விடுவிக்கப்பட்ட காணிகளில் மீண்டும் படை முகாம்கள் – சுரேஸ் எம்.பி குற்றச்சாட்டு

Suresh-Premachandran_1சிறிலங்கா அரசாங்கம் வலி.வடக்கில் விடுவித்ததாக அறிவித்த காணிகளில் இராணுவத்தினர் மீண்டும் முகாம்களை அமைப்பதாக குற்றம் சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன், இந்த செயற்பாடு உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். வலிகாமம் வடக்கு பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளை பார்வையிடுவதற்காக நேற்று வியாழக்கிழமை அங்கு சென்ற பிறேமச்சந்திரன், அங்கு வந்திருந்த மக்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து அங்கு குறிப்பிடுகையில்:-

வலிகாமம் வடக்கு பகுதியில் மக்களிண் காணிகள் அரசு அறித்ததைப் போன்று முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இருப்பினும் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட குறிப்பிட்ட அளவு காணிகளில் 100 ஏக்கர் நிலத்தில் இராணுவத்தினர் இரண்டு பாரிய முகாம்களை அமைத்து வருகின்றனர். இந்த இராணுவ முகாம்கள் அந்தப் பகுதிகளிலிருந்து அகற்றப்பட வேண்டும் அரசாங்கம் இந்த நிலப்பகுதி எல்லாவற்றையும் சேர்த்துத்தான் 1000 ஏக்கர் என குறிப்பிட்டிருந்தது.

எனவே இராணுவம் அங்கிருந்து வெளியேறினால் தான் மக்கள் அங்கு குடியேற முடியும் இப்போது இராணுவ முகாம் அமைந்துள்ள இடங்களுக்கு உரித்துடைய மக்கள் உரும்பிராயிலும், கோப்பாயிலும் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆகவே அந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கு அந்தப்பகுதிகள் விடுவிக்கப்படவேண்டும்.

இராணுவத்தினர் காணிகளை விடுவிக்கின்ற பொழுது தங்களது முகாம்களை, சோதனைச்சாவடிகளை வேறு இடங்களுக்கு மாற்றுகின்றபொழுது பாரிய வேலிகளை அமைக்கின்றனர் இவ்வாறு திட்டமிடாமல் அமைக்கப்படும் வேலிகளினால் மக்களுக்குச் சொந்தமான வீடுகள் ஒருபக்கமும் கிணறுகள் மலசலகூடங்கள் இன்னொரு பக்கமும் பிரிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் இந்த செயற்பாடுகளினால் மக்கள் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் குடியேற முடியாமல் உள்ளது மக்களின் வீடுகள்,தோட்டங்கள் என்பவற்றிற்கு குறுக்காக எந்தவித முன்யோசனையுமின்றி இராணுவத்தினர் வேலிகளை அமைத்து வருகின்றனர். ஆகவே அரசாங்கம் மக்களின் காணிகளை விடுவிக்கும் பொழுது இவ்வாறான விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் மக்களின் வீடுகள் விடுவிக்கப்படும் போது அவர்களுக்கான வீதிகள் மற்றும் ஏனைய வசதிகள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் இராணும் தான்தோன்றித்தனமாக வேலிகளை அமைக்கும் போது அங்கு மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்படுகின்றது.

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீதிகளை இராணுவம் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றது. பாதைகளை உள்ளடக்கி இராணும் வேலிகளை அமைக்கின்றது இதனால் மக்களுக்கு போக்குவரத்திற்கான பாதைகள் இல்லாத சூழல் இருக்கின்றது. எனவே நான் இந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கூடாக ஜனாதிபதி,பிரதமர் மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வது காணிகளை ஊடறுத்து வேலிகள் அமைக்கப்படும் பொழுது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படுகின்றனவா என்பதைப் பாருங்கள் வீதிகளை எந்தக் காரணமுமின்றி இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் விடாமல் மக்கள் பாவணைக்குத் திறந்துவிடுங்கள் என நாம் கேட்கின்றோம்.

அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட காணிகளில் தொடர்ந்தும் இராணுவம் நிலைகொண்டிருப்பதால் 200 வரையான குடும்கங்கள் தொடரந்தும் முகாம்களில் வாழ்ந்துவருகின்றனர் எனவே இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் மீள் குடியேற்ற அமைச்சர் இந்த விடயங்களை கவனத்திலெடுத்து மிகுதி நிலங்களையும் விடுவிக்கவேண்டும் என இந்த சந்தரப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

-http://www.sankathi24.com

TAGS: