காணாமல்போன சம்பவங்களுக்கு படையினரும் விடுதலைப் புலிகளுமே பொறுப்பு: ஜனாதிபதி ஆணைக்குழு

kanamalpona_uravukal_001இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமல்போன சம்பவங்களுக்கு இலங்கை படையினர், விடுதலைப் புலிகள் உட்பட குறைந்தது 4 வித்தியாசமான குழுக்கள் பொறுப்புக்கூற வேண்டும் என விசாரணை ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் காணாமல்போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை வழங்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையை நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதியான மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்த விசாரணைக் குழுவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமித்திருந்தார்.

இந்த பிரச்சினை தொடர்பாக நம்பிக்கையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழர் தரப்பு வலியுறுத்தி வந்தன.

வடக்கில் காணாமல் போன சம்பவங்களுக்கு பாதுகாப்பு படையினர் 30 வீதம் பொறுப்புக் கூறவேண்டும் எனவும் பலவந்தமாக காணாமல் போக செய்யப்பட்டமைக்கு விடுதலைப் புலிகள் 60 வீதம் பொறுப்புக் கூறவேண்டும் எனவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காணாமல் போனமை தொடர்பான மீதமுள்ள 10 வீதத்திற்கு ஆயுதக்குழுக்களும் ஏனைய அடையாளம் தெரியாத குழுக்களுமே பொறுப்பு எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு மாவட்டங்கள் தோறும் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் மாவட்டத்திற்கு மாவட்டம் பொறுப்புக் கூறவேண்டிய தரப்பு மாறுப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 16 ஆயிரத்து 153 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இவற்றில் 5 ஆயிரத்து 200 முறைப்பாடுகள் பாதுகாப்பு படைகளை சேர்ந்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து கிடைத்திருந்தன.

அத்துடன் வாய்மொழி மூலமாக ஆணைக்குழு சுமார் ஆயிரத்து 440 முறைப்பாடுகளை பெற்றிருந்தது.

அதேவேளை பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட காணாமல் போக செய்தல் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு சட்ட மா அதிபருக்கு அறிக்கையிட்டுள்ளது.

இதேவேளை கடந்த வருடம் வடக்கில் மேற்கொண்ட விசாரணையின் போது ஆணைக்குழு முன் பிரசன்னமாகியிருந்த மக்களிடம் உங்கள் வீட்டில் ஆடு இருக்கிறதா,மாடு இருக்கிறதா என்று கேட்டதோடு, காணாமல் போன தமது பிள்ளைகளுக்கு எந்தவிதமான தீர்வை பெற்றுத்தருவதான வாக்குறுதிகளை இந்த ஆணைக்குழு வழங்கவில்லை என்று மக்கள் விசனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே 60 வீதமான காணாமல் போகச்செய்யப்பட்டதற்கு புலிகள் பொறுப்புக்கூறவேண்டும் என ஜனாதிபதியிடம் கையளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் புலிகள் அழிக்கப்பட்டுள்ள இந்நிலையில் யாரிடம் போய் கேள்வி கேட்பது என அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புவதோடு,புலிகள் மீது பழியை சுமத்திவிட்டு அரசாங்கம் இந்த விடையத்தை மூடி மறைக்க பார்க்கின்றது எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

நாட்டில் நடந்த வெள்ளை வான் கடத்தலுக்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு தொடர்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்கமாக தெரிவித்திருந்ததுடன் அது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடும் செய்திருந்தார்.கோத்தபாய ராஜபக்சவே வெள்ளை வான் கடத்தல் கலாச்சாரத்தின் பிதாமகன் என மேர்வின் சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: