நஸ்ரி: ஹூடுட் மசோதாவை அமைச்சரவை விவாதிக்கவில்லை

 

Nazricabinethududகடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஹூடுட் மசோதா விவாதிக்கப்படவில்லை என்று சுற்றுலா மற்றும் பண்பாடு அமைச்சர் நாஸ்ரி அப்துல் அசிஸ் இன்று கூறினார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் நஜிப்பின் மழுப்பல் போக்கு குறித்து குடையப்பட்ட போது: “அதை அவரிடம் (நஜிப்) கேளுங்கள்” என்று நஸ்ரி பதில் அளித்தார்.

கடந்த மார்ச் 19 இல், கிளந்தான் சட்டமன்றம் ஹூடுட் சட்ட திருத்தங்களை நிறைவேற்றியது. அதே நாளில் பிரதமர் நஜிப் பாரிசான் கூட்டணி தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். ஆனால், இந்த சர்ச்சைக்குரிய மசோதா பற்றி ஆளும் கூட்டணியின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாட்டை நஜிப் வெளிப்படுத்தவில்லை.

பாரிசான் கூட்டணி தலைவர்களின் கூட்டத்திற்குப் பின்னர், மசீச தலைவர் லியாவ் தியோங் லாய் விடுத்த ஓர் அறிக்கையில் இந்த விவகாரம் குறித்து நஜிப் அடுத்த நாளே ஓர் அறிக்கையை வெளியிடுவார் என்று கூறியிருந்தார்.

பிரதமர் நஜிப் அறிக்கையை வெளியிடுவதில் ஏன் தாமதம் என்பது குறித்து இரு ஊகங்கள் தோன்றியுள்ளன. ஒன்று, ஹுடுட் சம்பந்தப்பட்ட தகராற்றில் எதிரணி உடைந்து சிதறுவதை எதிர்பார்த்து நஜிப் காத்திருக்கிறார். மற்றொன்று, பாரிசான் கூட்டணி இந்த விவகாரத்தில் ஓர் உடன்பாட்டை காண இயலாத நிலை.

இதனிடையே, இந்த ஹூடுட் பற்றிய தடுமாற்றம் எதிரணியின் அழிவுக்கு இட்டுச் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார் நஸ்ரி.