தி.கோம் வெளியீடாகும். இந்நூல் வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த மாதம் கோலாலம்பூர் விஸ்மா துன் சம்பந்தனில்  தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி. பசுபதியின் தலைமையில் நடைபெற்றது.

இந்தியனே, உனக்கு என்ன இருக்கிறது? 

சுமார் 100 ஆர்வலர்கள் பங்கேற்ற அந்நிகழ்ச்சியை சுவாராம் மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் வழி நடத்தினார்.

இந்நாட்டிற்கு கூலிகளாக கொண்டு வரப்பட்ட இந்தியர்கள் பற்றி இதற்கு முன்னர் சில சிறப்பான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவை இந்திய தொழிலாளர்கள் எவ்வாறு சாதி, சமய அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டு அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது என்பதை விவரிக்கின்றன. கார்ல் வடிவேலாவின் நூல் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர்கள் அடிமைகளாக்கப்பட்டு அவர்களின் உழைப்பால் எப்படி பல நாடுகள், மலேசியா உட்பட, பொருளாதார ஏற்றம் கண்டன என்பதை வெளிப்படுத்துகிறது என்று கா. ஆறுமுகம் கூறினார்.

K. Arumugam Bersih“மலாயா/மலேசியாவை வளப்படுத்திய இந்திய தொழிலாளியே, உனக்கு நீ வளப்படுத்திய இந்நாட்டில் என்ன இருக்கிறது?”, என்று ஆசிரியர் கேட்பதை இந்நூலில் காணலாம் என்றார் ஆறுமுகம். மேலும், சுரண்டப்படும் கொள்கைகளை கொண்டு ஒரு சுரண்டும் பொருளாதாரத்தை உருவாக்கிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியதின் ஆதிக்கம் மலேசியா விடுதலையடைந்தும் ஒழிக்கப்பட வில்லை என்றார்.

தோட்டப்புற தொழிலாளர்கள் ஒரு முழுமையான வளர்ச்சியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட ஒரு வர்க்கமாகும். அதில் பெரும்பான்மை இந்தியர்கள், இன அடிப்படை கொண்ட அரசியல் கொள்கையால், பல மலேசிய திட்டங்கள் இருந்தும் பிந்தள்ளப்பட்டனர் என்றார் ஆறுமுகம்.

சிறந்த வரலாற்று குறிப்பு

இந்தியர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள பல நூல்களில் கெர்நியல் சிங் சாந்து மற்றும் சின்னப்பா அரசரத்னம் ஆகியோரின் நூல்களுக்குப் பின்னர் எழுதப்பட்டுள்ள மிக முக்கியமான நூல் “துயரார்ந்த அனாதைகள் – மலேசியாவில் இந்தியர்கள்”. இதன் ஆசிரியர் கார்ல் வடிவேலா பெல்லே மலேசியாவிலுள்ள ஆஸ்திரேலிய ஹைகமிசனில் ஆஸ்திரேலிய அரசதந்திரியாக பணியாற்றியவர் என்று நூலாசிரியர் கார்ல் வடிவேலாவை திறந்தவெளி பல்கலைக்கழக விரிவுரையாளரான முனைவர் எஸ். நாகராஜன் அறிமுகம் செய்தார்.

இந்நூல் இந்நாட்டு இந்தியர்களின் வரலாற்றை புதியதோர் கோணத்தில் பதிவு செய்துள்ளது. 1941 ஆம் ஆண்டில், கிள்ளானில் இந்தியர்கள் நடத்திய போராட்டத்திற்குப் பின்னர் இண்ட்ராப் இயக்கத்தின் எழுச்சிப் போராட்டம் இந்நாட்டு இந்தியர்களின் வரலாற்றில் முக்கியமானதோர் நிகழ்ச்சியாகும். அதற்கு ஆசிரியர் வடிவேலா முக்கியத்துவம் அளித்துள்ளார் என்று நாகராஜன் கூறினார்.

இந்நூலில்  இந்தியர்களின் வரலாற்றைப் பற்றி கூறப்பட்டுள்ளவை நமது கவனத்தை ஈர்க்கின்றன. நன்கு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ள இந்த வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு சம்பவங்கள் குறித்து  மேலும் ஆய்வு மேற்கொள்வது அவசியமாகிறது என்று கூறிய முனைவர் நாகராஜன், அதனைச் செய்வதற்கு இன்னும் பலர் முன்வர வேண்டும் என்றார்.

