ஆர்ப்பாட்டம் நடக்கும் என்ற மிரட்டலைத் தொடர்ந்து குளுவாங் கூட்டம் இரத்து

kluangகுளுவாங்கில் நேற்றிரவு  நடைபெறவிருந்த பொருள்  சேவை  வரி  மற்றும்  இன  அரசியலுக்கு எதிரான  கருத்தரங்கு நடைபெறவில்லை. கருத்தரங்கு  நடைபெறவிருந்த  உணவகம்  மூடப்பட்டிருந்தது.

உணவகம்  மூடப்பட்டிருந்ததற்குக் காரணம்  தெரியவில்லை. ஆனால், அம்னோ  இளைஞர்கள்  அக்கருத்தரங்கு “இனவாதமிக்கது”  என்று  கூறி  அது  நடந்தால்  அதற்கெதிராக  ஆர்ப்பாட்டம்  செய்யப்போவதாக    எச்சரித்திருந்தனர்..

கருத்தரங்கு  பேச்சாளர்கள் இரவு  மணி  8.15க்கு  ரெஸ்டோரன் தெபி  சுங்கை  ஜமிலா-வுக்குச்  சென்றபோது  அது  பூட்டிக் கிடந்தததாக  நிகழ்ச்சி  ஏற்பாடு  செய்திருந்த LayPark@Kluang இளைஞர்  அமைப்பின்  பிரதிநிதி   ஷேக்  ஒமார்  அலி  கூறினார்.

“சுமார் 60, 70 பேர்  அங்கு  இருந்தனர். பாதிப்பேர்  எங்களின்  ஆதரவாளர்கள். மீதிப்  பேர் அம்னோ  உறுப்பினர்களும்  போலீசாரும்  ஆவர்”, என்றார்.

சுமார் 30 பேர்  அம்னோ இளைஞர்களாகத்தான்  இருக்க வேண்டும். அவர்கள்  “ஏற்பாட்டாளர்களைப்  பார்த்த  பார்வை”  அப்படித்தான்  நினைக்க  வைத்தது  என்றாரவர்.

ஆர்ப்பாட்டத்தின்போது  அங்கிருக்கப் போவதாகக்  கூறிய  ஜோகூர்  அம்னோ இளைஞர்  உதவித்  தலைவர்  கைருல்  அன்வார்  ரஹ்மாட்-டை  அங்கு  காணவில்லை.

“அவர்  இனவாதத்துக்கு  எதிராக   ஆர்ப்பாட்டம்  செய்யப்போவதாகக்  கூறிக்  கொண்டிருந்தார்.   கருத்தரங்கின் தலைப்பே  ‘ஜிஎஸ்டி  மற்றும்  இன அரசியலுக்கு  எதிர்ப்பு’  என்பதுதான். எனவே, அவர்  எங்களுடன்  சேர்ந்திருக்க  வேண்டுமே  தவிர, தடுத்திருக்கக்  கூடாது”, என  ஜோகூர் பாஸ் இளைஞர்  பிரிவு  உறுப்பினரான  ஷேக்  ஒமார்  கூறினார்.

நான்கு  டிஏபி  பேச்சாளர்கள்  அந்நிகழ்வில்  பேசுவதாக  இருந்தது.