இன்னொரு முன்னாள் அமைச்சரும் அம்னோவை எச்சரிக்கிறார்

raisசக முன்னாள்  அமைச்சர்களான  சைட்  ஹமிட் அல்பார், சைனுடின்  மைடின்  ஆகியோரைப்  பின்பற்றி  முன்னாள்  தகவல்  அமைச்சர்  ரயிஸ்  யாத்திமும்  அம்னோவில்  மாற்றம்  தேவை  என்று  எச்சரிக்கை  மணி  அடித்துள்ளார்.

விவகாரங்கள்  பற்றி  விளக்களித்து  பொதுமக்களின்  அதிருப்தியை அடக்கி விடலாம்  என்ற  அம்னோவின்  பாரம்பரிய  அணுகுமுறை  இப்போது  எடுபடாது  என  ரயிஸ்  நேற்று  அஸ்ட்ரோ  அவானியிடம்  தெரிவித்தார்.

“அரசாங்கத்தின்  விளக்கமளிப்புகளால்  பிரச்னைகளை அடக்க  முடிவதில்லை, ஏனென்றால்  விளக்கமளிப்பு  பெரும்பாலோருக்கு  திருப்தி  அளிப்பதில்லை.

“2,000-த்துக்கு  மேற்பட்ட  தகவல்துறை  அதிகாரிகளுக்கு   முன்னர்  இருந்ததுபோன்று விளக்கமளிப்புப்  பணிகள்  இப்போது  இல்லை.

“அலுவலகத்தில்  அமர்ந்து  செய்தித்தாள்கள்  படிப்பது  அல்லது  அவ்வப்போது ‘விஐபி-கள்’ பேசுவதற்கு  நிகழ்ச்சிகளை  ஏற்பாடு  செய்வதுதான்  அவர்களின்  இப்போதைய  பணி”, என்றாரவர்.

கட்சித்  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அவரின்  நிர்வாக  முறையைச்  சீர்படுத்திக்  கொள்ள  வேண்டும்  என்றும் அம்னோவின்  மூத்த உறுப்பினர்களில்  ஒருவரான  ரயிஸ் அறிவுறுத்தினார்.

“நஜிப்பைச்  சுற்றி  இருப்பவர்களால்கூட  அவருக்கு  உதவ  முடிவதில்லை. ஒரு  உதவித்  தலைவரும்கூட  மாற்றம்  வேண்டும்  என்று  கூறியுள்ளார்”.

அம்னோ  உதவித்  தலைவர்  முகம்மட்  ஷாபி  அப்டால்,  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகமட்டின் கேள்விகளுக்கு  நஜிப்  முறையான பதிலளிக்க  வேண்டும்  என்று  வலியுறுத்தியிருப்பதைத்தான்  ரயிஸ்  சுட்டிக்காண்பிக்கிறார்.