இந்தியர்களை அழித்துவிட முடியாது

Lim-Teck-Gheeஇந்நாட்டின் பொருளாதார வளப்பத்திற்கு ஈடுயிணையற்ற உழைப்பைத் தந்த இந்தியர்களின் அடையாளமாக இருப்பது தண்டவாளக் குறுக்குக் கட்டைகளும் ரப்பர் மரங்களும்தான் என்று நூலாசிரியர் வடிவேலா கூறுகிறார். நோய்நொடிகளாலும், பசிப்பட்டினியாலும். பாம்பு மற்றும் கொசு கடிகளாலும், அயரா உழைப்பினால் ஏற்பட்ட சோர்வினாலும் பல இலட்சம் இந்திய தொழிலாளர்கள் இந்நாட்டில் துடைத்தொழிக்கப்பட்டனர் என்று வேதணையோடு குறிப்பிடுகிறார் நூலாசிரியர். ஆனாலும், அவர்கள் முக்கியமானவர்கள் என்பது நூலாசிரியரின் கணிப்பு. ஏனென்றால், இத்தனை ஆராத்துயரங்களை அனுபவித்தும் இந்தியர்கள் இந்த நாட்டிலும், உலகமுழுவதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முனைவர் லிம் டெக் கீ கூறினார்.

இந்நூல் பல ஆண்டுகால ஆய்வுக்குப் பின்னர் எழுதப்பட்ட மிகச் சிறந்த நூல் என்று டெக் கீ பாராட்டினார்.

இது இந்தியர்கள் பற்றிய பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகவியல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும் என்றாரவர்.

“என்ன நடந்தது என்பது பற்றிய உண்மை நமக்கு தெரிய வேண்டும், ஒளிவுமறைவில்லாத உண்மை தெரிய வேண்டும். அதனை நாடியறிபவர்களின் முன்னோடி கார்ல்”, என்றார் டெக் கீ.

அனைவரும் படிக்க வேண்டும்

இந்நூலை ஆனந்தகிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டும். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் கொடுக்க வேண்டும். இதற்கான விடையை அவர்களிடமிருந்து காண வேண்டும் என்பதை டெக் கீ வலியுறுத்தினார்.

Tragicorphans2முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவியிடம் அஸ்லி (ASLI-CPPS) என்ற அமைப்பு இந்தியர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளது மற்றும் அதற்கான தீர்வு ஆகியவை குறித்து வழங்கிய அறிக்கை பற்றி டெக் கீ குறிப்பிட்டார். அந்த அறிக்கை எதிரணியிடமும் கொடுக்கப்பட்டது என்று கூறிய அவர், இதுவரையில் எதுவும் நடக்கவில்லை என்றார் (இந்த அறிக்கை நவம்பர் மற்றும் டிசம்பர் 2006 செம்பருத்தி இதழில் வெளியிடப்பட்டுள்ளது).

இந்திய சமூகத்தில் டத்தோக்களும் டான் ஸ்ரீகளும், அரசு சார்பற்ற அமைப்புகளும் இருக்கின்றன. மேல்மட்டத்தினரும் இருக்கின்றனர். ஆனால், கீழ்மட்ட இந்தியர்கள் சுரண்டப்படுகின்றனர் என்றாரவர்.

இவற்றை எல்லாம் கண்டு சோர்வடையக்கூடாது; தோல்வி மனப்பான்மைக்கு இடம் கொடுக்கக்கூடாது.

சுய முயற்சியும், சுய பலமும்தான் வெற்றிக்கான ஒரே வழி. அதை நிரூபித்தவர்கள் உலகமுழுவதும் வாழும் இந்தியர்கள் என்று டெக் கீ கூறினார்.

வரலாற்றின் ஒவ்வொரு அங்கமும் பதிவு செய்யப்பட வேண்டும்

“மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை” என்ற நூலை 17 ஆண்டுகால ஆய்வுக்குப் பின்னர் எழுதிய ஜானகிராமன் மாணிக்கம் அவரது வாழ்க்கையில் அவர் கடந்து வந்த பாதையை சுருக்கமாகக் கூறி இந்தியர்களின் அடையாளத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்ற அவரது வேட்கையை விளக்கினார்.

