சாமிவேலு: ஏழைகள் மீது அனுதாபம் கொண்டவர் நஜிப்

 

samyfornajibதற்போது கடும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் பிரதமர் நஜிப்பை முன்னாள் மஇகா தலைவர் ச. சாமிவேலு தற்காத்துப் பேசினார். நஜிப் ஏழை மக்கள் மீது அனுதாபம் கொண்டவர் என்றாரவர்.

நஜிப் மக்களைச் சந்தித்து பேசுகிறவர், ஏனென்றால் அவர் நல்ல மனம் படைத்தவர் என்பதோடு “அவர் ஏழைகள் மீது அனுதாபம் கொண்டவர்” என்று சாமிவேலு இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

பிரதமரை சந்திப்பது சாத்தியமற்றது என்று மகாதிர் கூறிக்கொள்வது போலல்லாமல், நஜிப்பை சந்திப்பது மிகச் சுலபம் என்று அவர் மேலும் கூறினார்.

“நான் எனது அலைபேசியில் இப்போது பிரதரை அழைத்து ‘நான் உங்களை 6 மணிக்கு சந்திக்கலாமா?’ என்று கேட்டால் அவர் ‘உடனடியாக வாருங்கள்’ என்பார். அதுதான் நஜிப்”, என்று சாமிவேலு கூறினார்.

ஆகவே, பிரதமரை பகிரங்கமாக சாடுவதை விடுத்து, அவர் எழுப்பியுள்ள விவகாரங்கள் குறித்து நஜிப்புடன் தனிப்பட்ட முறையில் பேசுமாறு மகாதிரை அவர் கேட்டுக்கொண்டார்.

ஏதாவது பிரச்சனை இருந்தால் அவரை நேரடியாக சந்தித்து பேச வேண்டும். ஒருவருக்கொருவரை தாக்கிக்கொள்ளக் கூடாது.

“இது பாரிசானை மட்டும் பலவீனப்படுத்தாது. இது அனைவரையும், அம்னோ, எம்சிஎ, மஇகா உட்பட, பலவீனப்படுத்தும்.

“மகாதிர் மிக மூத்த தலைவர். அவரை நாம் அனைவரும் மிக மதிக்கிறோம். அவர் பகிரங்க அறிக்கைகள் விடுவதை விட மக்களுடன் பேச வேண்டும்”, என்று சாமிவேலு கூறினார்.

மக்களுக்காக நஜிப் செய்துள்ளதை மலேசியர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று மலேசியர்களை வலியுறுத்திய சாமிவேலு, நாட்டின் நலன் கருதி நஜிப்பின் தவறுகளை மறந்து விட வேண்டும் என்றார்.

ஒவ்வொரு மனிதரும் இங்கும் அங்குமாக தவறுகள் செய்வதுண்டு. அதனை மறந்து விட்டு செய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்து நாட்டை வழிநடத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் இரு தரப்பினரும் 50-50 என்ற நிலையில் தற்போது இருப்பதாக சாமிவேலு கூறினார்.

கடுமையாக உழைத்தால், வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது என்றாரவர்.