நேப்பாள நிலநடுக்கத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய மலேசியர்

nepalசனிக்கிழமை  நேப்பாளத்தை  நில  நடுக்கம் தாக்கியபோது ஒரு விற்பனை  நிர்வாகியான  லோய்  யுன்  கிங், ஒரு கட்டிடத்தின்  இடிபாடுகளில்  புதையுண்டு  மாண்டு  போயிருப்பார்-  அவர்  மட்டும்  விரைந்து  செயல்படாமல்  இருந்திருந்திருந்தால்.

லோயும்  அவரின்  நண்பரான  சீன நாட்டவர்  ஒருவரும்  ஒரு  சுற்றுலா  வழிகாட்டியுடன்  உணவகம்  ஒன்றில் பசியாறிக்  கொண்டிருந்தனர். பசியாறிவிட்டு  179 கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள  அன்னபூர்ணாவுக்கு  நடைப்பயணம்  செல்வது  அவர்களின்  திட்டம்.

“நான் கீழ்த்தளத்தில்  இருந்தேன். திடீரென்று  நிலம் பயங்கரகாக அதிர்வதை  உணர்ந்தோம். எல்லாரும் அலறியடித்துக்  கொண்டு ஓடினார்கள். நானும் ஓடினேன். ஓடும்போது  அருகிலிருந்த  கட்டிடங்கள் எல்லாம்  இடிந்து  விழும்  பலத்த  சத்தம் கேட்டது.

“உடைந்து  நொறுங்கிய  சிறுசிறு  கற்களும்  கண்ணாடித்  துண்டுகளும்  வானத்திலிருந்து விழுந்தன. பதறியோடும்  கூட்டத்துடன் நானும்  தட்டுத்தடுமாறி  ஒரு  வெட்டவெளியை  அடைந்தேன்”, என்று  லோய்  பெர்னாமாவிடம்  தெரிவித்தார்.

அங்கு  சென்ற  பிறகுதான்  திரும்பிப்  பார்த்தார். அங்கிருந்த  கட்டிடங்களில்  ஒன்றுகூட  மிஞ்சவில்லை. எல்லாம்  நொடியில்  தரைமட்டமாகி  இருந்தன.

நில  நடுக்கம்  ஓய்ந்த  பின்னர் லோய்  உணவகம்  இருந்த இடத்துக்குச்  சென்று  பார்த்தார். உணவகம்  இடிந்து  கிடந்தது. இடிபாடுகளுக்கிடையில்  கடப்பிதழ்  உள்ளிட்ட  தம்  உடமைகள் அப்படியே  இருப்பதைப்  பார்த்தார். எடுத்துக்  கொண்டு  திரும்பினார்.