தொடக்கம் முதல் இறுதி வரையில் நமது அடையாளம் பதிவு செய்யப்பட வேண்டும். அது நமது உழைப்புக்குச் சான்றாக அமையும் என்பதை ஜானகிராமன் வலியுறுத்தினார்.

ஆய்வு அடிப்படையிலான நூல்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அரசியல் தீர்வுதான் வழி

pathi_tamil_foundationஇந்தியர்களில் 10 விழுக்காட்டினர் நல்ல நிலையில் இதர சமூகத்தினர்களான மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்களைப் போல் வாழ்கின்றனர். ஆனால், கீழ்மட்டத்திலுள்ள  இந்தியர்களில் 40 விழுக்காட்டினர் மிகக் குறைந்த வருமானம் பெருபவர்களாக இருக்கின்றனர். இந்த வட்டத்திலிருந்து வெளிப்படுவதுதான் நாம் காணும் விரும்பத்தகாத செயல்பாடுகள் என்று “துயரார்ந்த அனாதைகள் – மலேசியாவில் இந்தியர்கள்” நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றிருந்த தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி. பசுபதி கூறினார்.

இந்தக் கீழ்மட்ட நிலையிலிருந்த இந்திய தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தொழிற்சங்கம் உதவத் தவறி விட்டது. தோட்டங்கள் துண்டாடப்பட்டது இதற்கு சான்றாகும் என்றாரவர்.

அரசியல் தீர்வின் வழி மட்டுமே இந்த 40 விழுக்காட்டினர் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவது சாத்தியமாகும்.

இது முதலாவதாக ஒரு தமிழர் பிரச்சனை; அடுத்து, இந்தியர் பிரச்சனை; இறுதியில், நாட்டுப் பிரச்சனை. இதற்கு தீர்வு காண மஇகா தவறி விட்டது என்றார் பசுபதி.

நமக்கு சக்தி வாய்ந்த ஒரு கண்காணிப்பு அமைப்பு தேவைப்படுகிறது. நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அது பயன்படுத்தப்படவில்லை என்று கூறிய பசுபதி, கண்காணிப்பு பணியை நாம் செய்ய வேண்டும்; கண்டறியப்படும் பிரச்சனைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றாரவர்.

இப்பணியை கார்ல் வடிவேலாவின் “துயரார்ந்த அனாதைகள் – மலேசியாவில் இந்தியர்கள்” என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு தொடங்குவோம் என்று கூறி நூல் வெளியீட்டை தொடக்கி வைத்தார் பசுபதி.

அடிமையாக்கப்பட்ட இந்தியர்கள்

இந்தியர்கள் மலாயா தீபகற்பத்திற்கோ, ஒட்டுமொத்த மலாய் கடல் தீவுகளுக்கோ புதியவர்கள் அல்லர். கிறிஸ்துவ ஆண்டுகால தொடக்கத்திற்கு முன்பிருந்தே அவர்களின் பண்பாடுகள், ஆட்சிமுறைகள் இந்நாடுகளில் நிலைகொண்டிருந்தன என்று கூறிய கார்ல், மலாயாவில் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக பல்வேறு திட்டங்கள் வழி கொண்டுவரப்பட்ட இந்தியர்கள் அடிமைகளைப் போல் நடத்தப்பட்டனர் என்றார்.

பொருளாதார வலுவற்ற நிலையில் உழன்ற இந்தியர்களை அதிகாரவர்கத்தினரும் மேல்மட்ட மக்களும் துச்சமாக மதித்து ஓரங்கட்டினர். “நவீன மலேசியாவில் இந்திய தொழிலாளர் வர்க்கத்தினர் சமூகத்தின் எச்சமாக ஒதுக்கித்தள்ளப்பட்டு அவர்களை தொழிலாளர்கள்,  குடிகாரர்கள், நம்பத்தகாதவர்கள், கறுப்பர்கள், துர்நாற்றம் படைத்தவர்கள், ஆதரவை எதிர்பார்த்து வாழ்பவர்கள், எப்போதுமே முறையீடு செய்பவர்கள்” என்று மற்றவர்களால் இந்தியர்கள் தூற்றப்பட்டனர் என்று இந்தியர்கள் அனுபவதித்த எல்லையற்ற துன்பங்கள் பற்றி இண்ட்ராப் தலைவர்களில் ஒருவரான பி. உதயகுமார் கூறியிருந்ததை கார்ல் அவரது உரையில் குறிப்பிட்டார்.

