மேகமலை புலிகள் காப்பகமாக மாற்றப்படுமா

megamalaiதேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயத்தில் புலிகள் உள்ளதாக வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதை காப்பகமாக மாற்றினால் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழகம், கேரளா எல்லையில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பெரியாறு புலிகள் காப்பகம் உலகின் சிறந்த வனப்பகுதியாக உள்ளது. அதையொட்டிய மேகமலை வன உயிரின சரணாலயம் 212 சதுரகி.மீ., பரப்பில் உள்ளது. இங்கும் ஏராளமான உயிரினங்கள் உள்ளன. இங்கு புலிகள் வசிப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவை வசிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையும் அதற்கு உணவாக பயன்படும் வன விலங்குகளும் உள்ளன.

இதுகுறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: வன உயிரின சரணாலயத்திற்கு மத்திய, மாநில அரசுகள் குறைந்த நிதியுதவி வழங்குகின்றன. அதேவேளையில் புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டால் நிதியுதவி அதிகமாக கிடைக்கும். உலக வங்கி போன்ற அமைப்புகளும் தாராளமாக நிதியுதவி செய்ய முன்வரும். புலிகளின் எண்ணிக்கை உயரும் போது காடுகள் வளம் பெறும். அதற்கு ஏற்ப பல்லுயிர் பெருக்கம் ஏற்படும்.புலிகள் காப்பகமாக மாற்றப்படும் போது காட்டிற்குள் வசிப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை பெற்று கொடுக்க முடியும். உதாரணமாக பெரியாறு புலிகள் காப்பகம் அமைந்த வனத்தில் ஐந்து வகை பழங்குடியினர் வாழ்கின்றனர். அவர்கள் காடுகளை நம்பியிருந்தனர். விறகிற்காக மரங்களை வெட்டினர். 1996ல் பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு உலகவங்கி நிதி பெற்று, சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழங்குடியினருக்கு பல வசதிகள் செய்யப்பட்டன. அடர்ந்த வனப்பகுதியிலிருந்தவர்கள் வன எல்லை பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் மிளகு போன்றவைகளை பயிரிட்டு விற்று அதன் மூலம் வாழ்க்கை நடத்தவும் வழி செய்யப்பட்டது. அதுபோன்ற உதவிகளை மேகமலை பகுதியில் வசிப்பவர்களுக்கும் செய்ய முடியும் என்றனர்.

வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மேகமலையை புலிகள் காப்பகமாக அறிவிக்க வேண்டும். மக்கள் ஒத்துழைப்பின்றி காடுகளை காப்பாற்ற முடியாது. புலிகள் காப்பகமாக மாற்றும் போது காடுகள் காப்பாற்றப்படும். இதனால் நீர் வளம் ஏற்படும். சுற்றுலா வளர்ச்சியுறும் என்றார்.

-http://www.dinamalar.com

TAGS: