முகைதின்: தொகுதிகளைக் கவனிக்க வான் அசிசாவுக்கு நேரமிருக்குமா?

muhபிகேஆர் தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில், அரிதாகவே  காஜாங்  செல்கிறார். இவ்வளவுக்கும் அவர்தான்  காஜாங்கில்  சட்டமன்ற  உறுப்பினர்.

அதற்கே  நேரமில்லாத  அவருக்கு பெர்மாத்தாங்  பாவ்  தொகுதி  மக்களின்  நலனையும்  கவனித்துக்கொள்ள  நேரமிருக்குமா?

இன்று பெர்மாத்தாங்  பாவில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  இக்கேள்வியை  முன்வைத்த  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  மக்கள்  ஒரு  முழு-நேர  எம்பி-யையே  விரும்புகிறார்கள்  என்றார்.

“காஜாங்கையும் கவனித்துக்  கொள்ளும்  ஒரு  பிரதிநிதியை,  மாதத்துக்கு  ஒரு  முறை  மட்டுமே  வந்துபோகும்  ஒருவரை  விரும்புகிறார்களா  என்பதை  இங்குள்ள  மக்களிடம்  நீங்களே கேட்டுப்  பாருங்கள்”, என்றவர்  கூறினார்.

காஜாங்கை  நிர்வகிப்பதில் சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி  உதவுவதாக  வான்  அசிசா  அறிக்கை  விட்டிருப்பது  பற்றிக்  கருத்துரைத்த  முகைதின்  அப்படியென்றால்  அவர்  காஜாங்கில்  போட்டியிடாமல்  இருந்திருக்கலாமே  என்றார்.

“அஸ்மின்  அலி  காஜாங்கைக்  கவனித்துக்  கொள்கிறார்  என்றால் அங்கு  சட்டமன்ற  உறுப்பினர்  இல்லை  என்றுதானே அர்த்தம்”, என்று  முகைதின்  வினவினார்.