Uthaya - Oct3பிரிட்டீஷாரால் உருவாக்கப்பட்டு அமலாக்கம் செய்யப்பட்ட இனவாத அரசியல் மலாயா/  மலேசிய அரசியல், சமுதாய, கலாச்சார மற்றும் சமய வாழ்க்கையை ஆட்கொண்டது. இப்போது அந்த “இனவாத” எல்லைகள் மீண்டும் ஆழப்படுத்தப்பட்டு   அரசியல் வானில் இன அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. “இனம்” சார்ந்த பிரச்சனைகளை முதன்மையாக, ஏன், அடிப்படையாகக் கொண்டு அதிகாரப்பூர்வமான கருத்து பரிமாற்றங்களைத் தீட்டும் உலகிலுள்ள வெகு சில நாடுகளில் மலேசியாவும் ஒன்றாக இருந்து வருகிறது. அனைத்தும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் நடைமுறையில், எவ்வித பொருளாதார வளமுமற்ற சிறுபான்மை இனத்தவரான இந்தியர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர் என்று கார்ல் மேலும் கூறினார்.

உண்மையாகவே, கடந்த 40 ஆண்டுகளில் இந்தியர்களின் நிலைமை இன்னும் மோசமடைந்து விட்டதாக சில ஆய்வாளர்கள் கூறியிருப்பதை கார்ல் சுட்டிக் காட்டினார்.

மொத்தத்தில், 150 வருடங்களுக்கு மேற்பட்ட, ஏழு தலைமுறைகளைக் கொண்ட இந்திய தொழிலாளர் குடும்பங்களை உள்ளடக்கிய, ஏழை இந்தியர்களின் வரலாறு தொடர்ந்து ஓரங்கட்டப்பட்ட, துயரத்திற்கு உட்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது.

எதிர்ப்பு தோன்றியது

இந்தியர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு எதிராக எதிர்ப்புகள் தோன்றின. கிள்ளான் 1941 ஆம் ஆண்டு வேலைநிறுத்தம், தொண்டர்படையின் போராட்டம், தொழிற்சங்கங்களின் போராட்டம் போன்றவை முறியடிக்கப்பட்டன.

Tragicorphans1புதிய மலாயா/மலேசிய அரசாங்க கட்டமைப்பில் இந்தியர்களின் குரலை பிரதிநிதிக்கும் நோக்கத்தில் அம்னோ-மசீச கூட்டணியில் இணைந்ததால் இந்தியர்களின் அரசியல் கட்சியான மலாயன் இந்தியன் காங்கிரஸ் இந்தியர்களின் மேம்பாட்டிற்கான அதன் கொள்கைகளைக் கைவிடும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இந்த இனவாதக் கொள்கைகளும், 1971 ஆம் ஆண்டில் அமலாக்கம் கண்ட புதிய பொருளாதாரக் கொள்கையும், அதனால் பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு கிடைக்க வேண்டிய சமுதாய, வாழ்க்கைத் தொழில் சார்ந்த, பொருளாதார மற்றும் கல்வி போன்றவற்றுக்கான வாய்ப்புகள் சுருக்கம் கண்டதால், பல இந்தியர்கள் மேம்பாடடைவதற்கான கதவுகள் மூடப்பட்டன என்றார் கார்ல்.

ஹிண்ட்ராப் ஊட்டிய எழுச்சி

தாங்கள் அதிகாரப்பூர்வமாக உதாசீனப்படுத்தப்படுவதை இந்தியர்கள் உணர்ந்திருந்தனர். தோட்டங்கள் துண்டாடப்பட்டது, 1969 ஆம் ஆண்டில் ஏற்பட்ட குடியுரிமை பிரச்சனை, தோட்டங்களிலிருந்து இந்தியர்கள் பெருமளவில் கட்டாயமாக வெளியேற்றப்பட்டது, 2003 ஆம் ஆண்டு நடந்த கம்போங் மேடான் இனக் கலவரம் மீது விசாரணை மேற்கொள்ளப்படாதது மற்றும் தமிழ்ப்பள்ளிகள் மீதான பொதுவான அலட்சியம் ஆகியவை அவற்றில் அடங்கும் என்று அவர் விவரித்தார்.

