ஐஜிபி-யைக் கண்டிக்கும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது

1-simபோலீஸ்  படைத்  தலைவர்(ஐஜிபி) காலிட்  அபு  பக்காரைக்  கண்டிப்பதற்காக  பக்கத்தான்  ரக்யாட்  கொண்டு  வந்த  தீர்மானத்தை  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  தள்ளுபடி  செய்தார்.
ஐஜிபி  அவரின்  அதிகாரத்துக்கு  ஏற்பவே  செயல்பட்டு  வந்திருக்கிறார்  என்பதால்  அத்தீர்மானத்தை  ஏற்க  வேண்டிய  அவசியமில்லை  என  மக்களவைத்  தலைவர்  பதில்  அளித்திருப்பதாக  தீர்மானத்தைக்  கொண்டு  வந்த  பிகேஆர் பாயான்  பாரு  எம்பி,  சிம்  ட்ஸே  ட்ஸின்  கூறினார்.

முக்கியமான  தீர்மானங்கள் ஏற்கப்படுவதில்லை  என்றும்  இப்படிப்பட்ட  போக்கு  கவலை  அளிப்பதாகவும்  சிம்  கூறினார்.

“நான்  மார்ச் 25-இல் அத்தீர்மானத்தை  அனுப்பி  வைத்தேன். அதை  அனுப்பிய  பிறகு  நிலைமை  மேலும்  மோசமடைந்துள்ளது.

“இனி,  நிராகரிக்கப்பட்ட  தீர்மானத்தை  விவாதிக்க  இன்னொரு  தீர்மானத்தைப்  பதிவு  செய்ய  வேண்டும்”, என்றாரவர். கடந்த  வாரம்  நிகழ்ந்த  பல  கைது  நடவடிக்கைகளை  மனத்தில்  வைத்துத்தான்  சிம்  அவ்வாறு கூறினார்.  கைது  செய்யப்பட்டவர்களில்  எதிரணித்  தலைவர்களும்  உள்ளிட்டிருந்தனர்.

நாடாளுமன்றத்தில்  ஆற்றிய  உரைக்காக பிகேஆர்  உதவித்  தலைவர்  நூருல்  இஸ்ஸா  கைது  செய்யப்பட்டதன்  தொடர்பில்  ஐஜிபி-யைக்  கண்டிப்பதற்காக  அத்தீர்மானத்தை  எதிரணி  கொண்டு  வந்திருந்தது.