ஹிண்ட்ராஃப் ஒப்பந்தம் – நஜிப்பை கவிழ்க்கும்!

1 hindrafஹிண்ட்ராஃப் இயக்கத்திற்கும் தேசிய முன்னணிக்கும் இடையே செய்து கொள்ளப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் மதிக்க வேண்டும் என்று ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் ஆலோசகர் என். கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஒரு விஷயம் தொடர்பாக அண்மையில் ‘டிவி-3’க்கு அளித்த நேர்காணலில், “ஆதாரம் என ஏதுமில்லை; இது தொடர்பாக நிழற்படம்கூட் ஒன்றுமில்லை; தவிர, ஆதாரப் பத்திரமோ அல்லது சாட்சியமோ என ஒன்றும் கிடையாது” என்றெல்லாம் அவர் அறுதியிட்டுச் சொன்னார்.

எந்த ஒன்றையும் நிரூபணம் செய்ய மேற்குறிப்பிட்ட ஏதாவதொன்று இருந்தால்தான் அது மெய்யென நம்பப்படும் என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏறக்குறைய ஈராண்டுகளுக்கு முன் தேசிய முன்னணிக்கும் ஹிண்ட்ராஃப் இயக்கத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், தேசிய முன்னணி(தே.மு.) சார்பில் கையொப்பம் இட்டவர் அதன் தேசியச் செயலாலர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான். கோலாலம்பூரில் இடம்பெற்ற இச்சம்பவத்தை நாடே அறியும். இதற்கு ஆதாரப் பத்திரம், நிழற்படம், சாட்சி என எல்லாமும் இருக்கின்றன. நஜிப் மறுக்க முடியாத உண்மை – அவரது சொந்த வார்த்தைகளால் அனைத்தும் உண்மை.

ganesanஅந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்ற முன்வரைவின்படி, இந்திய சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டவர்-களுக்கும் ஏழை மக்களுக்கும் 2013-2018-க்கு இடைப்பட்ட ஐந்தாண்டு காலத்தில்  உதவும் பொருட்டு உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தை அடுத்து முதல் எட்டு மாதங்களுக்கு தே.மு. அரசில் இடம் பெற்றதன்வழி ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவர் வேதமூர்த்தியும் ஒருங்கிணைந்து செயல்பட முனைந்தார். ஹிண்ட்ராஃப் குழுவினரும் முடிந்தவரை பாடுபட்டனர். ஆனாலும் நிர்வாக அடிப்படையில் அதிகாரமோ அல்லது நிதி ஒதுக்கீடோ வழங்கப்படவில்லை. இதனால் பரிதவிப்பு  நிலைக்கு ஆளான ஹிண்ட்ராஃப் இயக்கம், அமைச்சரவைக் குழுவிலிருந்து விலக நேர்ந்தது.

‘ஒரு மனிதரை கை குலுக்கி வரவேற்றுவிட்டு பின் அலட்சியம் புரிவதைப் போல’ நஜிப் அரசு செயல்பட்டதால், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நோக்கில் வேதமூர்த்தி 2014 பிப்ரவரி மாதத்தில் பதவியைத் துறந்தார். அதற்கடுத்தும் கடந்த 14 மாதங்களில் நஜிப் அரசு ஏதாவது செய்யுமா என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ‘இலவு காத்த கிளியைப் போல’ ஏமாந்ததுதான் மிச்சம்.  தே.மு. அரசு தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றும் என்று எதிர்பார்த்து காத்திருந்ததில் எந்தப் பயனும் இல்லை.

5 hindrafஇதன் தொடர்பில் தற்பொழுது நஜிப்பிற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஹிண்ட்ராஃப்-உடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்வழி கடந்த இரு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டிருக்கிறோம். சட்டப்படி செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து நஜிப் அலட்சியம் காட்டினால், அடுத்தகட்ட நடவடிக்கையை ஹிண்ட்ராஃப் இயக்கம் முழு வீச்சில் மேற்கொள்ளும்.

இதன் தொடர்பில் நஜிப்பிற்கு இரு வழிகள் உள்ளன. முதல் வழி, சட்டப்படியான இந்த ஒப்பந்தத்தில் அவர் உறுதியளித்தபடி இந்திய சமுதாயத்திற்குரிய கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டும்; அல்லது ஒப்பந்தத்தை மீறியதற்கும் அலட்சியம் புரிந்ததற்கும் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டி இருக்கும். அத்துடன், நஜிப் எங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அடுத்த(2016) நிதி ஆண்டில் அவர் நிறைவேற்ற இருக்கும் அம்சங்களைத் தெரிவிக்கும்படியும் கேட்டிருக்கிறோம்.

இதற்கு முன் இருந்த பிரதமர்களைவிட இப்போதைய பிரதமர் இந்திய சமுதாயத்திற்கு அதிகமாக செய்வதாக தற்பொழுது சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பதவியில் இருக்கும்பொழுது ஒருவரைப் புகழ்வதற்கென்று ஒரு சிலர் எப்பொழுதும் தயாராக் இருப்பார்கள். ஹிண்ட்ராஃப் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களைப் பற்றி தெரிந்த எவரும் அப்படி சொல்ல மாட்டார். மாறாக, இந்திய சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டும் நலிந்த நிலையிலும் இருக்கும் தமிழர்களுக்கு ஆற்ற வேண்டிய சமூக-பொருளாதாரக் கடப்பாடுகள் நஜிப்பிற்கு நிறைய உள்ளன.

பிரதமர் என்ற முறையிலும் நாட்டுத் தலைவர் என்ற வகையிலும் நடுநிலையை நிலைநாட்டும் வல்லமையை பிரதமர் நிரூபிக்க வேண்டும் என்றும் ஹிண்ட்ராஃப்- உடனான ஒப்பந்தத்தை மதித்து நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதாக கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.