இத்தனை அசாதாரணமான சம்பவங்களுடன் இந்து கோயில்கள் அழிப்பு நடவடிக்கை ஹிண்ட்ராப் இயக்கத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. கோயில் ஒழிப்பு விவகாரத்தை முன்வைத்து இந்திய கீழ்மட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தினருக்கு சவால் விட்டனர்.  ஹிண்ட்ராப் இயக்கத்தின் தோற்றத்திற்கு இந்து கோயில்கள் விவகாரங்கள் அடிப்படையாக இருந்தாலும், அது விரைவில் இந்தியர்களின் சமூக, பொருளாதார, கல்வி போன்ற பிரச்சனைகளை அதன் போராட்டத்தின் முக்கிய அங்கங்களாக முன்வைத்தது.

ஹிண்ட்ராப்பின் போராட்டம் இந்து சமயத்திற்கு அப்பாற்சென்று சமுதாய நீதிக்கான போராட்டத்தை நடத்தியது இதர சமயங்களைச் சார்ந்த இந்தியர்களை கவர்ந்தது. அதன் விளைவாக மார்ச் 8, 2008 பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் கைவிடப்பட்டது. இது இந்தியர்களின் அதிருப்தி அளவைக் காட்டியது என்பதோடு “அன்பான உதாசீனம்” இனிமேலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதையும், எதிர்காலத்தில் பாரிசானுக்காக இந்தியர்களின் ஆதரவுக்கு நிபந்தனை உண்டு என்பதையும் தெளிவுபடுத்தியது என்று கார்ல் கூறினார்.

yrsayambiganajibseriouslyநஜிப் பிரதமர் பதவி ஏற்ற பின்னர், இந்தியர்கள் விவகாரத்தில் சற்று கவனம் செலுத்த தொடங்கியது மட்டுமல்லாமல் சில உருப்படியான சீர்திருத்தங்களையும் முன்வைத்தார். இவை பல இந்தியர்களின் வரவேற்பை பெற்றது. அத்துடன் அவரது ஒரே மலேசியா கொள்கை அனைவரையும் அரவணைத்துக்கொள்ளும் ஒரு மலேசியாவை உருவாக்குவதாகும் என்று கூறப்பட்டதுடன், இனவாதக் கோட்டை மிருதுவாக்கி  உண்மையான நிலைக்கேற்ப இன மற்றும் சமய பன்மை வாதத்தை ஏற்றுக்கொள்வதாகும்.  நஜிப்பின் இந்நிலைக்கு அவர்களுக்குள்ளே ஏற்பட்ட எதிர்ப்பு மற்றும் ஆழ்ந்து பிளவுபட்டுக்கிடக்கும் மஇகாவால் புதிய தலைமைத்துவத்தையும் புதிய கொள்கைகளையும் உருவாக்க இயலாமல் போனது அல்லது அதன் அடிப்படை உறுப்பினர்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தத் தவறியது போன்றவற்றால் நஜிப்பின் திட்டம் விட்டுக்கொடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று கார்ல் கருத்து தெரிவித்தார்.

மீண்டும் பழைய, புதிய பொருளாதார கொள்கைக்கு திரும்ப வேண்டும்

மலாய்க்காரர்களின் வறுமையை நிவர்த்தி செய்யத் தவறினால், அதனால் விளையும் சமுதாய மற்றும் அரசியல் ஆபத்துகளை முந்தைய தலைமுறையைச் சேர்ந்த அம்னோ தலைவர்கள், நஜிப்பின் தந்தை அப்துல் ரசாக் உட்பட, தெரிந்திருந்தனர். இந்தியர்களின் வறுமைக்கு அரசியல் எதிர்வினையைத் திட்டமிட பாரிசான் நேசனல் அதே அளவுகோலைப் பயன்படுத்தப்படுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டியதாகும்.

புதிய பொருளாதாரக் கொள்கை 1971 ஆம் ஆண்டில் அமலாக்கப்பட்ட போது இன வேறுபாடின்றி வறுமை நிவர்த்தி செய்யப்படுவதை அது நோக்கமாகக் கொண்டிருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கார்ல் வலியுறுத்திக் கூறினார்.

இறுதியாக, தொடக்க கால புதிய பொருளாதாரக் கொள்கையின்  சிறந்த குறிக்கோளுக்கு மீண்டும் செல்வது இந்திய ஏழைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பேருதவியாக இருக்கும் என்று கார்ல் கூறினார்